2023 மார்ச் மாத ராசி பலன்கள்

Published By: Nanthini

05 Mar, 2023 | 12:56 PM
image

மேஷம்

விரும்பியவற்றை தெரிவு செய்துகொள்ளும் மேஷ ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் ராசிநாதனும் சுகஸ்தானாதிபதி சந்திரன் உச்சம் பெற்று அமைவதும், பஞ்சமாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பஞ்சம ஸ்தானத்தை பார்வையிடுவதால் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் நல்ல பலனை பெற்றுத் தரும்.

விரைய குருவால் சில செலவுகள் வந்தாலும், அதனை உங்களின் ராசிநாதன் மூலம் சரிசெய்துகொள்வீர்கள். தடைப்பட்ட பல காரியங்கள் செயற்பட தொடங்கும்.

இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான், இனி லாபஸ்தானத்தில் இம்மாத இறுதியில் அமர்வதால், நீங்கள் நினைத்ததை அடைய நல்ல வாய்ப்பாக அமையும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். எதையும் முன்கூட்டியே தீர்மானித்து, காரியங்களை விரைவுபடுத்தி செயற்படுவீர்கள். பொருளாதாரம் தன்னிறைவு பெறும்.

சந்திராஷ்டம நாட்கள்: 12.03.2023 ஞாயிறு இரவு 12.30 முதல் 15.03.2023 புதன் அதிகாலை 4.35 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்சு, வெள்ளை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு நெய் தீபமும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபமும் ஏற்றி வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும்.

ரிஷபம்

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று விரும்பும் ரிஷப ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் ராசிநாதனுடன், குரு ஆட்சி பெற்றிருப்பதும், ராசியில் மூன்றாமிடத்து அதிபதி உச்சம் பெற்றிருப்பதும் உங்களின் தொழில் ஸ்தானத்தில் சூரியன் பலம் பெற்றிருப்பதும் தனாதிபதியுடன் இணைவு பெற்றிருப்பதும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

எதிர்கால திட்டங்களின் முன் முயற்சிகளும் உங்களை ஊக்கப்படுத்தும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை நீங்கி, சுபீட்சம் பெறுவீர்கள்.

சில நற்காரியங்களில் உங்களின் செயற்பாடுகள் காணப்படுவதால் நன்மை பெறுவீர்கள். அரசியலிலும் ஆன்மீகத்திலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வளம் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து, தேர்வில் நல்ல பெறுபேறு பெறுவார்கள். பெண்களின் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: 15.03.2023 புதன் அதிகாலை 4.36 முதல் 17.03.2023 வெள்ளி காலை 7.20 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு நிற துணி கட்டி, சிவப்பு பூ வைத்து நெய் தீபமிட்டு வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

மிதுனம்

புண்ணியமான காரியங்களில் ஈடுபாடு கொண்ட மிதுன ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் ராசிநாதனும் முயற்சி ஸ்தானாதிபதியும் அமர்ந்தும் தொழில் ஸ்தானத்தில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று தன ஸ்தானத்தை பார்வையிடுவதும் உங்களின் தொழிலில் முன்னேற்றத்தை தரும்.

எதையும் திட்டமிட்டு செய்யும் யுக்தியை கையாண்டு விரைவாக செய்து முடிப்பீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் உங்களை நல்ல வழியில் வழிநடத்திச் செல்வார். ஆக்கபூர்வமான பணியில் சிறப்பாக செயல்பட்டு நன்மையை அடைவீர்கள். கலைத்துறையினர் சிறப்பாக முன்னேற்றம் பெறுவீர்கள். வருமானத்தை பெருக்கிக்கொள்ள உங்களின் எதிர்கால திட்டத்தை செயற்படுத்த தொடங்குவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 17.03.2023 வெள்ளி காலை 7.21 முதல் 19.03.2023 ஞாயிறு காலை 9.39 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் விநாயகர் வழிபாடு சிறந்தது. தேங்காய் எண்ணெய் தீபமிட்டு அவல், பொரி, கடலை வைத்து வேண்டிக்கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் பலனளிக்கும்.

