ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் பரஸ்பர குற்றச்சாட்டு

Published By: Nanthini

22 Feb, 2023 | 03:18 PM
image

(எஸ்.தியாகு, நுவரெலியா)

லங்கையில் தற்பொழுது மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக மாறியிருப்பது மின்சாரமாகும். எரிவாயு அல்லது சூரியகலங்கள் மூலம் மின்சாரத்தை பெறும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடந்த காலங்களில் இலங்கையில் உயிர்வாயு மூலம் மின்சாரத்தையும் ஏனைய உப உற்பத்திகளையும் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது கேள்விக்குறியே. 

கொரோனா நெருக்கடிகளுக்கு முன்னதாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், இப்போது நாமும், பரீட்சை காலத்தில் எமது பிள்ளைகளும் இருளில் சிக்கித் தவிக்க வேண்டியிருந்திருக்காது. 

இவ்வாறான ஒரு திட்டம் 2015ஆம் ஆண்டு ஹட்டன் நகரில், ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பங்களிப்புடனும், மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் முழுமையான நிதி ஒதுக்கீட்டுடனும் முன்னெடுக்கப்பட்டது. 

ஆனால், இத்திட்டம் எந்த விதமான பயனுமின்றி தற்போது ஹட்டன் நகரின் பல குப்பைமேடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. 

இதுபோன்ற முறையான திட்டமிடல் இல்லாத திட்டங்களாலேயே எங்களது நாடு பொருளாதாரத்தில் பின்னடைவினை சந்தித்துள்ளது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்காக செலவிடப்பட்ட நிதி, 19 இலட்சத்து 64 ஆயிரத்து 375 ரூபாய் என மத்திய மாகாண கணக்காய்வு அறிக்கை கூறுகிறது. 

இந்த திட்டம் தோல்வியடைந்தமைக்கு காரணம் என்ன? பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் யார்? இவ்வாறான கேள்விகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. 

முன்னாள் நகரபிதாவின் கருத்து

இது தொடர்பாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான டாக்டர் அழகமுத்து நந்தகுமார் கூறுகையில், 

நான் 2015ஆம் ஆண்டு 'நகரபிதா'வாக இருந்த காலகட்டத்திலேயே மத்திய மாகாண மின்சக்தி எரிபொருள் அமைச்சின் ஊடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக எங்களை கண்டி, மாத்தளை போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று உயிர்வாயு உற்பத்தி, அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. கள விஜயமும் இடம்பெற்றன. 

அதன் பின்னரே இந்த திட்டமானது ஹட்டன், டிக்கோயா நகரசபையில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே ஹட்டன் – டிக்கோயா நகரசபை கலைக்கப்பட்டு, அதன் முழு பொறுப்பும் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அதன் பின்பு இந்த திட்டம் தொடர்பான முழு பொறுப்பும் அன்றைய ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் செயலாளர் உட்பட அதிகாரிகளின் வசமானது என்றார். 

முன்னாள் செயலாளரின் விளக்கம்

இத்திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு மேற்படி நகரசபையின் செயலாளராக பணியாற்றிய எஸ்.பிரியதர்ஷினி கூறுகையில், 

இந்த திட்டத்தை பொறுத்தவரையில் நாம் இதற்கான இடத்தை பெற்றுக் கொடுத்தோம். அதை தவிர, நாம் வேறு எந்த விதத்திலும் இந்த திட்டத்தில் தலையீடு செய்யவோ அல்லது வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கவோ இல்லை.

அனைத்து செயற்பாடுகளையும் மத்திய மாகாண எரிபொருள் மின்சக்தி அமைச்சே முன்னெடுத்தது என தெரிவிக்கும் அவர்,   தெரிவுசெய்யப்பட்ட இடம் பொருத்தமற்றது. பலர் கூறுவதற்கு சில அரசியல் பிரதிநிதிகளே காரணம் என்கிறார். 

அத்துடன் சில அரசியல் பிரதிநிதிகள்,  தங்களுடைய அரசியல் இலாபத்துக்காக இந்த இடத்தை தவறான இடமாக அல்லது பொருத்தமற்ற இடமாக காண்பிப்பதற்கு முயற்சி செய்தார்கள் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தொழில்நுட்ப உத்தியோகத்தரின் கருத்து

இது தொடர்பாக 2015ஆம் ஆண்டு நகரசபையில் கடமையாற்றிய தொழில்நுட்ப அதிகாரி நதீரவிடம் கேட்டபோது,  

இந்த திட்டத்தை பொறுத்தவரையில், அனைத்து செயற்பாடுகளும் செயலாளர் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. நான் எந்த இடத்திலும் இதில் சம்பந்தப்படவில்லை என்றார். 

