அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை : நிலுவைத்தொகை கோடிகளை தாண்டியது

Published By: Digital Desk 5

28 Feb, 2023 | 10:37 AM
image

பாலநாதன் சதீஸ்

வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அவற்றினை நிலையான சொத்துப்பதிவேட்டில் சேர்க்கவில்லை என தொடர்ச்சியாக கணக்காய்வு திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியிருந்தும் மீள்மதிப்பீடு செய்து சொத்து பதிவேட்டில் பதியப்படவில்லை இதனால் சபையினர் தமக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளனர்.

நகரசபை கட்டளை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரசபையினருக்கும் என சில கடமைகள் , பொறுப்புக்கள்  வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை தமது எல்லைக்குட்பட்ட நகரிற்கு வழங்குவது சபையினரின் கடமையாகும். 

சபையினருக்கென காணி கட்டடங்கள், இயந்திர பொறி உபகரணங்கள், வாகனங்கள் , தளபாட பொருத்துக்கள், கட்டமைப்புக்கள், நூலக புத்தகங்கள் எனபல நிலையான சொத்துக்கள் அதிகம் காணப்படுகின்றது. இவ் சொத்துக்கள் மூலம் சபையினர் பல கோடி வருமானங்களை பெற்று அதனை குறித்த நகரின் அபிவிருத்திக்கு பயன்படுத்துகின்றனர். 

அதே போன்று வவுனியா நகரசபையினருக்கென  பல நிலையான சொத்துக்கள் காணப்படுகின்றது. எனவே நகரசபையினர் தமக்கு வழங்கப்பட்ட கடமையின் நிமித்தம் நமது நிலையான சொத்துக்களான  காணி கட்டடங்களுக்குரிய பெறுமதியினை சரியாக கணிப்பிடுவதன் மூலம் வருடத்திற்கு வருடம் அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் சபையினருக்கு சொந்தமாக இருக்கும் நிலையான ஆதனங்களுக்கு 5 வருடங்களுக்கு ஒரு தடவை அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அதற்கேற்பவே சபையினர் வருமானத்தினை பெற்று வருவது வழமையானதாகும். ஆனால் சபையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காணிகளுக்கான மீள் மதிப்பீட்டினை மேற்கொள்ளவில்லை.

எடுத்துக்காட்டாக 2020ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் சபையின் பயன்பாட்டில் உள்ள 40 காணிகளுக்கு 10வருடங்களுக்கு மேலாக பெறுமதியிடப்பட்டு கணக்குகளிற்கு கொண்டுவரப்படாமையால் மொத்த சொத்துக்களின் பெறுமதியானது நிதி கூற்றுக்களில் குறைத்து காட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி சபையின் அனைத்து சொத்துக்களின் பெறுமதிகள் குறிப்பிடப்பட்டு கணக்குகளில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. 

அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் சபையின் பயன்பாட்டில் உள்ள 40 காணிகளில்  15 காணிகள் பாராதீனப்படுத்தப்பட்டுள்ளது ஏனையவற்றை பாராதீனப்படுத்த வவுனியா பிரதேச செயலாளரிடம்  கோரியிருந்தோம் எனினும் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பதிலளித்திருந்தார்கள்.

அதுமட்டுமன்றி அதே ஆண்டு வெளிவந்த கணக்கறிக்கையில் வீதங்கள் மற்றும் ஆதனவரி நிலுவைகளின் கூட்டுமொத்தம் ரூபா 38,195,296 இனை அறவிடுவதற்கு கடந்த 1 தொடக்கம் 5 வருடங்களாக சபையினால் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிராமை அவதானிக்கப்பட்டதுடன் 7 வருடங்களுக்கு மேலாக ஆதனவரி அறவீடு மற்றும் நிலுவைகளின் சரியான தன்மையினை திருப்திகரமாக ஏற்று உறுதிப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டி வீதங்கள் மற்றும் ஆதனவரி  நிலுவைகளை அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஆதன மீள் மதிப்பீடும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள். 

அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் நிலுவைகளை அறவிடுவதற்கு நடுகட்டு உத்தியோகத்தர்களுக்கு நிலுவை பட்டியல்கள் வழங்கப்பட்டு  அறவீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன்  பல நடமாடும் சேவைகளும் மேற்கொள்ளப்பட்டது என்பதனை உறுதிப்படுத்துகின்றேன் என பதி்ல் வழங்கியிருந்தார். 