கடகம்

காலத்தை கணக்கிட்டு எதையும் செய்து வரும் கடக ராசி வாசகர்களே,

இம்மாதத்துடன் உங்களின் ராசிக்கு கண்டக சனி முடிகிறது. குரு பார்வை பெறுவதும், உங்களின் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களின் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதும், உங்களின் யோகாதிபதியுடன் இணைந்திருப்பதும் மேன்மை தரும். தொழிலில் புதிய முயற்சிகளை கைவிட்டு, எதிர்காலத்தின் நலன் கருதி இருக்கும் தொழிலில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

ஆசை வார்த்தைகளை நம்பி நீங்கள் செய்யும் முதலீடு, உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். அடுத்தவருக்கு பிணையமிடுவதை தவிர்க்கவும். அரசியலில் தள்ளி நின்று ஆலோசனை சொல்வது நல்லது. எதையும் முன்னின்று செய்தால் சில சங்கடங்கள் வந்து சேரும். வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது. மிதமான பொருளாதார நிலை நீடிக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 19.03.2023 ஞாயிறு காலை 9.40 முதல் 21.03.2023 செவ்வாய் பகல் 12.27 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஒரெஞ்சு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30-06.00 மணிக்குள் நவகிரக வழிபாட்டோடு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள நினைத்த காரியம் சீக்கிரம் நடக்கும்.

சிம்மம்

நேர்மையுடனும் உண்மையுடனும் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும், தனாதிபதி புதன் பார்வையும் பெறுவதும், ஆறாமிட சனி பார்வை உங்களின் மூன்றாமிடத்தில் பதிவதும் தொழிலில் முன் முயற்சிகளில் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியலில் தன்னிகர் இல்லாத செயல்களை செய்தும், உறுதியான செயல்பாடுகளை செய்தும் வளம் பெறுவீர்கள். குரு பார்வை தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும் பார்ப்பதும் வருமானத்தில் தன்னிறைவை பெற்றுத் தரும். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செலவுகளை குறைத்துக்கொள்வீர்கள். எதிலும் ஏமாற்றமின்றி நன்மைகளை பெறுவீர்கள்.

இம்மாத இறுதியில் சனி பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பதால், உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசியலில் உங்களுக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 21.03.2023 செவ்வாய் பகல் 12.28 முதல் 23.03.2023 வியாழன் மாலை 04.35 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, ஒரெஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை நவகிரக குருவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, நெய் தீபமிட்டு, மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக்கொள்ள உங்களின் வாழ்க்கையில் எல்லாம் சுபமாக அமையும்.

கன்னி

எதை செய்தாலும் நன்கு ஆலோசித்துச் செயற்படும் கன்னி ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் தனாதிபதி சுக்கிரன் உச்ச பார்வை பெறுவதும் உங்களின் சுறுசுறுப்பான பணியில் திறம்பட செயல்பட்டு நன்மை பெறச்செய்யும்.

குடும்ப பாரத்தை இறக்கி வைத்து வெற்றிப் பாதையில் பயணம் செய்வீர்கள். முக்கியமான சில விடயங்களில் நன்கு ஆலோசனை செய்த பின்பு செயற்படுவீர்கள். உடன் பிறந்த சகோதரர்களின் மூலம் சிலருக்கு நன்மையும் நடக்கும்.

முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சிறந்த கலைஞர்களின் மத்தியில் நீங்களும்  அங்கீகாரத்தை பெறுவீர்கள். அரசியலிலும் உத்தியோகத்திலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும்.

பெண்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் நினைத்ததை சாதித்துக் காட்டி வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 23.03.2023 வியாழன் மாலை 04.36 முதல் 25.03.2023 சனிக்கிழமை இரவு 10.47 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெள்ளை.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 6-7 மணிக்குள் விநாயகர் வழிபாடு நல்லது. செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் செய்து தீபமேற்றி வேண்டிக்கொள்ள உங்களின் காரிய தடை நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.

