இன அடையாளத்தை பதிவது தொடர்பில் தெளிவற்ற நிலையிலிருக்கும் தரப்பினர் 

Published By: Nanthini

22 Feb, 2023 | 04:06 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

ந்திய தமிழர்களாக இலங்கைக்கு வந்த சமூகத்தினரை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற விடயங்கள் தான் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றனவே ஒழிய, ‘இந்திய தமிழர்’ என்ற அடையாளத்தோடு வந்த இம்மக்கள், எவ்வாறு இடையில் ‘இலங்கை தமிழர்கள்’ என தம்மை பதிவு செய்துகொண்டனர் என்ற விடயத்தை பற்றி எவரும் ஆராய்ந்து பார்ப்பதாக இல்லை.  அல்லது அதிலிருந்து மீண்டு, மறுபடியும் தமது அடையாளத்தை இவர்கள் எவ்வாறு பெறுவது என்ற முயற்சிகளையும் எவரும் கூறுவதற்கு முன்வருவதில்லை.

சட்ட ரீதியாக எமது நாட்டில் அடையாளப்படுத்தப்படாத அல்லது இல்லாத பெயர்களை எல்லாம் சூட்டி, இனி இவர்கள் இவ்வாறு தான் அழைக்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் மாத்திரமே அதிகரித்துச் செல்கின்றன.  

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூகத்தை மையமாகக் கொண்டே இம்மக்களின் தேசிய அல்லது இனத்துவ அடையாளங்கள் பேசப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இச்சமூகத்துக்கு உறுதியானதொரு இருப்பும் அடையாளமும் தேவை என்ற கருத்துக்கள், இம்மக்கள் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகை தந்து 200 வருடங்கள்  பூர்த்தியான பிறகா மேலெழ வேண்டும் என்ற கேள்வியும் எழாமலில்லை.

இலங்கையில் முதல் முதலாக 1817ஆம் ஆண்டே சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் சிற்சில விதிவிலக்குகளுடன் பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டாலும், 1901 இலிருந்தே அது ஓர் ஒழுங்குக்கு கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டு அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட இலங்கை வாழ் சமூகங்கள் பின்வருமாறு:

1) சிங்களவர்

2) இலங்கை தமிழர்

3) இந்திய தமிழர்

4) இந்திய சோனகர்

5) இலங்கை சோனகர்

எனினும், பிற்காலத்தில் இந்திய மற்றும் இலங்கை சோனகர் என்ற பிரிவு, முஸ்லிம்கள் என்ற அடையாளப்படுத்தலுடன் 'இலங்கை சோனகர்' என்ற ஒரே பிரிவாக மாற்றம் பெற்றது. 1981ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கையின் சனத்தொகை பற்றிய புள்ளிவிபரங்களின்படி,   பின்வரும் பிரிவினர் வரையறுக்கப்பட்டிருந்தனர். 

1) சிங்களவர்

2) இலங்கை தமிழர்

3) இந்திய தமிழர்

4) இலங்கை சோனகர்

5) பறங்கியர்

6) மலாயர்

7) ஏனையோர் 

அதேவேளை 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கீட்டின் போது பின்வரும் பிரிவினர் சனத்தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.

1) சிங்களவர்

2) இலங்கை தமிழர்

3) இந்திய தமிழர்

4) இலங்கை சோனகர்

5) பறங்கியர்

6) மலாயர்

7) இலங்கை செட்டி

8) பரதர்

9) ஏனையோர் 

இறுதியாக எமது நாட்டில் 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது பின்வரும் பிரிவினர் காணப்பட்டனர். 

1) சிங்களவர்

2) இலங்கை தமிழர்

3) இந்திய தமிழர்

4) இலங்கை சோனகர்

5) பறங்கியர்

6) மலாயர்

7) ஏனையோர் 

1981ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கையையும் சனத்தொகை பரம்பல் விகிதாசாரத்தையும் இந்த அட்டவணையில் காணலாம்.

                    ஆதாரம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

மேலே உள்ள அட்டவணையை நோக்கும் போது, 1981ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை இந்தியத் தமிழர்களின் சனத்தொகை பரம்பல் எவ்வாறாக உள்ளது என்பதை பார்த்தால் புரியும். அதாவது 1981ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை இந்திய தமிழர்களின் எண்ணிக்கை 36,369 என்ற அதிகரிப்பை காட்டுகின்றது. அதேவேளை 2001 இலிருந்து 2012ஆம் ஆண்டு வரை இதில் 15,521 பேர் வீழ்ச்சியை காட்டுகின்றது. அதாவது   கணிசமான இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கை தமிழர்கள் என பதிவு செய்துகொண்டமையே இதற்கு காரணம்.  

