ஆபத்தில் உதவும் உபாசனை தெய்வ வழிபாடு

Published By: Ponmalar

23 Feb, 2023 | 08:22 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தமக்குத் தெரிந்த தொழிலை முதலீடாக கொண்டு, அதில் கடுமையாக உழைத்து முன்னேறுவதை தங்களுடைய வாழ்க்கைக்கான பற்றுக் கோடாக வைத்திருப்பர். வேறு சிலர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த வழியில் பயணிக்கலாம்? என்ற தெளிவு இல்லாமையால், சலனமான மனதுடன் பயணிப்பதை விட, எதில் வெற்றி பெறுவோம்? என்பதனை தெரிந்து கொண்டு பயணிக்கலாம் என நினைப்பர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்ப சோதிடர்களையோ அல்லது அனுபவம் மிக்க சோதிட வல்லுநர்களையோ சந்தித்து தங்களது ஜாதகத்தையும், நிலைப்பாட்டையும் தெரிவித்து பலன்களை கூறுமாறு கேட்பர்.

அதற்கு சோதிடர்களும் ஜாதகங்களை துல்லியமாக அவதானித்து உங்களுடைய நடப்பு திசை, புத்தி, உங்களுடைய மனைவி, பிள்ளைகள் அவர்களுடைய தசா, புத்தி, உங்களுடைய அடுத்து வரவிருக்கும் தசா புத்தி ஆகியவற்றை உத்தேசித்து எந்த வழியில் பயணித்தால் எம்மாதிரியான பலன்கள் நேர்நிலையாக கிடைக்கும் என்பதனை தெரிவிப்பார். அதனுடன் மேற்கொள்ள வேண்டிய ஆலய பரிகாரம், வாழ்வியல் பரிகாரம்... உள்ளிட்ட பரிகாரங்களையும் வலியுறுத்துவர். நாமும் சோதிட நிபுணர்கள் சொல்லிய விதம் அனைத்து பரிகாரங்களையும் செய்வோம். பிறகு பலன்கள் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் மிக குறைவாகவே கிடைக்கும். இது தொடர்பாக வேறு சோதிட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டால், பரிகாரம் சரி. ஆனால் அதற்கான பலன் உங்களுக்கு சாதகமான திசா புத்தி நடக்கும் காலகட்டங்களில் தான் முழுமையாக கிடைக்கும் என தெளிவுப்படுத்துவார்.

ஆனால் எம்மில் பலருக்கு இதன் போது நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்படக்கூடும். இதனை சமாளிப்பதற்கும், துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கும் உபாசனை தெய்வங்களின் வழிபாடு கை கொடுக்கும். உபாசனை தெய்வ வழிபாடா?! என சிலர் புருவம் உயர்த்தி ஐயமுடன் கேட்பர். தெய்வ வழிபாடு என்பது வேறு குலதெய்வ வழிபாடு...  இஷ்ட தெய்வ வழிபாடு... பரிகார தெய்வ வழிபாடு ... இவற்றையெல்லாம் கடந்து பலருக்கும் ஆபத்தான காலகட்டத்தில் உதவி செய்பவை தான் உபாசனை தெய்வ வழிபாடு.

உபாசனை தெய்வ வழிபாட்டை பொருத்தவரை சோதிட நூல்கள் நட்சத்திரங்களுக்குரிய உபாசனை தெய்வத்தை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் சில ஜோதிட வல்லுநர்கள் இவை பொதுப்படையானவை. உங்களுடைய ராசி, நட்சத்திரம், வழிபாடு ஆகிய மூன்றையும் தெரிந்து கொண்டு அதன் பிறகு உபாசனை தெய்வத்தை மனதில் தியானித்து, தொடர்ந்து அதன் மூலமந்திரங்களையும், காயத்ரி மந்திரங்களையும் உச்சரித்து வர, கைமேல் பலன் கிடப்பதை நேரில் காணலாம். உணரலாம்.

பொதுவாக வழிபாடு என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்காக வரையறை செய்திருக்கிறார்கள். இதில் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகள் சரியை பாணியில் இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகள் கிரியை எனும் பாணியில் இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகள் யோகம் எனும் பாணியில் இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகள் ஞானம் எனும் பாணியில் இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

உடனே எம்மில் பலரும் சரியை பாணியிலான இறை வழிபாடு என்றால் என்ன? என மனதிற்குள் கேள்வி எழுந்திருக்கும். இறைவனை கல்ரூபமாக கண்டு தரிசிப்பதும், தியானிப்பதும் வணங்குவதும் தான் சரியை வழிபாடு. கிரியை வழிபாடு என்பது உங்கள் ராசிக்கான மற்றும் நட்சத்திரத்திற்கான உபாசனை தெய்வங்களை தெரிந்து கொண்டு, அந்த இறைவனை, இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்து அதனூடாக பிரார்த்திப்பது. யோகம் வழிபாடு என்பது இறைவனை உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் மனதில் நிறுத்தி தியானித்து, தியானம் மூலம் பிரார்த்தனை செய்வது. ஞானம் என்பது 'எம்முடைய மனமே கோயில்' என்ற எண்ணத்துடன் இறைவன் எம்முள் குடி கொண்டிருக்கிறான் என கருதி, சுய ஒழுக்கத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் இறைவனை வணங்குவது.

தொடர்ந்து உபாசனை தெய்வங்களை நட்சத்திர வரிசையில் பட்டியலிட்டிருக்கிறோம். இதனை அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களின் உபாசனை தெய்வத்தை மனதில் நிறுத்தி, உச்சரித்து உச்சரித்து வணங்கிக் கொண்டே இருந்தால்.. ஆபத்துக் காலங்களில் பிரதட்சயமாக தோன்றி அருள் புரிவார்.

லட்சுமி ஹயக்ரீவர், ஆதிபராசக்தி, நந்தீஸ்வரர், சுப்பிரமணியர், அன்னபூரணி, தான்ய லக்ஷ்மி, வராகி அம்மன், கருடாழ்வார், சரஸ்வதி, பிரகஸ்பதி, குலதெய்வம், லட்சுமி நாராயணன், விநாயகர், நடராஜர், சிவகாமி, ஐயப்பன், ராமர், தன்வந்திரி, காயத்ரி, வாலை அம்மன், திரிபுரசுந்தரி, சக்கரத்தாழ்வார், அர்த்தநாரீஸ்வரர், கர்ப்பரட்சாம்பிகை, சரபேஸ்வரர், கால பைரவர், லிங்கோத்பவர், வராக மூர்த்தி, குரு தாத்ரேயர், லலிதா பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, மகா சதாசிவ மூர்த்தி, உலகளந்த பெருமாள், விஸ்வகர்மா, நரசிம்மர், காளி, லட்சுமி, சொர்ண ஆகர்ஷண பைரவர், பிரம்மா, மகான்களின் ஜீவ சமாதிகள், ஆலிலை கண்ணன்.. என இந்த பட்டியலில் இருக்கும் உபாசனை தெய்வங்களை உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வகையில் சோதிடர்களின் வழிகாட்டலுடன் தெரிந்து கொண்டு, அதனை தொடர்ந்து மந்திரத்தின் மூலமாக தியானித்து வந்தால், உங்களுக்கு ஆபத்து ஏற்படாது. அதையும் கடந்து விதியின் வசத்தால் ஆபத்து ஏற்பட்டால், இந்த உபாசனை தெய்வ வழிபாடு உங்களுக்கு பேருதவி புரிந்து காப்பாற்றும்.

தகவல் : மாரி
தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்