'பகாசூரன்' திரை விமர்சனம்

Published By: Nanthini

18 Feb, 2023 | 01:35 PM
image

தயாரிப்பு: ஜி.எம். ஃபிலிம் கொப்பரேஷன்

நடிகர்கள்: செல்வராகவன், நட்ராஜ், தரக்ஷி, கே. ராஜன் உள்ளிட்ட பலர்.

இயக்கம்: மோகன். ஜி

மதிப்பீடு: 2/5

'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய இரண்டு படைப்புகளின் மூலம் வட தமிழகத்தில் ஆதிக்க சாதியினரிடத்தில் பாரிய அதிர்வை ஏற்படுத்திய படைப்பாளி மோகன் ஜி. அவரது இயக்கத்தில் தயாரான 'பகாசூரன்' திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதா, இல்லையா என்பது குறித்து தொடர்ந்து காண்போம்.

தனது மகளை பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தி தற்கொலைக்கு தூண்டியவர்களை தேடி கண்டறிந்து பழிவாங்குகிறார், தந்தையான செல்வராகவன். இது ஒரு தடம். 

மற்றொரு தடத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான நட்ராஜின் சகோதரரின் மகள் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான காரணத்தை கண்டறியும்போது அதிர்கிறார். ஏனெனில், அவரது அண்ணன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாள். இதற்கான காரணத்தையும், இதன் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிவதற்காக பயணிக்கிறார். 

நட்ராஜும் செல்வராகவனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன் பின் என்ன நடந்தது என்பதை விவரிப்பது தான் 'பகாசூரன்' படத்தின் திரைக்கதை.

'பீஸ்ட்', 'சாணிக் காயிதம்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடிக்கலாம். ஏனெனில், தந்தையின் கதாபாத்திரத்தையும், ஒரு கூத்துக் கலைஞனாகவும், அறச்சீற்றம் கொண்ட தந்தையாகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இன்னும் துல்லியமாக விபரிக்க வேண்டும் என்றால், ரசிகர்களின் மனநிலையை திரையில் பிரதிபலிக்கிறார். இனி செல்வராகவன் சிறிது காலம் இயக்கத்தின் பக்கம் கவனம் செலுத்தாமல், பொருத்தமான கதையை தெரிவு செய்து நடிக்கலாம்.

ஓய்வுபெற்ற ஆமி அதிகாரியாக நடித்திருக்கும் நட்ராஜ், இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார். ஓய்வுபெற்ற ஆமி அதிகாரி என்ற கம்பீரம் அவருடைய உடல்மொழியில் மிஸ்ஸிங். ஆனால், சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார். 

இவரது புலனாய்வு தொடக்க காட்சிகளில் வியப்பை அளித்தாலும், காட்சிகள் நகர நகர சலிப்பை தருகிறது. அதிலும் இறுதிக் காட்சியில் பகாசூரன் யார் என்று அவர் தெரிவிக்கும்போது, 'அட போங்கப்பா..!' என்ற மனநிலை பார்வையாளர்களுக்கு வந்துவிடுகிறது.

இயக்குநர் மோகன் ஜி, சமூக பொறுப்புள்ள படைப்பாளி என விளிக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர். ஆனால், அவர் ஆணாதிக்க சிந்தனையுள்ள இயக்குநர் மட்டுமே என்பதை இந்தப் படத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். 

பெண்களை போகப் பொருளாக பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் படைப்பில் அரைகுறை ஆடைகளுடன் நடனத்தை திணித்து, வணிக சினிமாவுடன் சமரசம் செய்துகொண்டிருப்பது நெருடல்.

முதல் பாதி திரைக்கதை பரபர என்றாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை மிகப் பழசு என்பதால் 'கொட்டாவி' வருகிறது. அதிலும் கைப்பேசிகளை பெண்கள் பயன்படுத்தும்போது அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுரை தருவது பொருந்தாதது மட்டுமல்ல, ஏற்கக்கூடியதுமல்ல.

இவருடைய திரைப்படங்களில் கலாசார குறியீடுகள் மிகுதியாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் கடலூர் பகுதியில் குறி சொல்லும் குறிகாரர்கள் தங்களின் கைகளில் தங்க நிற வளையம் ஒன்றை வைத்திருப்பதாக பதிவு செய்திருப்பது கலாசார வரலாறு. 

பீமன் வேடத்தை தொடர்ந்து ஏற்று கூத்து கட்டும் கலைஞனான பீமராசு என்னும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில், மகாபாரதத்தில் அசுர வதம் எப்படி நிகழ்ந்ததோ அதேபோல் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை வதம் செய்வதும் கவனம் பெறுகிறது.

ஒரேயொரு பெண் பிள்ளையை பெற்றவர்கள் அப்பிள்ளையை அகாலத்தில் பறிகொடுத்த பிறகு துறவறம் பூணலாம் என கோடிட்டு காட்டியிருப்பது சரியா, தவறா என்பது விவாதத்துக்குரியது. அதிலும், தவறு செய்தவர்களை தண்டித்தவர்களையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என செல்வராகவன் கதாபாத்திரத்துக்கு நியாயம் கற்பித்திருப்பது 'தேவையில்லாத ஆணி' என்றே தோன்றுகிறது. 

அதேபோல் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்களை சமூக நீக்கம் செய்யும்போது காவல்துறையை மௌனப்படுத்தியிருப்பதும் இயக்குநரை கேள்விக்குள்ளாக்குகிறது.

இருப்பினும், செல்வராகவன் என்ற ஒற்றை கலைஞனுக்காக பகாசூரனை ஒரு முறை தரிசிக்கலாம்.

பகாசூரன் - பலவீனமான அசுரன்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03