மற்றொரு போராட்டம் சாத்தியமா?

Published By: Vishnu

05 Mar, 2023 | 03:49 PM
image

சத்ரியன்

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரம் பெறுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

40 தொழிற்சங்கங்கள், ஒரு முன்னோடி வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை நடத்திய பின்னர், பெரியளவிலான வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று நடக்கவிருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இன்னொரு பக்கம், இப்படிப்பட்ட போராட்டங்களால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் செய்ய முடியாது என்றும், ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார்.

கடந்த புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட முன்னோடி வேலைநிறுத்தப் போராட்டம், வெற்றி பெற்றதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்ற நிலையில், அரச ஆதரவு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அதனை மறுத்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் எழுச்சி பெறுவதற்கும், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தங்களின் இலக்கை எட்டுவதற்கும், தற்போதைய சூழல் சாதகமான ஒன்று தான்.

மாற்றங்களை ஏற்படுத்தும் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலை, அந்த தேர்தலுக்கு நிதியில்லை என்று அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த சூழல், விலை வாசி அதிகரிப்பு, வரிகள், கட்டணங்கள், அதிகரிப்பு என்று, பொதுமக்கள் திணறிக் கொண்டிருக்கின்ற இத்தகைய சூழல், அரச எதிர்ப்புப் போராட்டங்களை அரசியல் ரீதியாக கொண்டு செல்வதற்கு உகந்த நேரம் தான்.

ஆனால் இந்தப் போராட்டங்கள் அரசாங்கத்தை அசைக்கும் அளவுக்குப் பலமானதாக இருக்காது என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து.

இவ்வாறான போராட்டங்களால் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை- கொள்கையை மாற்றியமைக்கும் திட்டமும் அவரிடம் இல்லை.

கடந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கி, சரியாக ஒரு வருடம் ஆகியிருக்கிறது.

சில மாதங்கள் தான் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், அரசியல்கட்சிகள், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

அரகலய போராட்டம் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான முடிவுகள் தான்.

அவர், அத்தகைய முடிவுகளை எடுக்கும் வகையில், தவறான ஆலோசனைகள் கூறப்பட்டன. அவர், மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களையும் கேட்கவில்லை.

புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக கருதி, அவர் எடுத்த முடிவுகள், நாட்டை பஞ்சம், பசி, பட்டினி, வறுமைக்குள் தள்ளியது.

சாதாரண மக்களை மாத்திரமன்றி, முழு நாட்டையுமே பிச்சைப் பாத்திரத்துடன், கடனாளியாக அலையும் நிலையை உருவாக்கியது.

அந்த நிலை தான், போராட்டத்தை வெற்றி பெற வைத்தது. ஆனால் தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு போராட்டம் நடக்க வாய்ப்பில்லை என்பது ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையாக உள்ளது.

முதலாவதாக, அரகலய போராட்டமும், அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், அது ஏற்படுத்திய விளைவுகளும், கவனத்தில் கொள்ளப்படுகிறது.

இரண்டாவதாக, தற்போதைய சூழ்நிலையும், போராட்டத்துக்கான ஏது நிலையும் அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது.

அரகலய போராட்டம், இலங்கை எதிர்கொண்ட மிகப்பெரிய அரச எதிர்ப்புப் போராட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அந்தக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகளும், பிரச்சினைகளும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தது என்பதும் சந்தேகமில்லை.

ஆனால் அப்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள், நெருக்கடிகளின் அளவுக்கு, அரகலய போராட்டம், மிகப் பிரமாண்டமான ஒன்று எனக் கூறமுடியாது.

அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றியிருந்தவர்கள் அவரை தவறாக வழிநடத்தினர், சரியாக வழிநடத்தக் கூடியவர்களை அவர், ஒதுக்கி வைத்திருந்தார்.

இது ராஜபக்ஷ குடும்பத்துக்கு பேரிழப்பாக மாறியது.

உண்மையில் அரகலய போராட்டம், நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற ஒன்று அல்ல. அப்போது வடக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் இடம்பெறவில்லை.

கிழக்கிலும் கூட பெரியளவில் போராட்டங்கள் நடக்கவில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளில் கூட, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், அரச எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் நடத்தப்பட்ட போராட்டங்கள் பெரியளவிலான பிரசாரமாக கொண்டு செல்லப்பட்டது. அது உலகளாவிய கவனத்தை ஏற்படுத்தியதுடன் மாத்திரமன்றி, அரசாங்கத்தையும் ஆட்டம் காண வைத்தது.