துலாம்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்று உணர்ந்து செயல்படும் துலாம் ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி பகவான் பார்வை தவிர வேறு கிரக பார்வை இல்லை. ராகு ராசியை பார்ப்பதால் ஏதாவது தூண்டுதல்களால் சில சங்கடங்கள் வந்து சேரும். உங்களின் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக அமரும் சனியினால் பல துன்பங்களை பட்டாலும், உங்களின் யோகாதிபதி என்பதால் பெரும் துன்பம் ஏற்படாது. என்றாலும், இம்மாத இறுதியில் உங்களின் பஞ்சம ஸ்தானத்துக்கு பெயர்ச்சி நன்மையை தரும்.

கடந்த கால கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். அதிகார வர்க்கத்தால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு தடைபட்டிருந்த பணிகளை மீண்டும் தொடரும் வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவீர்கள். அரசியலில் புதிய மாற்றம் உங்களுக்கு ஏற்படும்.

சந்திராஷ்டம நாட்கள்: 25.03.2023 சனிக்கிழமை இரவு 10.47 முதல் 28.03.2023 செவ்வாய் காலை 07.27 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம், ஒரெஞ்சு

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு அன்று மாலை 04.30 முதல் 06.00க்குள் நவகிரக வழிபாடு செய்து ஐந்து நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள அனைத்து காரியங்களிலும் நன்மையும், பொருளாதார வசதியையும் பெறுவீர்கள்.

விருச்சிகம்

நிரந்தரமான தொழில் செய்ய வேண்டுமென்று நினைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிககு ராசிநாதனுடன் யோகாதிபதி சந்திரன் உச்சம் பெற்று ராசியை பார்ப்பதும், குரு பார்வை ராசிக்கு இருப்பதும் உங்களின் அனைத்து காரியங்களிலும் நற்பலனை பெற்றுத் தரும்.

உறுதியான முடிவெடுப்பதும், எதையும் செய்யும் முன்பு யோசித்து செய்வதும் உங்களின் வாழ்வில் மேன்மையடைய நல்ல காலமாக அமையும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் உங்களின் செயல்களில் கவனம் செலுத்தி, நற்பலன் பெறுவீர்கள்.

முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஒன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். அன்பு, ஆசை காட்டி இனிக்க பேசுபவர்களை நம்பாதீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு சரியான பாதையை காட்டும். பொருளாதாரம் வளம் பெறும்.

சந்திராஷ்டம நாட்கள்: 28.03.2023 செவ்வாய் காலை 07.28 முதல் 30.03.2023 வியாழன் மாலை 06.17 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்சு, வெள்ளை, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியர் வழிபாடு செய்து மனதில் பட்ட கவலைகளை மனதாற கூறி  விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சகல காரியங்களும் வெற்றியை தரும்.

தனுசு

வீரியமும் பராக்கிரமமும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு இதுவரை ஏழரை சனியில் பாத சனியாக இருந்து வந்த சனி பகவான் உங்களின் மூன்றாமிடத்தில் யோக சனியாக அமர்வதும் உங்களின் ராசிநாதன் நான்காமிடத்தின் அதிபதியாக இருப்பதால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் தொழிலில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். வளம் தரும்.

இதுவரை அனுபவித்து வந்த சகல கஷ்டங்களும் நீங்கி, மனமகிழ்ச்சியான வாழ்வை தொடங்குவீர்கள். அடுத்த மாதம் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் ராசியை குரு பார்ப்பது உங்களின் அடுத்த கட்ட முயற்சிக்கு நல்ல பலன் தரும் என்பதால், அதுவரை சிறு சிறு பிரச்சினைகளை சகித்துக்கொண்டு வாழ்க்கை நகர்த்தும்போது நன்மை அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 03.03.2023 வெள்ளி பகல் 11.13 முதல் 05.03.2023 ஞாயிறு இரவு 10.34 மணி வரையும். 30.03.2023 வியாழன் மாலை 06.18 முதல் 02.04.2023 ஞாயிறு அதிகாலை 06.00 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பலவர்ணம், வெள்ளை.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வழிபட்டு வேண்டிக்கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும்.

