நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றிகள் : பங்களாதேஷ், அயர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேற்றம்

Published By: Nanthini

18 Feb, 2023 | 10:58 AM
image

(என்.வி.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் தத்தமது முதலாவது வெற்றிகளை பதிவு செய்து, அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை உயிர் பெறச் செய்துகொண்டுள்ளன.

அதேவேளை தமது 3ஆவது நேரடி தோல்விகளை தழுவிய பங்களாதேஷும் அயர்லாந்தும் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்து, முதல் சுற்றுடன் வெளியேறவுள்ளன.

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான 1ஆம் குழு போட்டியில் 71 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

சுஸி பேட்ஸ் பெற்ற ஆட்டமிழக்காத அரைச் சதம், பேர்னடின் பெஸுய்டென்ஹூட், மெடி க்றீன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள்,  ஈடன் கார்சன், ஹனா ரோவ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. 

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து, 189 ஓட்டங்களை குவித்தது. 

இந்த வருடத்துக்கான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணியொன்று பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்துக்கு பேர்னடின், சுஸி ஆகிய இருவரும் 52 பந்துகளில் 77 ஓட்டங்களை பகிர்ந்து, சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பேர்னடின் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கை 107 ஓட்டங்களாக இருந்தபோது அமேலியா கேர் (16), அணித் தலைவி சொஃபி டிவைன் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் சுஸியும் மெடியும் ஜோடி சேர்ந்து  பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.

சுஸி பேட்ஸ் 61 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 81 ஓட்டங்களுடனும் மெடி க்றீன் 20 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

190 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 118 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

ஷொர்ணா அக்தர் (31), முர்ஷிதா காத்துன் (30), ஷமிமா சுல்தானா ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஈடன் கார்சன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ஹனா ரோவ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதல் வெற்றி

கெப் டவுனில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு நடைபெற்ற 2ஆம் குழு போட்டியில் அயர்லாந்தை 6 விக்கெட்களால் மிக இலகுவாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.

அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்ததன் பலனாக மேற்கிந்தியத் தீவுகள்  ஒரு பந்து மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 137 ஓட்டங்களை பெற்றது.

மூன்றாம் இலக்க வீராங்கனை ஓலா ப்ரெண்டர்காஸ் 47 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 61 ஓட்டங்களை பெற்றார். அவரை விட அமி ஹன்டர் (38), எய்மியர் றிச்சர்ட்சன் (15) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் தங்களது அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ஷமிலா கொனல் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், கரிஷ்மா ராம்ஹாரக் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அஃபி ப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹேலி மெத்யூஸ் 53 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 66 ஓட்டங்களை பெற்றார். அவரை விட சினெல் ஹென்றி 34 ஓட்டங்களையும், ரஷாடா வில்லியம்ஸ் 17 ஓட்டங்களையும், ஷபிக்கா கஜ்னாபி 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35