2023 - 2025 சனிப் பெயர்ச்சிக்கான பொது பலன்கள்

Published By: Nanthini

16 Feb, 2023 | 04:36 PM
image

சுபகிருது தமிழ் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் திகதி 29.03.2023 புதன்கிழமை பகல் 01.06 மணிக்கு அவிட்டம் 2ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் 3ஆம் பாதம் கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியுடன் நாட்டு நடப்புகள் இனி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். 

கால புருச தத்துவப்படி, சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்தில் அமர்கிறார். இதுவரை சொந்த தொழில் செய்து வந்தவர்களுக்கு வருமானம் திருப்தியற்று காணப்படுகிற நிலையில், இனி, அவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய தொழில்நுட்ப உதவியுடன் பல நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்வார்கள். நிலக்கரி சுரங்கங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படும். கறுப்பு நிறம் வளர்ச்சி, வளத்தை கொடுக்கும். 

இரத்த சோகை நோய் குணமடைய புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய சலுகைகள்  கிடைக்கும். 

வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நினைத்தபடி வேலை கிடைக்கும். புதிய வாகனம், புதிய உலோகம் கண்டுபிடிக்கப்படும். அதன் மூலம் உலக நாடுகளில் வர்த்தக வசதிகளை உண்டாக்குவார்கள். 

அரசியல் தலைவர்கள் தண்டனைகள் (தவறு செய்தால்) கிடைக்கப் பெறுவார்கள். 

முதலீடு இல்லாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் வீரியமடையும். 

மலை பிரதேசங்களில் தீ விபத்து உண்டாகும். வடகிழக்கு பருவ மழை தீவிரமாகி, கூடுதல் மழை பெய்து, பெருத்த சேதத்தை கொடுக்கும்.  

கடல்வழி போக்குவரத்தில் கூட்டு முயற்சிகளால் நாடுகளுக்கு புதிய ஒப்பந்தம் உருவாகும். பசு மாடுகள் புதிய நோயால் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படும். 

இராணுவ படைகளில் புதிய ஆட்சேர்ப்பு காணப்படும். மலிவான விலைகளில் உடல் நலக்கேடு விளைவிக்கும் உணவுப் பண்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் விற்பனைக்கு வந்து மக்கள் அவதியுறுவதை காண நேரும். மக்கள் அடிக்கடி அதிர்ச்சி தரும் சம்பவங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

பொது பரிகாரம்: அடிக்கடி ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்யுங்கள். ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள். மருத்துவர்கள் ஒரு சிலருக்காவது இலவசமாக மருந்துகளை கொடுத்து புண்ணியம் தேடுங்கள்.

 சனி பகவான் என்பவர்...

இயற்பெயர்  - சனீஸ்வரர்

துணை பெயர்கள் - மந்தன், காரி

தந்தை பெயர்  - சூரிய நாராயணர்

தாயார் பெயர்  - சாயா

திசை ஆண்டுகள்  - பத்தொன்பது (19)

சொந்த வீடு - மகரம், கும்பம்

உச்ச வீடு  - துலாம்

நீச வீடு - மேஷம்

பார்வையிடும் இடம்  - 3, 7, 10 

ஒரு ராசியில் தங்கும் காலம்    - 2½ ஆண்டுகள் (4இல் அர்த்தாஷ்டம சனி, 7இல் கண்ட சனி, 8இல் அட்டம சனி, 12இல் விரைய சனி, ராசியில் ஜென்ம சனி, 2இல் குடும்ப சனி/பாத சனி)

சமித்து - வள்ளி

தானியம் - எள்

உபயோகம் - காரியம், இரும்பு

நவரத்தினம் - நீலக்கல் 

ஆடை - நீலம், கறுப்பு

பஞ்சபூதம் - ஆகாயம்

மலர் - கருங்குவளை, நீல சங்குப்பூ

வாகனம்  - காக்கை

நைவேத்தியம்  - எள் சாதம்

அதிதேவதை - யமன், கால பைரவர்

திசை - மேற்கு

பரிகார தலம் - திருநள்ளாறு, குச்சனூர்

நட்சத்திரம் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள்: கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்.

உச்ச பலன் பெறும் ராசிகள்: மேஷம், கன்னி, தனுசு.

12 ராசிகளுக்கான சனிப்‍ பெயர்ச்சிப் பலன்கள் (2023 - 2025)

          மேஷம்

விரும்பிய வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இதுவரை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து, விரய ஸ்தானத்தை பார்வையிட்ட சனி பகவான், இனி லாப ஸ்தானத்தில் அமர்ந்து, ராசியை பார்க்கவிருக்கிறார்.