மகரம்

உன்னதமான செயல்களை செய்வதில் ஆர்வம் கொண்ட மகர ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் அட்டமாதிபதி சூரியன் இணைவு பெற்று தொழிலில் நல்ல வருமானத்தை பெற்று தருவார்கள். ராசிநாதன் ராசியில் இருந்தாலும் இம்மாத இறுதியில் பெயர்ச்சியாகி ஜென்ம சனி விலகி, நன்மைகளை பெறுவீர்கள்.

இதுவரை இனம் தெரியாத பல உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு, நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பொது விடயங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். கடந்த காலத்தில் விட்டுப்போன சில காரியங்களை செயல்படுத்துவீர்கள்.

இனி உங்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையை மாற்றியமைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் நன்றாக இருக்கும். உத்தியோகத்திலும் தொழிலிலும் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் செயல்படுத்தும்போது சிறப்பாக நடத்துவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 05.03.2023 ஞாயிறு இரவு 10.35 முதல் 08.03.2023 புதன் காலை 09.41 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வேண்டிக்கொள்ள உங்களின் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறி வளம் பெறுவீர்கள்.

கும்பம்

உறுதியான முடிவுகளை செயல்படுத்த விரும்பும் கும்ப ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பலம் பெற்று தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சுக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வையிடுவதும் உங்களின் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாகும்.

கடந்த கால பண விரயம், மருத்துவ செலவு, வீண் அலைச்சல், எதிரி தொல்லை, விரும்பாத வாழ்க்கை சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நற்பலன்களை பெறுவீர்கள். சாதிக்க நினைத்த எதையும் கடைசி வரை விடாமல் செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியலிலும் உத்தியோகத்திலும் நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்தை உருவாக்கிவிடுவீர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு உயரும். சுப விரைய செலவு செய்வதால் உங்களின் பொருளாதார வளம் சீராகும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து மேம்படுவீர்கள். பெண்களுக்கு வேண்டிய தேவை நிறைவேறும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 08.03.2023 புதன் காலை 09.42 முதல் 10.03.2023 வெள்ளி மாலை 06.20 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெள்ளை.

அதிர்ஷ்ட திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வருவதும் செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரை வழிபடுவதும் நன்மையை தரும். பொருளாதார வளமும் பெருகும்.

மீனம்

எல்லோருக்கு நல்லது நடக்க வேண்டுமென்று எண்ணி செயற்படும் மீன ராசி வாசகர்களே,

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்திருப்பதும் இந்த மாதம் கடைசி வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழிலிலும் உத்தியோகத்திலும் நற்பலன்களை பெற்று தரும்.

எதையும் சரியான நேரத்தில், சரியான காலத்தில் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். காரணமின்றி எதையும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளமாட்டீர்கள். உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பது உங்களின் மனதுக்கு தைரியத்தையும், தொழிலில், உங்களின் செயலில் வெற்றியை பெற்றுத் தரும்.

கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உங்களின் நல்வாழ்வுக்கு வழிதேடிக்கொள்வீர்கள். கலைத்துறையினர் வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். நிழற்பட விளம்பரங்களில் நல்ல இலாபம் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் மூலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மேன்மையடையும். ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த காரியம் விரைவில் நடக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 10.03.2023 வெள்ளி மாலை 06.19 முதல் 12.03.2023 ஞாயிறு இரவு 12.29 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெள்ளை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் பைரவரை வழிபட்டு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி வரவும். வியாழன் அன்று காலை 6-7 மணிக்கு விநாயகர் வழிபாடும் செய்துவர, உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும்.

கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்