அமைச்சுப் பதவி வகித்தால் அரசாங்கத்தின் பாடலை இசைக்கத்தான் வேண்டும்…!

Published By: Nanthini

22 Feb, 2023 | 05:51 PM
image

(சி.சி.என்)

மின்சார கட்டணங்களை உயர்த்தியே தீருவோம் என்ற தனது பிடிவாதத்தில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் போது துண்டு விழும் தொகையை நிவர்த்தி செய்வதற்கு மேலதிகமாக வருமானத்தை பெறும் வழிகளில், இப்போது மக்களிடமிருந்தே பிடுங்கி வாழ்வது என்ற புதிய கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது. 

புதிய மின்சார கட்டணங்கள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மின்சார கட்டண உயர்வால் பல சேவை கட்டணங்களும் உயர்ந்துள்ளதோடு பல உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. 

உணவுப் பொருட்களான பால், தயிர், இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரு மடங்காக உள்ளன. மேலும், சில பொருட்களின் விலைகள் 98 வீதம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக உற்பத்தியாளர்கள் மேலும் பீதியை கிளப்பியுள்ளனர்.

மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தோடு தொடர்புடைய ஏனைய சேவைகள் மற்றும் உணவுப்பொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் இருளிலேயே இருந்திருக்கலாம் என இப்போது பேசி வருகின்றனர். 

அதை விட மேலதிகமாக செலுத்தவேண்டிய மின்சார கட்டணங்களுக்குரிய கொடுப்பனவை எந்த வழிகளில் வருமானமாக பெறுவது, தமது எந்த செலவீனத்தை குறைப்பது போன்ற குழப்ப நிலைமைகளில் அவர்கள் உள்ளனர். குடும்பஸ்தர்களின் நிலை இவ்வாறெனில். சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் இணைந்திருப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இவர்கள் தமது வணிக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கே நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இச்சந்தர்ப்பத்தில் பல மடங்கு அதிகரித்துள்ள மின்கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். 

வர்த்தக செயற்பாடுகளுக்கான மின்சார கட்டணம் சாதாரண கட்டணங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கொரோனா நெருக்கடிகளுக்குப் பிறகு தட்டுத்தடுமாறி தமது வர்த்தக செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்திருக்கும் நடுத்தர மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லப்போகின்றனர். 

மின்சார கட்டண அதிகரிப்பையும் மின்வெட்டையும் தவிர்க்க  பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எடுத்த போராட்டங்கள் வீணாகியுள்ளன. மாறாக, ஆணைக்குழுவில் உள்ள உறுப்பினர்களே இப்போது அவருக்கு எதிராக செயற்பட வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சார சபைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கையும் திரும்பப் பெறுமாறு உறுப்பினர்கள் அவருக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். 

பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பாக குரல் கொடுத்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவுக்கு எதிராக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 14 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

மக்களுக்காக குரல் கொடுக்கும் நேர்மையான அதிகாரிகளும் இந்த அரசாங்கத்தில் மிக மோசமாக பழிவாங்கப்படுகின்றனர் என்பதற்கு மின்சார விவகாரம் நல்ல உதாரணமாகும். 

அரசியல் அழுத்தங்களுக்கு எவ்வகையிலும் அடிபணியப் போவதில்லை என அவர் தனியே போராடுகின்றார். ஆனால், இலங்கை அரசியலை பொறுத்தவரையில், தமக்கு வேண்டாம் என ஒருவரை அரசாங்கம் நினைத்துவிட்டால் அவர்களை எந்த வகையிலும் வீழ்த்துவதற்கு  காய்கள் நகர்த்தப்பட்டு, இறுதியில் அதில் வெற்றியும் கண்டுவிடும் என்பது வரலாறாக உள்ளது. 

மக்களை மேலும் பொருளாதார ரீதியாக சுரண்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப இயங்குவதை தவிர அமைச்சர்களுக்கும் வேறு வழியில்லை. கட்டண அதிகரிப்பை சாத்தியமாக்கியவுடன் மின்சக்தி அமைச்சர் கஞ்சன ஊடகங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. 

கட்டணம் செலுத்தப்படாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும் என எந்த இரக்கமுமில்லாமல் அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஏனென்றால், மீள் இணைப்புக்கு செலுத்தவேண்டிய தொகை அரசாங்கத்துக்கு மேலதிக வருமானமாக கிடைக்கும் அல்லவா?  

இது இவ்வாறிருக்க, மின்சார கட்டண அதிகரிப்பால் பல பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் அதிகரித்தது போதாதென்று நீர் கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றுமொரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

இனி அவர் பங்குக்கு அரசாங்கத்தின் பாடல் ஒன்றை இசைக்கத்தானே வேண்டும்? அரசாங்கம் சில தீர்மானங்களை எடுக்கும் போதும், முடிவுகளை மேற்கொள்ளும்போதும் மலையக சமூகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி நிச்சியமாக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முக்கியம் என்று கூறியே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றது. 

இப்போது மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் தீர்மானங்களை கூறுவதைத் தவிர வேறு வழியின்றி அதைத் தொடர்கிறார் ஜீவன்.    

மலையகம் நீரேந்து பிரதேசமாக காணப்பட்டாலும், இங்கு வாழ்ந்து வருவோரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை என்பதே யதார்த்தம். 

மின்சார கட்டண அதிகரிப்பு என அமைச்சர் கஞ்சன நாட்டு மக்களுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்தது போன்று நீர் கட்டண அதிகரிப்பு என அமைச்சர் ஜீவன் மக்களை அதில் முழ்கச் செய்துள்ளார்.

மின்சார கட்டண அதிகரிப்பால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது போன்று இனி அருந்துவதற்கு நீரும் இலவசமாக விநியோகிக்கப்பட முடியாத நிலை தோன்றுமோ என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. 

மின்சக்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு போன்றன தேசிய ரீதியாக செயற்பட வேண்டிய துறைகளாகும். இது ஒரு சமூகத்தை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. இவை இரண்டும் நாட்டு மக்களை பொறுத்தவரையில், அத்தியாவசிய சேவைகளாகும். அதை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் இந்தளவுக்கு பின்னடிக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அமைச்சர்கள், எம்.பிக்களால் செலுத்தப்படாமல் இருக்கும் மின்கட்டணங்கள் குறித்து எந்த கதைகளும் இல்லை.

இப்போதெல்லாம் நாட்டு மக்கள் வெளிச்சத்தை கண்டுதான் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். மின்சார துண்டிப்பு இப்போது இல்லாவிட்டாலும் மனதளவில் நாட்டு மக்கள் இருளில் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதுவரை அரசாங்கத்தின் பக்கமிருக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தமது கீதங்களை இசைத்துக்கொண்டிருக்கட்டும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right