கடந்த காலத்தில் எந்த தொழிலும் இல்லாமல் இருந்தவர்களுக்கு தொழில் அமையும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். 

உங்களின் பிறவிக் கர்ம வினைகளை விடுவித்துக்கொள்ள ஆன்மிக பரிகாரங்களை செய்து மீண்டிருப்பீர்கள். இனி இந்த லாப ஸ்தானத்தில் உங்களுக்கு முழுமையான யோக சனியாக வரவிருப்பது நல்ல பலனை தரும். 

பிறந்த ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தால், இந்த நற்பலன்கள் கிடைக்காது. ராசிக்கு 6ஆம் இடம், 8ஆம் இடம் 12ஆம் இடத்தில் சனி இருந்தாலும் நற்பலன்கள் இருக்காது. 

மற்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பும், அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும். படித்துவிட்டு நல்ல வேலையை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு வேலையும் பொருளாதார மேன்மையும் உண்டாகும்.

வெளிநாட்டு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சிலவேளைகளில் பலருக்கு வேலை கொடுக்கக்கூடிய தொழிலை செய்து வளம் பெறுவீர்கள். 

தாய்வழிச் சொத்து சிலருக்கு கிடைக்கும். பழைய வழக்குகள் நிலுவையிலிருந்து முடிவுக்கு வரும். கடுமையான உழைப்பால் உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். 

வாகன ஓட்டிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் அமையும். புத்திரர்களுக்கு வேலையும் திருமணமும் நடக்கும். வெளியூரிலிருந்து பணி செய்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு அருகில் பணி கிடைத்து அலைச்சலை தவிர்ப்பீர்கள். 

பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உடல்நல குறைவால் அவதிப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். உறவுகள் பலப்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள்.

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபடுங்கள். பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை சாற்றிவந்தால், உங்கள் வாழ்வு வளம் பெற்று, பொருளாதார மேன்மை அடைவீர்கள்.

            ரிஷபம்

முக வசியத்தால் அனைவரையும் கவரும் ரிஷப ராசி வாசகர்களே!

இதுவரையிலும் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனி, இனி தொழில் ஸ்தானத்துக்கு வரவிருக்கிறார். 

இந்த சனி பகவான் உங்களின் ராசிக்கு யோகாதிபதி என்பதால் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும்போது புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும், சுகமான வாழ்க்கையும் அமையப் பெற்றிருப்பீர்கள். 

இனி 29.03.2023 முதல் தொழில் ஸ்தானத்துக்கு சனி வந்தமர்வதும், விரய ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் வாழ்வினை வளம்பெறச் செய்யும். 

தர்ம கர்மாதிபதி யோகத்தை பெற்றுள்ள நீங்கள், தான தர்மங்களை செய்வதோடு, ஊரில் முக்கிய பிரமுகராகும் வாய்ப்பினையும் பெறுவீர்கள். உங்களை சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொள்வீர்கள். 

அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் அந்தஸ்து கூடும். ஏனையோர் உங்கள் வசப்படுவர். 

கடல் கடந்த வாணிபம் நல்ல வளர்ச்சியை தரும். கொடுக்கல் - வாங்கல் சிறப்பாக இருக்கும். வாகன சாரதிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். 

சுற்றுலா ஸ்தாபனம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

பலருக்கு உணவளித்து பசியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். புத்திர, புத்திரிகளுக்கு வேலையும் திருமணமும் நடக்கும். நேர்மையாக வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். 

கடந்த கால வாழ்க்கை முறைகளிலிருந்து விடுபட்டு, விருப்பமான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். 

தீய பழக்கம் உள்ளவர்கள் அதனை மறந்து நல்ல பழக்கங்களுக்கு உங்களை வழக்கப்படுத்திக்கொள்வீர்கள். 

சமையல் கலைஞர்கள் வாழ்க்கையில் மேன்மையடைய சந்தர்ப்பம் அமையும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல்நல குறைபாடுகளிலிருந்து மீண்டு நலம் பெறுவீர்கள். 

உங்களின் கர்ம வினைகளை தீர்த்துக்கொள்ள பரிகார பூசைகளை செய்து, ஆன்மீக பலம்  பெற்று வளமாக வாழ்வீர்கள். 

எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் சிலருக்கு நல்ல வருமானத்தை பெற்றுத் தரும். பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும்.

பரிகாரம்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி வரையிலான ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, மிளகு கலந்த வெண்பொங்கல் வைத்து, வழிபட்டு வர, உங்களின் வாழ்வில் நினைத்த காரியம் கைகூடும்.

         மிதுனம்

பேச்சு வன்மையும் கவர்ச்சியும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!

இதுவரையிலும் அட்டம சனியாக இருந்து வந்த சனி பகவான், பல்வேறு குடும்ப பிரச்சினை, மன அமைதியின்மை, கடன் தொல்லை, உடல் நல குறைவுகள் மற்றும் பல அவமானங்களையும் அளித்திருப்பார். 

இனி 29.03.2023 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்வது உங்களின் லட்சிய கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெல்லும் வாய்ப்பை அளிக்கும். இதனால் உங்கள் பொருளாதாரமும் மேன்மையடையும்.

முக்கியமாக, குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள், பொருளாதாரம், குடும்ப பிரச்சினை போன்றவற்றில் நீங்கள் எதிர்கொண்டு வரும் சங்கடங்கள் விலகும். அனைத்து துன்பங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும். இதுபோல பல்வேறு நன்மைகளை அடைவீர்கள். 

எதையும் நன்கு ஆலோசனை செய்து முடிவெடுக்கும் பண்பும் பக்குவமும் உங்களுக்கு உண்டாகும். 

எந்த தொழில் செய்தாலும், அதில் முதலீடு செய்யும் முன்பு நன்கு ஆலோசித்து, வருமானத்தை பெருக்கிக்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொள்வீர்கள். 

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு உரிய வேலையும் கிடைக்கும். 

சிலருக்கு ஒன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உண்டாகும். அதனூடாக முதலீடுகள் செய்து, ஆதாயம் பெறுவீர்கள். தனித் திறமையை வெளிப்படுத்தி பொருளாதாரத்தில் சிலர் மிகச் சிறந்த வளர்ச்சியை காண்பீர்கள். 

நீண்ட நாள் கடன் தொல்லையால் வாடியவர்கள், அதிலிருந்து மீள்வீர்கள். உடல்நல குறைபாடுகளிலிருந்து மீண்டு வருவீர்கள். உறவுகளுடன் இருந்துவந்த பகை உணர்வுகள் மறையும். 

குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஏனைய சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவீர்கள். 

சனி பார்வை குருவின் மீது இருப்பது உங்களுக்கு இன்னும் வளமான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்கும். தாயாருக்கு உடல்நல குறைவு உண்டாகும். சிலருக்கு வைத்திய செலவுகள் வந்துசேரும். 

அரசியலில் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உங்களது சமுதாய அந்தஸ்து உயர்ந்து, வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, பொருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் தொழில்நுட்ப வளர்ச்சியை பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு காலத்தில் மூன்று நல்லெண்ணெய் தீபங்களிட்டு, தொடர்ந்து வழிபட்டு வர, உங்களது அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும்.

         கடகம்

விடாமல் முயற்சி செய்து லட்சியத்தை வெல்லும் கடக ராசி வாசகர்களே!

இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு அட்டம சனியாக வருவது, தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய காலம் என்பதை உணர்த்துகிறது. 

கண்ட சனி முடிந்து, அட்டம சனியாக 29.03.2023 முதல் வருவதானது, சற்று கவனத்தோடு செயற்பட வேண்டிய காலமாக அமையும். 

எதையும் முன்கூட்டியே யோசித்து, எதிலும் அவசரமின்றி நிதானமாக செயற்படுவது நல்லது. இந்த ஆண்டு வக்கிரமாகி, மீண்டும் மகர ராசிக்கு சென்று டிசம்பரில் மீண்டும் கும்பத்துக்கு சனி வருகிறார். 

ஏப்ரல் வரை குரு பார்வை ராசிக்கு இருப்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 

எதிலும் ஆலோசனை பெற்று செயற்படுவது நல்லது. முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மூலம் சிலர் புதிய பொறுப்புகளை பெற்று செயற்படவேண்டி வரும். 

அட்டம சனி என்றால் அனைத்துக்கும் பயப்பட வேண்டியதில்லை. பிணையம் இடுவதை தவிர்க்கவும். பிணையம் போடாவிட்டால் அவரின் தொடர்பு துண்டிக்கப்படும் என்றாலும், அதை நினைக்காமல் உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை மாற்றிக்கொள்ளும்படி அமைத்துக் கொள்ளவும். 

அதிகம் யாருடனும் பேசுவதை தவிர்த்து, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்படி இருந்து வந்தால், எந்த பிரச்சினையும் வராது. கலைத்துறையினருக்கு வாய்ப்பு அமைந்தாலும், பொருளாதார நிலை சற்று குறைவாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்க நிகழ்காலத்தில் நடப்பதை மட்டும் யோசித்து செயற்படுங்கள். எதிர்காலம் தானாக அமையும். 

குடும்பத்தில் என்ன பிரச்சினை வந்தாலும், அமைதியாக இருந்துவிடுங்கள். விளையாட்டுத்துறையினருக்கு நல்ல ஆரோக்கியமான போட்டி அமையும். 

கடன் பெற்று கடன் தீர்ப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களுடன் கூட்டுத் தொழில் செய்வது, ஒன்லைன், லொத்தர் தொழில்களில் கூடுதல் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுங்கள். 

கணவன் - மனைவி சச்சரவுகளை குறைத்துக்கொண்டு, சுகமாக வாழ விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

பரிகாரம்: சனி கிரகத்துக்கு சனிக்கிழமைகளில் எட்டு அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்யவும். அல்லது ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவருக்கு எட்டு தீபங்களை நல்லெண்ணெயில் ஏற்ற கஷ்டம் விலகி, நன்மை உண்டாகும்.

        சிம்மம்

தனித் திறமையுடன் என்றென்றும் செயற்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இதுவரை 6ஆம் இடத்தில் யோக சனியாக இருந்தவர், இனி கண்டக சனியாக கும்ப ராசிக்கு 29.03.2023 முதல் இடம்பெயர்கிறார். 

சிம்ம ராசியை சனி பார்வையிடுவதோடு, பாக்கிய ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுவது, உங்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. 

உணவு விடயத்தில் கவனம் செலுத்தி, வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நன்மையை தரும். இருக்கும் தொழிலை விருத்தி செய்துகொள்வதுடன் வருமானத்தை பெருக்கிக்கொள்வீர்கள். 

எதையும் முன்கூட்டியே யோசித்து செயற்பட்டாலும், கடைசியில் எதையாவது மறந்துவிடுவது, ஒரே வேலையை பல முறை செய்வது போன்ற சூழ்நிலைகள் உண்டாகும். 

கணவன் -/ மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளிடம் ஏதாவது சச்சரவுகள் உண்டாகும். இவை எல்லாம் தற்காலிகமான நிகழ்வுகளாக இருக்கும். 

நிரந்தரமான பாதிப்பை தராது என்றாலும், எதையும் விட்டுக்கொடுத்து சென்றால், வரவேண்டிய துன்பம் நீங்கும். 

பல நாட்கள் மறைத்து வைத்திருந்த விடயங்கள் வெளிப்படும் சூழ்நிலை உண்டாகும் என்பதால் வருமானத்துக்கு வழி செய்பவர்களிடம் உண்மையாக இருங்கள். 

எந்த காரியத்திலும் வழக்கம் போல தைரியமாக செயற்படுங்கள். மனபயம் உருவாகிவிட்டால், உங்களின் காரியம் கெட்டுவிடும். 

விடாபிடியான உங்களின் செயல்களால் எதையும் எளிதாக வெல்வீர்கள். சிலருக்கு சிறுநீரக பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. 

எந்த தொழிலாக இருந்தாலும், உங்களுக்கு சிறப்பாக அமையும். குறைந்த முதலீடுகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். எதற்காகவும், யாரிடமும் உங்களின் நிலையை தாழ்த்திக்கொள்ள மாட்டீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். 

கண்டக சனி பெரும்பாலும் உடல் நல குறைவினை மட்டும் தரும். உயிருக்கு பாதிப்பை தராது. உடல் நலனில் தனி கவனம் செலுத்தி, கண்காணித்தால் நற்பலன்களை பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு காலத்தில் மூன்று வேப்பெண்ணெய் தீபங்களிட்டு வணங்கி வர, குடும்பத்தில் சுபீட்சமும், தொழிலில் வளமும் உண்டாகி பொருளாதார வளம் பெறுவீர்கள்.

         கன்னி

காலத்தை கண்டு கலங்காமல் எதையும் சாதிக்கும் கன்னி ராசி வாசகர்களே!

இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து வந்த சனி பகவான், இனி 6ஆம் இடமான சத்ரு ஸ்தானத்துக்கு வரும் 29.03.2023 முதல் கும்பத்துக்கு பெயர்கிறார். 

இந்த காலத்தில் உங்களுக்கு யோக சனியாக தோன்றி, எதிரிகளிடமிருந்து விடுதலை தருவார். வாழ்வில் மேன்மை அடையும் வாய்ப்பை பெறுவீர்கள். 

கடந்த சில காலமாக பல்வேறு குடும்ப மற்றும் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து செய்வதறியாமல் திகைத்து வந்தீர்கள். 

இனி அதற்கு அவசியமில்லாமல் பட்ட கடனை அடைக்கும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். இதுவரை உங்களை நம்பவைத்து ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். 

பாதியில் நின்ற காரியங்கள் இனி புதிதாக தொடங்கும். நீண்ட நாள் வழக்கு முடிவுக்கு வரும். பல நாட்கள் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நீங்கள் நோய் நிலையிலிருந்து விடுபடுவீர்கள். 

கலைத்துறையினர் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். எந்த முடிவையும் உறுதியுடன் எடுத்து வளம் பெறுவீர்கள். சகோதரர்களிடம் சச்சரவு நீங்கி சுமுகமான, நல்ல உறவுகள் உண்டாகும். 

கணவன் -/ மனைவி ஒற்றுமை நீடிக்கும். புத்திரர்களுக்கு நல்ல வேலையும் மனவலிமையும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பிறப்பு ஜாதகத்தில் உள்ள சனி, அதன் பலத்தை பொருத்து உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை பெற்றுத் தருவார். 

இதுவரை உங்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்பட தொடங்கும். காரணமில்லாத காரியங்கள் இனி இருக்காது. வீண் அலைச்சல் மறையும். தொழிலாளர்களின் போக்கு சுமூகமான நல்லுறவுகளாக மாறி, நல்ல பலன்களை பெறுவீர்கள். 

வழக்கறிஞர்கள், மருத்துவ உதவியாளர்கள், கூலி தொழிலாளர்களுக்கு வருமானம் பெருகும். மாணவர்கள் விரும்பிய பாடத்தை, விரும்பிய கல்வி நிலையத்தில் பெற்று, உயர்கல்வியை  கற்று, வாழ்வை மேம்படுத்திக்கொள்வீர்கள். 

உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். உங்களின் வசதியை பெருக்கிக்கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் உங்களின் திறமை வெளிப்பட்டு, மேலும் நல்ல வளமான வாழ்வு அமையப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, மிளகு கலந்த அன்னம் வைத்து வழிபட்டு வர, சகல வளமும் பெற்று, பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள்.

      துலாம்

வளமான வாழ்வை விரும்பி, திட்டமிட்டு செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு அர்தாஷ்டம சனி காணப்பட்டதால் பல்வேறு சுக கேடுகள், வாகன பழுது, மன ரீதியான பிரச்சினைகளுக்கு உட்பட்டு வந்தீர்கள். 

இனி வரும் 29.03.2023 முதல் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து, தன ஸ்தானத்தை பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இதனால் இதுவரை பட்ட துன்பங்கள் விலகி, பல நன்மைகளையும் அடையவிருக்கிறீர்கள். 

உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி முதல் காலத்திலிருந்தே தொழிலில் உங்களுக்கு மேன்மையான வளர்ச்சியை பெற்றுத் தருவார். 

வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஒருமித்த வாகன ஓட்டத்தையும், சுற்றுலாவுக்கு செல்வதற்கான வாகன வசதிகளை பெருக்கி தருவீர்கள். இதன் மூலம் ஆதாயமும் பெறுவீர்கள். ஒப்பந்த அடிப்படையில் உங்களுக்கு வேலையாட்களும் அமையப் பெறுவர். 

தொழில் செய்பவர்கள் மேலும் நல்ல பலன்களையும் பொருளாதார மேன்மையையும் அடைவார்கள். தனித் திறமையுடன் செயற்படும் வலிமையை பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சட்டத்துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் வழக்குகள் முடிவுக்கு வரும். 

விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு விவசாயம் செழிக்கும். தேங்கிக் கிடந்த தொழில் விருத்தி தரும். 

சுவாதி நட்சத்திரக்காரர்கள் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவீர்கள். மூன்று முறை குருப்பெயர்ச்சி வரும் காலத்தில் குரு பார்வையால் கனவாக இருந்த அனைத்தும் நனவாக அமையப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் உண்டாகும். 

பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினை நல்லதொரு முடிவை உண்டாக்கும். பொருளாதார நிலை மேன்மை பெறும். 

குடும்பத்தில் இருந்து வந்த கணவன் - மனைவி சண்டை சமரசமாகும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். அதிக தூர பயணங்கள் தொடர்ந்து வரும். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் தவறாமல் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து, துளசி, வெற்றிலை மாலை சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். வளமும் சிறந்த முன்னேற்றமும் பெறுவீர்கள்.

     விருச்சிகம்

புகழ்ச்சிக்கு மயங்காத பண்புள்ளம் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இதுவரை உங்களுக்கு 3ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்து தைரியத்தையும் மனவலிமையையும் தந்தார். 

இனி வரும் 29.03.2023 முதல் அர்தாஷ்டம சனியாக அமர்ந்து உங்களது ராசியை பார்க்கிறார். அத்தோடு 6ஆம் இடத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார். இந்த காலங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது. 

பொது பலன் என்பதால் அவரவர் சுய ஜாதகத்தில் சனி பலமாக இருக்கும் காலத்தில் நற்பலன்களை பெற்று, நன்மைகள் பெறுவர். யாருக்கும் பணம், பொருள், பிணையம் தரக்கூடாது. இதனால் பல சிரமங்களை அடைய வேண்டிவரும். 

குடும்பத்தில் அமைதியாக இருந்து, பிரச்சினைகளுக்கு எது தீர்வு என்று ஆராய்ந்து, அதன்படி செயற்பட வேண்டும். 

பிள்ளைகளுக்கு கல்விக்கு தேவையான பொருட்களை ஈட்ட சில கஷ்டங்களை அடைய வேண்டியிருக்கும். 

வாகனங்களுக்கு அடிக்கடி பழுது வரும் என்பதால் முடிந்தளவு எச்சரிக்கையாக கவனமாக பராமரித்து அவதானத்தோடு வாகனம் செலுத்த வேண்டும். அத்துடன் நிதானமாக பயணம் செய்வதும் நல்லது. 

மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் தங்கும் இடங்களில் பொறுமையுடன் செயற்படுவதும், பிறரிடம் விட்டுக்கொடுத்து செல்வதும் நன்மை தரும். 

தொழில் செய்யுமிடத்தில் தனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்து வருவது நல்லது. 

புதிய கூட்டுத்தொழில் தொடங்கும் முன் கூட்டாளிகளின் நம்பிக்கையை உறுதி செய்துகொள்ளுங்கள். அதன் பின்பு தொழிலில் ஈடுபடுவது நல்லது. 

ஒன்லைனில் அதிகமான முதலீடுகளை தவிர்த்துவிடுங்கள். புண்ணிய யாத்திரை சென்று வருவது நல்லது. மூன்று முறை குருப்பெயர்ச்சி வருவதால் குரு பார்வை பெறுமிடங்கள் மூலமாக பெரிய பாதிப்புகள் எதுவும் வராது. 

உங்களுக்கு பக்கபலமாக உங்களின் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் அவர் உங்களுக்கு ஊக்கமளித்து உதவுவார்.

எதற்கும் தீர்வு வழிபாடு மட்டுமே என்பதால் ஆன்மீக வழிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஏதாவது கோவிலுக்கு சிறு உதவிகளையும், உழவார பணிகளையும் செய்து வருவதன் மூலம் எல்லா பிரச்சினைகளையும் ஓரளவு தூர நிறுத்தலாம்.

பரிகாரம்: சனி, ஞாயிறுகளில் ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபங்களிட்டு வழிபட வேண்டும். தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வணங்கி வர உங்களின் வாழ்வு வளமாக இருக்கும்.

         தனுசு

தைரியத்துடனும் துணிச்சலுடனும் செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!

இதுவரை ஏழரை ஆண்டு காலம் சனி பகவான் உங்களை பல வழிகளில் தொல்லைகளையும், குடும்பத்தில் பல்வேறு சச்சரவுகளையும் கொடுத்து பல அனுபவங்களை பெற்று தெளிவடையச் செய்திருப்பார். 

இனிவரும் 29.03.2023 முதல் உங்களின் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து, உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத் தருகிறார். இதன் மூலம் உங்களுக்கென்று தனித்திறமை கொண்டு விளங்கிட தனித்தகுதியை உருவாக்கிக் கொள்வீர்கள். 