அத்தோடு  குறித்த அறிக்கையில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நகரசபையினரால் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதனங்களுக்கான ஆதன மீள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆதன வரியினை அறவிட ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி ஆதனங்கள் மீள் மதிப்பீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள் அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதனங்களின் ஆதனமீள் மதிப்பீடு மேற்கொள்வதற்காக வரிமதிப்பீட்டு திணைக்களத்திற்கு பல முறை கடிதம் அனுப்பியும் இதுவரை அவர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பதிலளித்திருந்தார்கள்.

இது தொடர்பாக கட்டுரையாளனால் 2022 ஆம் ஆண்டு சபையினருக்கு சொந்தமான காணிகளின் பெறுமதி எவ்வளவு? இறுதியாக மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டு எவ்வளவு என தகவலறியும் உரிமைசட்டம் மூலம் கோரப்பட்டதற்கு நகரசபைக்கு சொந்தமான  காணிகளுக்கான மதிப்பீடு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு  செய்யப்படவில்லை என பதிலளித்திருக்கின்றார்கள். 

இவை ஒருபுறமிருக்க 2023 ஆம் ஆண்டு  கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம்  பின்வருமாறு வினவப்பட்டது.

நகரசபையின் கீழ் எவ்வகையான சொத்துக்கள் நிலையான சொத்துக்களாகும்? அதன் பெறுமதி எவ்வளவு? நிலையான சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் எவ்வளவு? மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றதா? அதன் விபரம்?  மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லையாயின் அதற்கான காரணம் ? என வினவப்பட்டதற்கு காணி கட்டடம், இயந்திர உபகரணங்கள், நூலக புத்தகங்கள், வாகனம், தளபாடம், பொருத்துக்கள் என்பனவே  நிலையான சொத்துக்கள் எனவும்,  2022 ஆம் ஆண்டு 1,230,409,969 ரூபா பெறுமதியான சொத்துக்கள்  இருக்கின்றது எனவும் இவற்றின் மூலம் 2020ஆம் ஆண்டு 2,811,058. 53 ரூபா வருமானமும் 2021 ஆம் ஆண்டு 4,951,465 ரூபாவும், 2022 இல் 5,800,742 ரூபாவும் வருமானமாக கிடைத்திருக்கின்றது எனவும் ஆதன மீள் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் மிக எளிமையாக இருவரிகளில் பதிலளித்திருக்கின்றார்கள் .

ஆகவே கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையினையும், கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபையினர் சோலைவரி அறவிடப்படுகின்றது, ஆதன மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றது என கூறினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை கட்டுரையாளனுக்கு வழங்கவில்லை. 

அத்தோடு கடந்த வருடம் 2022 காணிகளுக்கான மீள் மதிப்பீடு, ஆதன மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை என கட்டுரையாளனுக்கு தகவலறியும் உரிமை சட்டத்தில் பதிலளித்திருக்கின்றார்கள். 

அத்தோடு 10 வருடங்களுக்கு மேலாக காணிகளுக்கான மீள் மதிப்பீடு செய்யாமலும் 47ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்ட கடைகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமலும் நிலையான சொத்துக்களின் பெறுமதியினை கணக்கிடாது அசண்டையினமாக விட்டிருக்கின்றார்கள்.  

ஆகவே சபையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஆதன மீள் மதிப்பீட்டை மேற்கொள்ளவி்ல்லை என்பதும் இதனால் சபையினருக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.

சபையினர் தம்மிடம் இருக்கும் நிலையான சொத்து விபரங்களையும், மீள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பெறுமதிகளையும் நிலையான சொத்து பதிவேட்டில் பதியப்பட்டு அரச சொத்துக்களை  பத்திரப்படுத்துவது சபையினரின் பிரதான கடமையாகும். ஆனால் சபையினர் அந்த கடமையிலிருந்து சற்று விலகியே இருக்கின்றார்கள். 

இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளனவா? பதியப்பட்டிருப்பின் அதன் விபரம்  பதிவேட்டில் பதியப்படவில்லையாயின் அதற்கான காரணம்? புதிதாக நிலையான சொத்துக்கள் கிடைக்கப்பெறின் அவை நிலையான சொத்து பதிவேட்டில் பதியப்படுகின்றனவா? அவ்வாறாயின் அதன் விபரம்? என கட்டுரையாளனால் வினவப்பட்டதற்கு வவுனியா நகரசபையினர் பதிவேட்டில் பதியப்படுகின்றது எனவும், நகரசபை அலுவலகத்தில்  பதவிநிலை உத்தியோகத்தர் முன்னிலையில் பார்வையிட முடியும் எனவும், புதிதாக சேரும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் இருக்கின்றது என மிக நூதனமான முறையில் சுருக்கமாக பதிலளித்திருக்கின்றார்கள். 

