(க.கிஷாந்தன்)

கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகை நகரத்திலிருந்து செல்லும் தோட்டத்திற்கு சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் பாதை எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இப்பாதையினை 500 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதை சீர்கேட்டினால் இத்தோட்ட மக்கள் கால் நடையாக நகரத்திற்கு செல்வதோடு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாகன வசதிகள் இல்லாமல் தலையில் சுமந்து செல்வதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் இருந்து செல்லும் பிரதான வீதியில் நீர் ஓடை உள்ளதால் மழைக்காலங்களில் நீர் ஓடையை கடக்கமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இங்குள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் இப்பகுதியை கடக்கும் போது தங்களின் பாதணிகளை கழட்டிக்கொண்டு செல்லும் அவலநிலை பல வருடங்களாக இடம்பெறுவதாக மாணவர்கள் புலம்புகின்றனர்.

இத்தோட்டத்தில் உள்ள நோயாளர்கள் மற்றும் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் வாகன வசதிகள் இன்றி நடந்துச்செல்லவேண்டும்.

நடந்துச்செல்லமுடியாத நோயாளர்களை பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு சுமந்து செல்லும்  சூழ்நிலையில் இம்மக்கள் வாழ்கின்றனர்.

இப்பாதையினை புணரமைத்து தருமாறு பல அதிகாரிகளிடம் கோரியபோதிலும் இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையென இத்தோட்ட மக்கள் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இப்பாதையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செப்பணியிட்டு தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.