புத்தரின் ஆசிர்வாதம் இலங்கைக்கு எப்போது கிடைக்கும்?

Published By: Nanthini

04 Mar, 2023 | 11:59 AM
image

(குமார் சுகுணா)

ரு ராஜகுமாரன் ஞானம் பெற்றதால் புத்தர் ஆனார். அவன் பிறப்பில் எல்லா சுகங்களையும் எல்லா வசதிகளையும் கொண்ட ராஜகுமாரன். அவர் பெயர் சித்தார்த்த கௌதமர். 

இராஜ்ஜியங்களுக்காக சண்டை போட்டு உயிர்களை பலி எடுக்கும் ராஜாக்களுக்கு மத்தியில் மனைவி, மக்கள், நாடென அனைத்தையும் துறந்து ஞானம் தேடி காடுகளில் திரிந்து, பட்டினி கிடந்து, பின் தன் சொந்த இடத்தை விட்டு பாரதத்தின் பீகார் சென்று, அங்கு புத்தகாயாவில் ஞானத்தை பெற்றவர்தான் புத்தர். 

அவர் எல்லாம் துறந்த மகான். நாடு, அரசாட்சி எதுவும் வேண்டாம் என்று சென்றவர். ஆனால், அவரது பெயரால் நமது நாட்டில் சில விஷமிகள் வன்முறைகளை கட்டவிழ்த்து, ஆட்சிபீடங்களை அலங்கரித்து, நாட்டை சீரழித்து, இன்று அட்ட பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டனர். 

சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்திய பொருளாதாரத்தை விட உச்சத்தில் இருந்த இலங்கை இனவாதிகளின் கொடும் ஆட்சியினால் வளத்தை இழந்து, யுத்த காடாகி, இரத்த ஆறு ஓடி, இன்று பொருளாதாரம் சீர்கெட்டுப் போய் முடங்கிக் கிடக்கிறது.

ஒரு காலத்தில் இலங்கை போல சிங்கப்பூர் வளர்ச்சியடைய நினைத்ததாம். ஆனால், இன்று பஞ்சம் தலை விரித்தாடும் தேசத்தவர்களாக நாம் மாறிவிட்டோம். எப்போது, எந்த பொருளின் விலை அதிகரிக்கும் என்று தெரியாது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டோம். வாழ்வதற்கு தகுதியில்லா நாடென நாட்டை விட்டு தினமும் அகதிகளாக வெளியேறுபவர்களும் அதிகம். 

உண்ண உணவு இல்லை. நோயாளிகளின் நோய்களை குணமாக்க மருந்தில்லை. மருத்துவர்கள் தட்டுப்பாடு என நாட்டில் மாள்பவர்களும் அதிகம். இதற்கு மத்தியில் இனவாதம் மட்டும் தீர்ந்தபாடில்லை. 

யுத்தம் முடிந்தாலும், மனிதர்களின் மனதில் தலைவிரித்தாடும் இனவாதம் எனும் நஞ்சு தீர்ந்தபாடில்லை.

புத்தரின் பௌத்தம் எல்லா மதங்களையும் போல அன்பையே போதிக்கிறது. அகிம்சையான மதம். 

இராவணன் எனும் சிவ பக்தன் ஆண்ட இந்த தேசத்தில், சிவபூமி என திருமூலரினால் சிறப்பிக்கப்பட்ட இந்த பூமியில் புத்தரின் பௌத்தம் வெள்ளரசுக் கிளை வைத்து பரப்பப்பட்டது. கருணை மிக்க அந்த மதத்தை பலரும் தழுவி பௌத்தர்களாயினர். 

இந்த நாடும் சுதந்திரம் பெற்றதன் பின்னர் நம்மவர்களின் அரசியலமைப்பின்படி, பௌத்த நாடானது. ஆனால், அந்த கருணை மிகு பௌத்தம், அதனை பின்பற்றுவதாக கூறுபவர்களினால் சரிவர பின்பற்றப்படாமல் அகிம்சை தவறி வன்முறையான மதமாக மாறிவிட்டது. எல்லாம் துறந்த புத்தரை பின்பற்றும், அவரது அன்பை போதிக்க வேண்டிய பிக்குகளின் கைகளில் ஆயுதங்களை காண்கின்றோம். 

அரசை துறந்தவனின் சீடர்கள் ஆட்சி பீடத்துக்கு ஆசைப்படுவதையும் பார்க்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக இதன் ஒரு விளைவுதான், ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்புகளில் புத்தர் சிலைகள் முளைக்க வைக்கப்படுவது.

யுத்தத்தின் பின்னர் தினமும் இந்த நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

நாட்டின் பல முக்கிய பிரதேசங்களில் அது குருணாகல் ஆயினும், மலையகமாயினும், திருகோணமலையாயினும் எல்லா இடங்களிலும் உயரமான ஓரிடத்தில் புத்தர் சிலை பிரமாண்டமாக நிறுவப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. 

ஒரு நகரத்தில் நாம் நின்று பார்த்தால், அங்கு அதன் அடையாளமாக அந்த சிலை தான் விளங்கும். 