சனி, யோகச் சனியாக வருவதால் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பது இன்னும் சிறந்த நற்பலன்களை பெற்றுத் தரும். 

எந்த தொழில் செய்தாலும், அதில் முன்னேற்றம் காண்பீர்கள். பலருக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லும் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

இதுவரை இருந்துவந்த கடன் தொல்லைகள் நீங்கி எல்லா வளமும் பெறுவீர்கள். அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருதல், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று வருதல் போன்ற பல மனதுக்கு இதமான விடயங்கள் உங்கள் வாழ்வில் புதிய அனுபவத்தை பெற்றுத் தரும். 

பல தொழில்களை செய்து அனைத்திலும் பல இழப்புகளை சந்தித்து வந்த நீங்கள், இனி துணிந்து எந்த காரியத்தையும் செய்யும் வல்லமையையும் பெறுவீர்கள். 

கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த பல உறவுகளும் நண்பர்களும் அதனை மறந்து, உங்களுடன் இணைவார்கள். 

விளையாட்டுத்துறை, கலைத்துறையினருக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்று உணர்வுகள் எழும். நினைத்தபடி அதனை செயல்படுத்தும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு நீங்கள் விரும்பிய கல்வி கிடைத்து நற்பலன்களையும் கல்வியில் மேன்மையையும் அடைவீர்கள்.

வேலை தேடி வருபவர்களுக்கு வேலையும், வெளிநாட்டு வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். இந்த யோக சனி காலத்தை பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு, தூப தீபம் காட்டி வர அனைத்து காரியமும் நினைத்ததை விட நன்றாக அமையும். பொருளாதாரமும் உயரும்.

        மகரம்

மன துணிச்சலுடன் எதையும் செயல்படுத்தி வளம் பெறும் மகர ராசி வாசகர்களே!

இதுவரை ஜென்ம சனியாக இருந்த ராசிநாதன் சனி பகவான், இனி பாத சனியாக அமர்கிறார். 

விரைய சனியில் பல்வேறு பண இழப்பு, உடல் நல குறைவுகளால் பாதிப்பை பெற்று, ஜென்ம சனியில் எதையும் செயல்படுத்த முடியாமல் தவித்து வந்த உங்களுக்கு, இனி பாத சனி நல்ல தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் தருவார். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவியும் இடமாற்றமும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை விளங்கும். அரசியலில் புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுய செல்வாக்கு மேலும் உயரும். 

குடும்பத்தில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரை புதிய அனுபவங்களை பெற்ற நீங்கள் மென்மேலும் நல்ல விடயங்களை செயல்படுத்தும் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். 

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் உதவியும் கிடைக்கும். 

மருத்துவத்துறையில் வளமான வளர்ச்சியை பெறுவீர்கள். 

காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி உங்களின் செயல்களை அமைத்துக்கொள்வீர்கள். குடும்ப நலன் கருதி பல விடயங்களில் விட்டுக்கொடுத்து வளம் பெறுவீர்கள். 

'முடியாது' என்றிருந்த காரியத்தை கூட முடியும் என்று நிரூபித்துக் காட்டுவீர்கள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். கலைத்துறையினர் பிரபலமாகிவிடுவார்கள். 

அட்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நல குறைபாடுகளால் அவதியுற்று வந்தவர்களுக்கு முறையான மருத்துவத்தால் முன்னேற்றகரமான உடல்நல மாற்றம் உண்டாகும். 

பொருளாதாரம் மேம்படும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வளமான வாழ்வு அமையும். அரசாங்க உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் விளையாட்டுத் திறமையால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயரை தேடி தருவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து, மூன்று நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி, அரளிப்பூ மாலை, எள் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வர, சகல காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.

       கும்பம்

திடமான நம்பிக்கையும் ஆளுமை திறனும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு விரய சனியாக இருந்து வந்த ராசிநாதன் சனி பகவான், இனி ஜென்ம சனியாக 29.03.2023 முதல் ராசியில் அமருகிறார். 

விரய சனி காலங்களில் பல்வேறு பிரச்சினைகளையும், தேவையற்ற செலவுகளையும் செய்து, வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்களை சந்தித்து வந்தீர்கள். இனி ஜென்ம சனி உங்களுக்கு பெரிய துன்பத்தை கொடுக்க மாட்டார். 

இந்த ஏழரை சனி காலம் உங்களுக்கு புதிய அனுபவங்களை பெற்றுத் தரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். 