அது ஒருபுறமிருக்க 2019 ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த கணக்கறிக்கையில் ரூபா 33,124,563 பெறுமதியான 2 கணக்கு விடயங்களுக்குரிய நிலையான சொத்துப்பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படாமையால் கணக்காய்வின் போது அவற்றை திருப்திகரமாக உறுதிப்படுத்த முடியாதிருந்தது என சுட்டிக்காட்டி  நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கபடாதிருந்த கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என  பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.  

அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தளபாடம், பொருத்துக்கள் மற்றும் இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியன இதுவரை காணி இருப்பு பதிவேட்டின் வடிவில் பெறுமதிகளின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தது தற்போது அவை சொத்து முகாமைத்துவத்திற்கமைய அவை தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றது என பதிலளித்திருந்தார். 

2020 ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த விரிவான  முகாமைத்துவ அறிக்கையில் ரூபா 626,776,162 பெறுமதியான மூன்று கணக்கு விடயங்களுக்குரிய நிலையான சொத்து பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படாமையால் கணக்காய்வின் போது அவற்றை திருப்திகரமாக உறுதி செய்ய முடியாதிருந்தது. என சுட்டிக்காட்டி நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ள கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கியிருந்தார்கள்.  

அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தங்களால் குறிப்பிடப்பட்டுள்ள  ரூபா 626,776,162 ஆனது காணி கட்டடங்கள் தொடர்பானதாகும். நகரசபைக்குரித்தான காணிகளை மதிப்பீடு செய்யப்படுதல் தாெடர்பாக பிரதேச செயலாளர், நில அளவை திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பதிலளித்திருந்தார். 

அதே ஆண்டு வெளிவந்த குறித்த கணக்கறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி கூற்றுக்களின் பிரகாரம் சபைக்குரிய 50 காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 

காணி மற்றும் கட்டிடங்களுக்கான பதிவேடும் சபையினரால் முறையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டி காட்டப்பட்டு காணி மற்றும் கட்டிடங்கள் மெய்மையாய்வு செய்யப்பட்டு சபைக்கு சொந்தமான அவ்வாறான சொத்துக்கள் தொடர்பிலான உரிமை உறுதிப்படுத்தல் வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தரால் பதில் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

அதேபோன்று 2021ஆம் ஆண்டு இறுதியாக வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின்  பொழிப்பு அறிக்கையில் நிலையான சொத்து பதிவேட்டின் பிரகாரம் 2021 டிசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட இயந்திர உபகரணங்களின் பெறுமதி ரூபா 1,765,000 ஆல் குறைத்து நிதிக்கூற்றுக்களால் காட்டப்பட்டிருந்தது.  என சுட்டிக்காட்டி  சொத்துக்களின் பெறுமதிகள் சரியாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும்  என பரிந்துரை வழங்கப்பட்டது. அதற்கு 2022இல் சீர் செய்யப்படும் என சபையினர் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.

கணக்காய்வு திணைக்களத்தின் சுட்டிக்காட்டுக்கள் ஒரு புறமிருக்க கட்டுரையாளனால் சபையினரிடம் தகவலறியும் உரிமைசட்டம் மூலம் கேட்கப்பட்டதற்கு நிலையான சொத்துக்கள் பதிவேடில் பதியப்படுகின்றது. அதற்கான மீள் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது என கூறினாலும் சபையினர் கட்டுரையாளனுக்கு ஆதார பூர்வமாக நிருபிக்கவில்லை. 

ஆகவே தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும் கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களையும் தொகுத்து நோக்கும் போது குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கணக்காய்வு திணைக்களத்தினர்  சுட்டிக்காட்டியிருந்தும் வவுனியா நகரசபையினர் சரியான முறையில் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதன் பெறுமதி கணிக்கப்பட்டு அவற்றினை நிலையான சொத்துப்பதிவேட்டில் சேர்க்கவில்லை. இதனால்  சபையினர் தமக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வருமானத்தினை இழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு...

2023-03-03 13:17:57
news-image

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை...

2023-02-28 10:37:11
news-image

ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: ...

2023-02-22 15:18:51
news-image

பயிற்சியளிக்காமல் சுகாதார தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்...

2023-01-30 18:11:10
news-image

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா...

2022-11-27 11:26:50
news-image

வடக்கில் கடலட்டை மாபியா !

2022-10-13 15:48:06
news-image

வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை

2022-09-27 10:32:07
news-image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு...

2022-08-22 11:00:02
news-image

கட்டுப்படாத வவுனியா நகரசபை

2022-08-02 16:29:14
news-image

நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய...

2022-07-30 20:45:34
news-image

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு...

2022-07-23 15:19:14