தமிழர்கள் மட்டும் பன்னெடுங்காலமாக வாழ்ந்த தமிழர்களுக்குரிய பூர்வீக நிலப்பரப்புகளிலும் இந்நிலையே தொடர்கிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், நிலாவரை கிணற்றடி பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமை பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

அந்தப் பகுதியில் கடமையில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலையொன்று பௌத்தர்களின் வழிபாட்டு மரபுக்கு ஏற்ப வைக்கப்பட்டிருந்தது. 

எனினும், பிரதேச சபையின் தலையீட்டின் பின்னர் அது அகற்றப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழர்களின் தாயக பிரதேசங்களில் நடப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது. 

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலத்தை கொண்ட குருந்தூர் மலையில் புத்த விகாரையை நிறுவும் முயற்சிகள் நடைபெற்றதோடு, குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீகக் காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதாக தெரிவித்து, பிரதேச மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டனர். 

ஆனால், அது சத்தமின்றி பெளத்தமயமாக்களுக்கு உள்ளாகி தற்போது இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வழிபாட்டுக்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப்பெற்றுள்ளமை அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. 

தமிழ் மக்கள் இது தொடர்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆயினும், கடந்த வருடம் ஜூலை 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும், 12.06.2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

முன்னதாக முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா‍லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். 

இந்திய தமிழ்நாட்டு ஆய்வாளர்களும் 'இது தாராலிங்கம்' என உறுதிப்படுத்தினர். பல்லவர் கால கட்டட வடிவமைப்புக்களின் சாட்சியாக இந்த அஷ்டதாரா லிங்கம் விளங்குகின்றது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவிலில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் அஷ்டதாரா லிங்கத்தை ஒத்த லிங்கம், தமிழ்நாட்டின் கும்பகோணத்தைச் சேர்ந்த கூந்தூர் முருகன் ஆலயத்திலும் உள்ளது என கூறப்பட்டது. இதனால் இது தமிழர்களின் வழிபாட்டுத்தலம் என்று உறுதிப்பட கூறப்பட்டதோடு, அங்கு காணப்படும் பௌத்தமயமாக்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்துதான் வந்தனர்.

நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கட்டளையை மீறி, தொடர்ந்து இரவு நேரங்களில் கட்டுமான பணிகள் இராணுவ பாதுகாப்போடு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப்பெற்றுள்ளது.

இவை சில உதாரணங்களே. உண்மையில் கூறப்போனால், இதுபோன்று இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இவை யாவும் உரைப்பது ஒன்றைதான். 

ஓர் இனத்தின் இருப்புக்கு நிலப்பரப்பு, கலாசாரம், பண்பாடுகள், மத வழிபாடுகள் என்பனவெல்லாம் மிக முக்கியமானவையாகும். அதனை அழிக்கும் நோக்கிலேயே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

உண்மையில், புத்தர் இன்று உயிரோடு இருந்தால், தனது பெயரினால் மண்ணாசை, பொன்னாசை பிடித்து அலைந்து திரிந்து சக மனித இனத்தை வேதனைப்படுத்தும் மக்களை நினைத்து கவலைதான் படுவார். 

ஞானத்தை பெற வேண்டும், உண்மையான பரிபூரண நிலையை மனிதன் உணர வேண்டும் என்பதற்காக இராஜ்ஜியத்தை துறந்து காடு, மலையென அலைந்து, பட்டினியில் திரிந்து, இறுதியில் ஞானத்தை பெற்று, இதனை சக மனிதனும் பெறவேண்டும் என்பதான போதனைகளை கூறிய புத்தரின் பெயரில் நமது நாட்டில் நடப்பதெல்லாம் வன்முறை கலாசாரமாகவே உள்ளது. 

அடுத்தவனின் அடையாளத்தை அழிப்பதையோ, ஓரினத்தை ஒழிப்பதையோ புத்தர் விரும்ப மாட்டார். ஞானத்தை பெற உருவாக்கிய பௌத்தத்தின் பெயரில் இவை அனைத்தும் நடப்பது புத்தரை வேதனைதான் படுத்தும். அது இந்த நாட்டுக்கு மேலும் தீரா சாபத்தையே உருவாக்கும்.

மாறாக, அன்பே பௌத்தம்; அது அரச மரத்தடியில் சிலையை உருவகப்படுத்துவதாலோ விகாரைகளை உருவாக்குவதாலோ உயிர்ப்படையாது. மாறாக, சக மனிதனை மனிதத்துவத்துடன் நேசிக்க பழகினால் போதும். அன்பு போல பௌத்தமும் தானாக மனிதத்துக்குள் வளரும். அதனை யாரும் வளர்க்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்படாது.

இதனைதான் புத்தரும் விரும்புவார். பௌத்தமயமாக்கலை நேசிப்பவர்கள் என்று இதனை புரிந்துகொள்கின்றார்களோ அன்றே புத்தரின் ஆசிர்வாதம் இந்த நாட்டுக்கும் அவரை நேசிப்பவர்களுக்கும் கிடைக்கும். இல்லை என்றால் வெறுமனே யாப்பில் மட்டுமே பௌத்தம் என்பது வெறும் எழுத்துக்களாக மட்டும் இருக்கும். வெறுப்புணர்வை வெறுத்து அன்பையும் அகிம்சையையும் எப்போது மக்கள் கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்றனரோ அன்றுதான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right