1948ஆம் ஆண்டு பிரஜா உரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், 1964ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தம் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் இந்தியத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்ட சம்பவங்களை வரிசையாக பார்த்தால், இந்நாட்டில் இந்திய வம்சாவளி சமூகம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள், 2009ஆம் இலக்க நாடற்றோருக்கான விசேட திருத்தச் சட்டத்துடன்  அந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் நாடற்றோராக இருந்த இந்திய தமிழர்கள் தம்மை 'இலங்கை தமிழர்கள்' என்று பதிவு செய்துகொண்டமை ஓர் உணர்வுபூர்வமான விடயம் என ஏற்றுக்கொண்டாலும், மறுபுறம் தமது தேசிய மற்றும் வரலாற்று அடையாளத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.

ஏனென்றால், இந்நாட்டில் ‘இலங்கைத் தமிழர்’ என்போர் ஏற்கனவே பல சட்டவிதிகளுடன் அதற்குரிய சில தகைமைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என்ற விடயத்தை இவர்களுக்கு பிரதிநிதிகளோ அல்லது தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் அதிகாரிகளோ உத்தியோகத்தர்களோ அச்சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தியிருக்கவில்லை. கூறப்போனால், இந்த விடயங்கள் பிரதிநிதிகளுக்கும் திணைக்கள அதிகாரிகளுக்குமே தெரியுமா என்பதே ஒரு கேள்விதான்.

இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்கள் என்போர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பூர்விகமாக கொண்டிருக்கும் அதேவேளை இவர்களில் வட பிராந்தியத்தை பரம்பரையாகவோ பூர்விகமாகவோ கொண்டுள்ளவர்களின் சிவில் விவகாரங்கள் தேச வழமை சட்டம் மற்றும் ஏனைய விசேட நடைமுறைகளுக்கு கீழ் வருவதாக இருக்கும்.

கிழக்கு பிராந்தியத்தை பிறப்பிடமாகவோ அல்லது பூர்விகமாகவோ கொண்டவர்களாக இருப்பின், இவர்களது சிவில் விவகாரங்கள் மரபு வழியாகவோ அல்லது ஒல்லாந்தரால் கொண்டுவரப்பட்ட முக்குவர் சட்டம் சார்ந்த நடைமுறைகளின் கீழ் இருக்கும். 

ஆனால், இந்தியத் தமிழராக இருந்து தம்மை இலங்கை தமிழர் என்று பதிவு செய்துகொண்டவர்களுக்கு மேற்குறித்த எந்த சட்டங்களும் பொருந்தாது. 

ஆனால், இலங்கை தமிழர்கள் என்ற எண்ணிக்கையில் அது அதிகரிப்பை காட்டும் அதேவேளை மாவட்ட ரீதியான அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்பு உட்பட பல்வேறு சலுகைகளுக்கு அந்த எண்ணிக்கை  அவர்களுக்கு சார்பாக இருந்து வருகிறது. 

உண்மையில், இலங்கையில் ஒரு பிராந்தியத்தில்   ஒரு தனித்துவமான தேசிய அடையாளத்துடனும் அதற்குரிய சட்ட ஏற்பாடுகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பிரிவினரின் அடையாளத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு, இலங்கையின் வேறொரு பாகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய தமிழரின் இந்நிலைமையை எவ்வாறு அர்த்தப்படுத்துவது? அல்லது நியாயப்படுத்துவது? புவியியல் ரீதியான பெயரோடு இந்த மக்களை இணைத்து ‘மலையக மக்கள்’ என இவர்கள் அழைக்கப்படல் வேண்டும் என குரல் கொடுப்போர் முதலில் இந்த மக்களின் பிரதானமான முதல் அடையாளமாக விளங்கும் இந்தியத் தமிழர் என்ற பிரிவுக்குள் இவர்களை கொண்டு வருவதற்குரிய முயற்சிகளையே செய்தல் அவசியம். ஏனென்றால், தற்போது நாட்டில் உள்ள இன ரீதியான அடையாளங்களில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொண்ட பிரிவாக அது உள்ளது. அந்த பிரிவுக்குள் இவர்களை கொண்டு வருதல் சுலபம். அதற்கு ஜனாதிபதியை சந்திக்க தேவையில்லை. பாராளுமன்றில் சட்டம் இயற்ற தேவையில்லை. நீதிமன்றமும் போகத் தேவையில்லை. 

