உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. 

அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது.

உலக ஆயுத விற்பனை வர்த்தகத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இரண்டாவது நிலை விற்பனையில் பிரான்ஸ் 15 பில்லியன் டொலர்களும், ரஷ்யா 11.1 பில்லியன் டொலர், சீனா 6 பில்லியன் டொலர்கள் என தமது ஆயுத விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன.

இதில் அமெரிக்கா 4 பில்லியன் , பிரான்ஸ் 9 பில்லியன், மற்றும் சீனா 3 பில்லியன் டொலர்கள் என தமது விற்பனையை அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் சிரிய யுத்தத்தை தலைமையேற்று நடத்தும் ரஷ்யா 2014 ஆம் ஆண்டை விட 2015 இல் ஆயுத விற்பனை சரிவை கண்டுள்ளது. ஆயுத கொள்வனவில் கட்டார் சுமார் 19 பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. அடுத்தப்படியாக எகிப்து 12 பில்லியன், சவூதி அரேபியா 8 பில்லியன் டொலர்கள் எனவும் கொள்வனவு செய்திருக்க, இந்நாடுகளுக்கு அடுத்த நிலையில் தென் கொரியா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் அதிக ஆயுத கொள்வனவில் ஈடுபட்டுள்ளன.

குறித்த தரவுகள் அமெரிக்க பாராளுமன்ற ஆய்வறிக்கை குழுவால் வெயிடப்பட்டுள்ளன. அத்தோடு 2014 ஆம் ஆண்டு 89 பில்லியன் டொலர்கள் விற்பனையான உலக ஆயுத சந்தையானது 2015 ஆம் ஆண்டு 80 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சரிந்துள்ளது.

இருப்பினும் உலக அமைதிக்காக பாடுபடுவோம் என சூலுரைக்கும் அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான ஆயுத விற்பனையை முன்னெடுத்து வருகின்றமை கவனிக்கத்தக்க விடயமாகும்.