கந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த சந்திரகாந்தி, தேயிலைமலை, பார்க் ஆகிய மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கடந்த 26 நாட்களாக எதிர்கொண்ட அத்தோட்ட நிர்வாகத்தினூடான பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இத்தோட்ட மக்கள் எதிர்கொண்ட தொழில் மற்றும் நிர்வாக அதிகாரியின் ஊடான பிரச்சினை தொடர்பில் கொழும்பு நாராஹம்பிட்டியவில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் பிரதான தொழில் ஆணையாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஒன்று (30.12.2016) அன்று மாலை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்தையில், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனி தலைவர் எஸ்.சதாசிவம் மற்றும் பதுளை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான வடிவேல் சுரேஸ் ஆகியோருடன்  தோட்ட தொழிலாளர்கள்' 75 பேரும் கலந்து கொண்டனர்.

அதேவேளையில் தோட்ட நிர்வாகத்தின் சார்பில் உடபுஸ்ஸலாவை பெருந்தோட்ட நிர்வாக பனிப்பாளர் உள்ளிட்ட தோட்ட அதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பார்க் தோட்ட அதிகாரியை  தோட்டத்திலிருந்து வெளியேற்ற தொழிலாளர்களால் முன்வைத்த கோரிக்கைக்கு மூன்று முன்மொழிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தோட்ட அதிகாரி மூன்று மாதங்களுக்கு தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்திற்கு செல்லக்கூடாது எனவும் தொழிலாளர்கள் தொழில் விடயத்தில்  தோட்ட உதவி அதிகாரிகளே செயல்படுவார்கள் என தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தொழிலாளர்கள் மனசஞ்சலத்துடன் ஏற்று கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தோட்ட நிர்வாக அதிகாரினால் மறுக்கப்பட்டுவந்த தொழிலாளர்களின் மருத்துவம், பிள்ளைகளின் போசாக்கு  மற்றும் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட 19 அம்சம் கொண்ட உரிமை கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு கிட்டவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உடபுஸ்ஸலாவை கம்பனி நிர்வாக உயரதிகாரிகளை  நியமிப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து தொழிலாளர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாவும் தெரிவித்தனர்.

எக்காரணத்தை கொண்டும் தற்போதைய தோட்ட அதிகாரி தொழிலாளர்களின் நேரடி விடயத்தில் தலையிடமாட்டார்.

என்ற உத்திரவாதத்திற்கமைய கம்பனி நிர்வாக உயரதிகாரிகள் கடிதமூலம் உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பேச்சு வார்த்தை சுமுகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.

எனவே தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.

26 நாட்கள் கடந்த நிலையில் தொழிலாளர்களின் ஒற்றுமையினால் இந்த சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் இதன்போது சுட்டிகாட்டினர்.