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெடுக்கப்படவுள்ள சனத்தொகை கணக்கெடுப்பின்போது அவர்களை மீண்டும் இந்தியத் தமிழர் என்று பதிவதற்கான வழிகாட்டல்களை செய்தாலே போதுமானது. இதற்கு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் ஆதரவும் அவசியமானது.  ஏனெனில், இலங்கை தமிழர் என்ற பதத்தின் பின்னணியை இன்று எத்தனை சிங்களவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை. 

குடியிருப்புகளுக்குச் சென்று கணக்கெடுப்பு செய்யும் உத்தியோகத்தர்கள், தமிழர் ஒருவரை சிங்களவர் என எவ்வாறு பதிய முடியாதோ அதேபோன்று இந்திய தமிழரை இலங்கை தமிழர் என சட்ட ரீதியாக பதிவு செய்ய முடியாது என்பது குறித்து அறிந்திருத்தல் அவசியம். 

இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை இவ்வாறு ஓர் உறுதியான கட்டமைப்புக்குள்  வரும்போது, கொள்கை வகுப்பாளர்களும் சமூகம் சார்ந்த புலமையாளர்களும் மற்றும் துறை சார்ந்தோரும் இம்மக்களின் அடையாளம் குறித்த அடுத்த கட்டத்துக்கு நகரலாம். 

'இந்தியத் தமிழர்' என்ற பதமானது இலங்கையில் வாழ்ந்துவரும் சிங்கள மக்களை எரிச்சலுக்குட்படுத்துகின்றது அல்லது ஒரு அந்நியத்தன்மையை காட்டி நிற்கின்றது என சிலர் கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது. ஏனென்றால், 1981ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்நாட்டில் இடம்பெற்ற இந்திய எதிர்ப்புவாத சம்பவங்கள் அனைத்தையும் தாண்டி, 2001 மற்றும் 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் 8 இலட்சம் பேர் தம்மை இந்தியத் தமிழர்கள் என பதிவு செய்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 

இலங்கை பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு என்று கூறி வரும் அத்தரப்பினர், சனத்தொகை கணக்கெடுப்பின் போது ‘சிங்களவர்’ என்ற பிரிவின் கீழேயே தம்மை பதிவு செய்து வருகின்றனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 

மலையகத் தமிழர் என்ற பதம் அவர்களின் வாழ்வியல் நிலம், பண்பாடு மற்றும் கலாசார பாரம்பரியங்களை கொண்டு பார்க்கப்படுகிறது. அப்படி அழைப்பதில் தவறுகள் இல்லை. ஏனென்றால், வடபுலத்தார் தமது வாழ்விடத்தை 'ஈழம்' என்றும் தம்மை 'ஈழமக்கள்' என்றும் தமது படைப்புகளை 'ஈழத்து இலக்கியம்' என்றுமே கூறுகின்றனர். ஆனால், சட்ட ரீதியாக தம்மை ‘இலங்கை தமிழர்’ என்றே பதிகின்றனர் என்பது நோக்கத்தக்கது. 

எனவே, மலையக மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முதலில் ‘இலங்கை தமிழர்’ என்ற தமக்கு சட்ட ரீதியாக பொருத்தமில்லாத அடையாளத்திலிருந்து முதலில் வெளிவர வேண்டும். 

ஏற்கனவே நடைமுறையிலும் சட்ட ஆவணங்களிலும் உள்ள ‘இந்தியத் தமிழர்’ என்ற பிரிவுக்குள் தம்மை உள்ளீர்த்துக்கொள்ளல் அவசியம். அதன் பிறகு இந்த மக்களுக்குரிய தனித்துவமான அரசியல், நிலவுரிமை மற்றும் ஏனைய சலுகைகள் குறித்து பிரதிநிதிகள் பேசலாம். அவ்வாறான உரையாடல்களின் போது இந்த மக்களின் தேசிய அடையாளம் குறித்தும் பிரஸ்தாபிக்கலாம்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14
news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58