ஆட்சி பறிபோன பின்னர் தான், பொது ஜன பெரமுனவினருக்கும், ராஜபக்ஷவினருக்கு உண்மையான படம் விளங்கியிருக்கிறது.

அரகலய போராட்டம் வெற்றிபெற்ற இடமும், தாங்கள் தோல்வியடைந்த இடமும் எது என்பது தெரியவந்திருக்கிறது.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் ஆக்கும் முயற்சிகள் நடப்பதாக வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது அளித்த பதில் ஆச்சரியமானது.

நான் பதவி விலகியிருக்கத் தேவையில்லை, என்று அவர் இப்போது கூறியிருந்தார். கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தான் போராட்டம் பிரதானமாக நடந்து கொண்டிருந்தது. ‘மைனா கோ கம’ போராட்டம் நடந்த போதும், அது ‘கோட்டா கோ கம’ போராட்டம் போல பெரியளவிலானதாக இருக்கவில்லை.

ஆனால், மே 9 இல் அலரி மாளிகையில் இருந்து தூண்டி விடப்பட்ட வன்முறைகள், கடைசியில் மஹிந்தவின் பதவிக்கு ஆப்பு வைப்பதாக அமைந்தது.

பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொண்டால், போராட்டம் நின்று விடும் என்று அவர் ஏன் கருதினார் என்பது மர்மம். அவ்வாறு அவருக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்றும் தெரியவில்லை.

கோட்டாவை வெளியேற்றும் போராட்டம், மஹிந்தவின் வெளியேற்றத்துடன் நிற்கும் என்ற தவறான கணிப்புத் தான் மஹிந்தவின் பதவி விலகல்.

அதனை தவறான முடிவாக அவர்கள் இப்போது உணர்கிறார்கள்.

அதுபோலவே, அரகலய போராட்டத்தை முழு நாடும் முன்னெடுக்கவில்லை என்றும், புலனாய்வுத் தகவல்களின் மூலம், சுமார் இரண்டு இலட்சம் போரின் போராட்டம் தான் அது என்றும் மொட்டு எம்.பிக்கள் சிலர் பின்னர் கூறியதும் நினைவிருக்கலாம். 

அந்த எண்ணிக்கை சரியோ தவறோ- அந்தக் கருத்து சரியானது. முழு நாடும் அரசாங்கத்தை வெறுத்தது உண்மை. ஆனால், முழுநாடும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தவில்லை.

மக்கள் அன்றைய நெருக்கடியில் போராட்டங்களைப் பற்றி சிந்திக்கவோ, ஈடுபடவோ நேரம் இருக்கவில்லை. அவர்களுக்கு அப்போது தேவைப்பட்டது, ஒன்றோ இரண்டோ நேரம் குடிப்பதற்கு கஞ்சியும், எரிபொருளும், எரிவாயுவும் தான்.

அதற்காக அலைந்து கொண்டிருந்த பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் கவனம் செலுத்தவில்லை. இது அரசாங்கத்துக்கு சாதகமாக காணப்பட்ட நிலை. 

அதனை அரசாங்கம் தவறாக கையாளப் போய், எல்லாமே தவறாக அமைந்து விட்டது. 

இந்தப் பாடத்தை ரணில் விக்ரமசிங்க கற்றுக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு காணப்பட்டளவுக்கு நெருக்கடியை மக்கள் இப்போது எதிர்கொள்ளவில்லை.

அவர்களுக்கு விலை அதிகமாகவென்றாலும் எரிவாயுவும் எரிபொருளும் கிடைக்கிறது. ஓரளவுக்கு உணவுப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. 

இவ்வாறான நிலையில் போராட்டங்களைப் பெரியளவில் முன்னெடுக்க முடியாது, அதனை வைத்து ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.

அவர், அரகலய போராட்டத்தின் பலம், பலவீனம் என்பனவற்றைக் கவனத்தில் கொண்டு தான், இந்த ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், போராட்டத்தின் ஊடாக மாற்றங்களை நடத்த முயன்றாலும், அதனை இலகுவாக செய்ய முடியாது.

ஏனென்றால், ரணில் எதிரிகளுடன் நேரடியாக மோதுபவர் இல்லை. குறுக்கு வழியில், அவர்களைப் பலவீனப்படுத்தி, தன்னுடன் மோத முடியாத நிலையை உருவாக்குபவர் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04