பாதியில் நின்ற காரியம் மீண்டும் தொடரும். பிறரால் பட்ட துன்பங்கள் விலகும். 

தொழில் முடக்கம், கடன் பெறுவதில் தாமதம், கோர்ட் வழக்குகளில் இழுபறி... போன்ற சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். 

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

சிறு உடல் உபாதை வந்து மறையும். ஞாபக மறதி அடிக்கடி வரும். அன்றாட செயல்களை பட்டியலிட்டு எழுதிவைத்து செயற்படுவதன் மூலம் உங்களின் காரியங்களை சரியாக செய்துகொள்ள ஏதுவாக இருக்கும். 

பழைய கடனை தீர்ப்பீர்கள். சொத்தினை விற்றால் கடன் தீரும் என்று முயற்சி எடுத்தும், சொத்தை விற்க முடியாமல் தடைப்பட்டு வந்த நிலை மாறி, சொத்தினை விற்றேனும் கடன் முழுவதையும் அடைப்பீர்கள். 

தொழில் செய்து வருபவர்களை பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து ஊக்கப்படுத்துவார்கள். நோயினால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள், பாட்டி வைத்தியத்தால் குணமடைவீர்கள். அடுத்தவரை நம்பிக்கொண்டிருந்தவர்கள், சொந்த காலில் நின்று, சுயதொழில் செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.

புதிய திட்டங்களை செயற்படுத்த தேவையான விடயங்களை தெரிவுசெய்து, நல்ல பலனை பெறுவீர்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல காலம் கனியும்போதே அதை பயன்படுத்தி வளமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் மாலை 4.30 - 6 மணிக்குள் பைரவருக்கு 27 மிளகுகளை சிவப்புத் துணியில் கட்டி, நல்லெண்ணெய் தீபம் தொடர்ந்து போட்டு வர, உங்களின் அனைத்துவித காரியமும் சிறப்பாக நடக்கும்.

       மீனம்

வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் மீன ராசி வாசகர்களே!

இதுவரை லாப ஸ்தானத்திலிருந்து உங்களின் ராசியை பார்த்துக்கொண்டிருந்த சனி பகவான், இனிவரும் 29.03.2023 முதல் விரய சனியாக இரண்டரை ஆண்டுகாலம் அமரவுள்ளார்.

இதனூடாக உங்களின் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும் படிப்பினைகளையும் வழங்கவிருக்கிறார். 

ஏழரை சனி என்றால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களின் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் விரய சனியில் மட்டும் சில விடயங்களை கடைபிடித்து வந்தால் எல்லாம் சரியாகும். 

உங்களின் பிறப்பு ஜாதகத்தில் 6, 8, 12இல் மறையாமல் இருந்தால், சனி தொல்லை அதிகம் இருக்காது. சிலருக்கு ஏழரை சனியில் மிகப் பெரிய யோகத்தை கூட தந்துவிடுவார். 

'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டது போல திடீரென்று அதிர்ஷ்ட பலன்களும் கிடைக்கும். இருந்தாலும், விரய சனி காலத்தில் சுப விரயமாக மனை வாங்குவது, வீடு கட்டுவது, பிள்ளைகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களில் விரய செலவுகளை செய்து, விரய சனி பலன்களை சாதகமாக்கிக்கொள்வது நல்லது. 

புதிய தொழில் தொடங்குதல், கூட்டுத் தொழிலில் இணைதல் போன்ற காரியங்களை தள்ளிப்போடுவது நல்லது. 

ஆன்மிக வழியில் தெய்வ வழிபாடு மூலம் அனைத்தையும் செய்தால், சகலமும் வளம் பெறும். 

பணியில் கூடுதல் வேலைகளை பார்க்கும் சூழ்நிலை உருவாகும். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதும், அமைதியுடன் இருப்பதும் பிரச்சினை வராமல் காத்துக்கொள்வதும் நல்லது. 

காலத்தை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற முடியும். 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குலதெய்வ வழிபாட்டினை அடிக்கடி செய்துகொள்வதும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வர, ஏழரை சனியின் தாக்கம் குறைந்து நற்பலன் பெறுவீர்கள். வரும் முன் காப்போம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் எட்டு அகல் விளக்குகளை நல்லெண்ணெய் தீபமிட்டு, எறும்புக்கு அரிசி, சர்க்கரை இரையாக போட்டு வர, ஏழரை சனியின் பாதிப்பு குறைந்து நற்பலன்களை பெறுவீர்கள்.

கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்