மத்திய மாகாண அமைச்சின் அதிகாரிகள்

மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் அதிகாரிகள் பலரிடம் இது தொடர்பில் வினவியபோது, 

இது தொடர்பான எவ்வித கோவையும் தங்களிடம் இல்லை என தெரிவிக்கின்றனர். அதேவேளை இது தொடர்பான கோவைகள் ஹட்டன் – டிக்கோயா நகரசபையிலும் இல்லை என்பதும் முக்கிய விடயமாகிறது. 

கணக்காய்வு அறிக்கை

2015ஆம் ஆண்டு மத்திய மாகாண வீதி அபிவிருத்தி போக்குவரத்து மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் நிதி ஏற்பாடுகளில் ரூபாய் 19,64,375 செலவில் நிர்மாணிக்கப்பட்ட உயிரியல் வாயு உற்பத்தி செயற்றிட்டமானது முறையான ஆய்வொன்று மேற்கொள்ளப்படாமல் நிர்மாணிக்கப்பட்ட காரணத்தாலும், அத்திட்டம்  செயற்படும் நிலையில் காணப்படாமையினாலும் கைவிடப்பட்டிருந்தது என 2020ஆம் ஆண்டு மத்திய மாகாண கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு சபையின் கருத்துரையாக  பின்னர் பதிலளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு எவ்வாறான பதில் வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை.

அதேவேளை கணக்காய்வை மேற்கொண்ட குழுவினர் தங்களுடைய பரிந்துரையாக சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகளையும் செய்திருக்கிறது.

இவையனைத்தும் அறிக்கைக்கு மாத்திரமே மட்டுப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் இதுவரை ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

மொத்தத்தில் 19,64,375 ரூபாய்க்கு ஒரு சதமேனும் பயனில்லை என்பதே இறுதி முடிவு. இதற்காக செலவிடப்பட்ட காலம், நேரம், ஏனைய செலவினங்கள் அனைத்துக்கும்  எவ்விதமான பிரயோசனமும் இல்லை. இவ்வாறு மக்களின் வரிப்பணத்தால் முன்னெடுக்கப்பட்ட எத்தனையோ திட்டங்கள் பயன் தராமல் இருக்கின்றன என்பது ஆய்வுக்குரியதொன்று. 

ஓய்வு நிலை அரச அதிகாரியின் கருத்து

பொதுவாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதனை முன்மொழிந்தவர் அனைத்துக்கும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. 

அது வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்கான பொறுப்பை குறித்த நபர்களே ஏற்க வேண்டும்.

அதேவேளை குறித்த திட்டம் அதிகாரிகள் மட்டத்தில் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக இருந்தால்,   அதற்கான பொறுப்பை அந்த அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், இலங்கையில் இதுவரை எங்கேயும் அப்படியான ஒரு நடைமுறையை   காணமுடியவில்லை.  

எனவே நாங்களும் எதிர்காலத்தில் அதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார், அரசாங்கத்தின் பல்வேறு உயர் பதவிகளை ஏற்று கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ள பரமேஸ்வரன் என்பவர்.

விசேட சட்டம் அவசியம்

இவ்வாறான திட்டங்கள் தோல்வியடைகின்ற போது இதற்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

எனவே, இதற்கென விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறான திட்டங்கள் தோல்வியடைந்தால், அதற்காக செலவிடப்பட்ட தொகையை அதிகாரிகளிடம் இருந்து அறவிடுவார்கள் அல்லது அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை கறுப்பு பட்டியல் இடுவார்கள். இதுபோன்ற பல ஏற்பாடுகள் இருக்கின்றன.

எனவே, இவ்வாறான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது என்ற விடயத்தை சுட்டிக்காட்டுகிறார், பிரபல சட்டத்தரணி சுபைர். ஏனெனில், இந்த நிதியானது மக்களின் வரிப்பணத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

எனவே, அதற்கு பதில் கூற வேண்டிய தார்மீக பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்கிறார் அவர்.

எதிர்காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு இவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடித்து அதன் ஊடாக செயற்படுத்த முடியுமாக இருந்தால், அது இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும்.

குறிப்பாக, கடந்த காலங்களில் இவ்வாறு நாம் செயற்பட்டிருந்தால், இன்றைய பொருளாதார பின்னடைவை நாம் சந்தித்திருக்க மாட்டோம் என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு...

2023-03-03 13:17:57
news-image

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை...

2023-02-28 10:37:11
news-image

ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: ...

2023-02-22 15:18:51
news-image

பயிற்சியளிக்காமல் சுகாதார தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்...

2023-01-30 18:11:10
news-image

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா...

2022-11-27 11:26:50
news-image

வடக்கில் கடலட்டை மாபியா !

2022-10-13 15:48:06
news-image

வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை

2022-09-27 10:32:07
news-image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு...

2022-08-22 11:00:02
news-image

கட்டுப்படாத வவுனியா நகரசபை

2022-08-02 16:29:14
news-image

நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய...

2022-07-30 20:45:34
news-image

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு...

2022-07-23 15:19:14