(நா.தனுஜா)
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி சட்டக்கட்டமைப்பின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச்செய்யும் வகையிலானதும் சட்டத்தின் ஆட்சியில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தவல்ல - நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையிலானதுமான கருத்துக்களை வெளியிடவேண்டாமெனவும் அச்சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜராகியமை தொடர்பில் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, 'இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்புடனும் தொடர்புபடாத சட்டத்தரணியொருவரை நியமிக்கவேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இருப்பினும் இங்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை, இந்த அரசாங்கத்தை இயக்கமுடியாது என்று கூறியவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அவரை விடவும் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியைச்சேர்ந்த சட்டத்தரணியை தேர்ந்தெடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் மிகுந்த விசனத்தை வெளிப்படுத்துவதற்கு கடந்த 25 ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பேரவை ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
'சட்டரீதியான செயன்முறையில் தமது தேவையைப் பிரதிபலிக்கக்கூடியவாறான சட்டத்தரணியொருவரை தமது விருப்பத்தின்பேரில் தம்முடைய பிரதிநிதியாகத் தெரிவுசெய்யும் அடிப்படை உரிமை எந்தவொரு தனிநபருக்கோ அல்லது பொதுக்கட்டமைப்புக்கோ இருக்கின்றது.
அதேவேளை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னிலையிலும் தமது சேவைபெறுநருக்கு அவசியமான சேவையை வழங்கும் கடமை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உள்ளது.
இவை சட்டத்தின்முன் எந்தவொரு தனிநபரும் கொண்டிருக்கும் உரிமையும், சட்டத்தரணியொருவரின் தொழில்ரீதியான கடமையும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்தல் மற்றும் சட்டக்கட்டமைப்பின் முறையான இயக்கத்தை உறுதிசெய்தல் ஆகியவற்றுக்கு அவசியமான நடைமுறைகளும் ஆகும்' என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 'தமது தொழில்சார் செயற்பாடுகளை எவ்வித அடக்குமுறைகளும், இடையூறுகளும், முறையற்ற தலையீடுகளுமின்றி மேற்கொள்வதற்கான இயலுமையை சட்டத்தரணிகள் கொண்டிருப்பதனை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'சட்டத்தரணிகளின் வகிபாகம் தொடர்பான அடிப்படைக்கோட்பாடுகளின்' 16 ஆவது சரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'இலங்கையின் சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் அவரது சேவைபெறுநரைப் பிரதிநிதித்துவப்படுத்தியமைக்காகத் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், நாட்டின் தலைவரால் 'அரசியல் சட்டத்தரணி' என அழைக்கப்படுவதும் தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவது தொடர்பான வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசி குறித்து நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட முன்னர் ஜனாதிபதி கருத்து வெளியிட்டமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
'இவ்வாறானதொரு பின்னணியில் சட்டக்கட்டமைப்பின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வலுவிழக்கச்செய்யும் வகையிலானதும் சட்டத்தின் ஆட்சியில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தவல்ல - நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையிலானதுமான கருத்துக்களை வெளியிடவேண்டாமென ஜனாதிபதியிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்துகின்றோம்' என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM