யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானம்

Published By: Nanthini

05 Mar, 2023 | 08:00 PM
image

யாழ் மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (5) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சொலமன் சிறிலின் வெற்றிக்காக சகல கட்சிகளிடமும் ஆதரவு கோர தீர்மானித்துள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரை தெரிவுசெய்யும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முதலாவது சமர்ப்பிப்பை கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முன்னெடுத்திருந்தார். 

அந்த பட்ஜெட் சமர்ப்பிப்பானது உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கப்பட்டது. 

அதன் பின்னர், பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பிலும் ஆனோல்ட் சமர்ப்பித்த பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அவர்  பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் 18ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, மேலும் ஒரு வருட கால அடிப்படையில் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தன. 

இந்த நீடிப்பின்படி, எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை சபை நடவடிக்கைகளை கொண்டு நடத்துவதற்காக புதிய முதல்வர் ஒருவரை தெரிவுசெய்வதற்காகவே தேர்தல் நடத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்