அயோத்தி- விமர்சனம்

Published By: Ponmalar

03 Mar, 2023 | 04:33 PM
image

தயாரிப்பு: ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்

நடிகர்கள்: சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, புகழ், அஞ்சு அஸ்ராணி, அத்வைத் மற்றும் பலர்

இயக்கம்: ஆர். மந்திரமூர்த்தி

மதிப்பீடு: 3.5 / 5

'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற இந்திய மண்ணின் மகத்தான கருத்தியலை வலியுறுத்தும் வகையில் வெளியாகி இருக்கும் படைப்பு.

வட இந்தியாவில் உள்ள புனித தலமான அயோத்தியில் வசித்து கொண்டு, அங்கு வருகை தரும் இந்து பக்தர்களுக்கு மத ரீதியான சடங்குகளை செய்வதற்கு உதவி செய்யும் தீவிர இந்து மத பற்றாளரான பல்ராம், தனது மனைவி ஜானகி, மகள் ஷிவானி, மகன் சோனு ஆகியோருடன் ஒரு தீபாவளி தருணத்தில் ராமேஸ்வரம் எனும் தென்னிந்திய புனித தலத்திற்கு யாத்திரை மேற்கொள்கிறார். அயோதியிலிருந்து புகையிறத பயணத்தின் மூலம் மதுரை வரை வந்தடையும் அவர், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வாடகை வாகனத்தில் பயணிக்கிறார். திட்டமிட்ட நேரத்திற்குள் ராமேஸ்வரத்தை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வாகனத்தை வேகமாக செலுத்துமாறு சாரதியிடம் பணிக்கிறார். சாரதியும் வாகனத்தை வேகமாக இயக்குகிறார். இந்தத் தருணத்தில் வட இந்திய மக்களின் இயல்பான பழக்கங்களில் ஒன்றான பான் பராக்கை பாவிப்பதில் சாரதிக்கும், பல்ராமிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது சிறிய கைகலப்பாக மாறுகிறது. இந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக விபத்து நேர்கிறது. அந்த விபத்தில் பலராமுடன் பயணித்த அவரது மனைவி ஜானகி இறக்கிறார்.

மொழி தெரியாத இடம்.. நெடுஞ்சாலை.. இரவு நேரம்... விபத்து.. மரணம்.. என எதிர்பாராத சோக சம்பவங்களால் அந்த குடும்பம் நிலை குலைகிறது. இந்த தருணத்திலும் பல்ராம், தன் மத சடங்குகளை கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் சூழல் அதற்கு நேர் எதிராக இருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு யார் உதவினார்கள்? அவர்கள் இறந்த சடலத்துடன் தாய் மண்ணான வட இந்தியாவிற்கு திரும்ப முடிந்ததா? போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு விடையளிப்பது தான் 'அயோத்தி' படத்தின் திரைக்கதை.

வாடகை வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சாரதியின் நண்பனாக நடிகர் சசிகுமார் அறிமுகமாகிறார். இறந்த சடலத்தை ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் வட இந்தியாவிற்கு அனுப்ப.., சரக்கு விமான பயணம் ஒன்றுதான் வழி என்றதும்.. அதற்கான நடைமுறைகளை கேட்டு ஆயாசமடைகிறார். இருப்பினும் அந்த குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முயற்சிக்கிறார். அவரது முயற்சியினூடாக இந்த மண்ணில் மனிதநேயத்துடன் வாழும் மனிதர்களை அடையாளம் காண முடிகிறது.

இந்திய மண்ணில் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் இருந்தாலும், உணர்வும், சிந்தையும் ஒன்றுதான் என்பதை பார்வையாளர்களுக்கு காட்சிகளின் மூலம் நேர்த்தியாக இயக்குநர் கடத்தியிருக்கிறார். அதிலும் உச்சகட்ட காட்சியில், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தின் மூலம் மனைவியை இழந்த பல்ராம், தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு, ஆணாதிக்க மன நிலையிலிருந்து விலகி.. அன்பு ததும்ப சசிகுமாரை நோக்கி உன் பெயர் என்ன? என கேட்கும் போது, சசிகுமார் அளிக்கும் பதில்.. ஒட்டுமொத்த திரைப்படத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது.

கதை எழுதிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கும், அதனை திரைக்கதையாக்கிய அறிமுக இயக்குநர் ஆர். மந்திரமூர்த்திக்கும், இதில் முக்கிய பங்காற்றிய மதுரை நேதாஜி சந்திரனுக்கும் கரம் வலிக்க கைக்குலுக்கி பாராட்டுத் தெரிவிக்கலாம். தொடர்ந்து வித்தியாசமான மற்றும் தரமான படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர் ஆர். ரவிந்திரனையும் மனதார பாராட்டலாம்.

சசிகுமார் வழக்கமான நடிப்பு என்றாலும் உச்சகட்ட காட்சியில் அவருடைய வசனங்களும், கதாபாத்திர வடிவமைப்பும் ரசிகர்களின் மனதில் ஃபெவிகால் போல் ஒட்டிக் கொள்கிறது. ஆணாதிக்க மிக்க குடும்பத் தலைவனாக வட இந்திய நடிகர் யஷ்பால் ஷர்மா தன் நேர்த்தியான நடிப்பை வழங்கி இருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகை ப்ரீத்தி அஸ்ராணி, தன் தாயின் இழப்பிற்கு காரணமான தந்தை மீது சீறிப்பாய்ந்து குற்றம் சுமத்தி பேசும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அபாரம்.

அயோத்தியில் தொடங்கி ராமேஸ்வரம் வரை பயணிக்கும் கதையோட்டத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் காட்சி வழி திரைக்கதை உயிர்ப்புடன் ஜொலிக்கிறது. பாடல்களை விட பின்னணி இசையில் ரகுநந்தனின் உழைப்பு பளிச்சிடுகிறது. சிரிப்பை வரவழைப்பதற்காக பயன்படுத்தப்படும் 'ஒற்றை வரி வசனங்கள்', இந்தத் திரைப்படத்தில் கதையின் மையக் கருவுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

மனித நேயத்தை வலியுறுத்துவதற்காக திரைக்கதை முழுவதும் நேர் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை மட்டுமே இயக்குநர் பயன்படுத்திருப்பதை ஒரு பிரிவினர், பலவீனம் எனச் சுட்டிக் காட்டுவர். இவர்களை சிறுபான்மை என கருதி, புறம் தள்ளிவிட்டு, பெரும்பான்மையினர் தெரிவிக்கும் ஆக்கபூர்வமான விடயத்திற்கு ஆதரவளிக்கலாம்.

அயோத்தி - மத நல்லிணக்க ஜோதி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right