மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி : நுகேகொடைக்கு 3 ; வத்தளைக்கு 2 சம்பியன் பட்டங்கள்

Published By: Digital Desk 5

15 Feb, 2023 | 05:16 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பெண்கள் பிரிவில் நுகேகொடை கூடைப்பந்தாட்டக்  கழகம் 3 சம்பியன் பட்டங்களை சூடி அசத்தியதுடன் ஆண்கள் பிரிவில் வத்தளை கூடைப்பந்தாட்டக் கழகம் 2 சம்பியன் பட்டங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக்கொண்டது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 4, 5, 10, 11, 12ஆம் திகதிகளில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கூடைபந்தாட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 65 அணிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றினர். 30, 35, 40, 45, 50, 55 ஆகிய வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 30, 35, 40, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒரு சில போட்டிகளைத் தவிர மற்றைய போட்டிகள் அனைத்தும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை தங்களது உற்சாகம் கலந்த ஆற்றல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, கயத் ஜயசிங்கவை பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கொண்ட கஜ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பூரண அனுசரணை வழங்கியதன் பலனாக மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது.

பெண்களுக்கான 30, 35, 40 ஆகிய வயதுகளுக்கு மெற்பட்ட 3 பிரிவுகளிலும் நுகோகொடை கூடைப்பந்தாட்டக் கழகம் சம்பியன் பட்டங்களை சூடி வரலாறு படைத்தது. சில வீராங்கனைகள் 2 வயது பிரிவுகளில் விளையாடி தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.

அதேவேளை, இந்த 3 வயது பிரிவுகளிலும் பென்குயின்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றமை மற்றொரு விசேட அம்சமாகும்.

இது இவ்வாறிருக்க இந்த சுற்றுப் போட்டியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியதுடன் கடைசிக் கட்டங்களிலேயே சம்பியன் அணிகள் தீர்மானிக்கப்பட்டன. குறிப்பாக ஆண்களுக்கான போட்டி முழு நேரத்தின்போதும் வெற்றியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின்போதும் சம நிலையில் முடிவடைந்ததால் 'கோல்டன் ஷொட்' மூலம் சம்பியன் அணி தீர்மானிக்கப்பட்டது.

30 வயதுக்கு மேற்பட்ட பிரிவு

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியதும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியதுமான  ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 'கோல்டன் ஷொட்' மூலம் கொழும்பு  கூடைப்பந்தாட்டக்   கழக அணியை வெற்றிகொண்ட புளூஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடிய இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் புள்ளிகள் தவறவிடப்பட்டன. ஆனால், ஒரு நிமிட கடந்ததும் இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. பதிலுக்கு பதில் புள்ளிகள் குவிக்கப்பட இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன.

இடைவேளைக்குப் பின்னரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போட்டி அமைந்தது. எந்த அணி சம்பினாகப் போகிறது என்பதை அனுமாணிக்க முடியாதவாறு இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றுக்கொண்டிருந்தன. கடைசி செக்கனில் புளூஸ் அணி 23 - 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. ஆனால், ஓசந்த உமயங்கன 3 புள்ளிகளைப் பெற ஆட்டம் முழு நேரத்தின்போது 23 - 23 என சமநிலையில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 2 நிமிட மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் புள்ளிகளைத் தவறவிட்ட வண்ணம் இருந்தன. இதனிடையே கொழும்பு கூடைப்பந்தாட்ட அணி ப்றீ ஷொட்கள் மூலம் 3 புள்ளிகளைப் பெற்று சம்பியனாவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம்! போட்டி முடிவடைய 0.250 செக்கன் இருந்தபோது கிளின்டன் ஜ்டெலொன் 3 புள்ளிகளைப் பெற்று ஆட்ட நிலையை 26 - 26 என சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கோல்டன் ஷொட் அடிப்படையில் சம்பியன் அணி தீர்மானிக்கப்படும் என மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். போட்டியை ஆரம்பிப்பதற்கான அம்புக்குறி (Arrow) புளூஸ் அணிக்கு அனுகூலமாக இருந்ததால் பந்து அவ்வணிக்கு வழங்கப்பட்டது.

போட்டி தொடர்ந்த 3ஆவது செக்கனில் துணிந்து செயற்பட்ட கிளின்டன்  ஜ்டெலொன்,  பந்தை கூடைக்குள் அற்புதமாக புகுத்தி புளூஸ் அணியை சம்பியனாக்கினார்.

நுகேகொடை கூடைப்பந்தாட்டக் கழகத்திற்கு 3 சம்பியன் பட்டங்கள்

பெண்கள் பிரிவில் நுகேகொடை கூடைபந்தாட்டக் கழகம் 3 சம்பியன் பட்டங்களை சுவீகரித்தது.

ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பென்குயின்ஸ் அணியை 24 - 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் நுகோகொடை கூடைபந்தாட்டக் கழகம் (NBC) வெற்றிகொண்டு சம்பியனானது. இடைவேளையின்போது என்.பி.சி. 13 - 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியிலும் இதே கழக அணிகள் பங்குபற்றின. அப் போட்டியில் 25 - 10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நுகேகொடை நுடைப்பந்தாட்ட கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.

போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய என்.பி.சி. 16 - 3 என முன்னிலையில் இருந்தது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவிலும் நுகேகொடை கூடைப்பந்தாட்டக் கழகம் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

இறுதிப் போட்டியில் பென்குயின்ஸ் அணியை துவம்சம் செய்த நுகேகொடை கூடைப்பந்தாட்ட கழகம் 31 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று தனது சம்பியன் பட்டங்களை 3ஆக உயர்த்திக்கொண்டது. அப் போட்டியின் இடைவேளையின்போது 16 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் நுகேகொடை கூடைப்பந்தாட்டக் கழகம் முன்னிலையில் இருந்தது.

வத்தளைக்கு 2 சம்பியன் பட்டங்கள்

வத்தளை கூடைப்பந்தாட்டக் கழகம் 2  சம்பியன் பட்டங்களையும் ஒரு உப சம்பியன் பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டது.

35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் மிகவும் விறுவிறுப்பை இறுதிப் போட்டியில் புல்ஸ் அணியை 20 - 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் வத்தளை கூடைப்பந்தாட்ட கழகம் வெற்றிபெற்று சம்பியனானது.

பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு இறுதிப் போட்டியில் பொலிஸ் அணியை 27 - 25 என்ற புள்ளிகள் கணக்கில் கடைசி நேரத்தில் வெற்றிகொண்ட வத்தளை கூடைப்பந்தாட்டக் கழகம் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் சம்பயினானது.

50 வயதக்கு மேற்பட்ட பிரிவில் வத்தளை கூடைப்பந்தாட்டக் கழகத்தை  41 - 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்ட மொறட்டுவை கூடைபந்தாட்டக் கழகம் சம்பியனானது. வத்தளை கூடைபந்தாட்டக் கழகம் 2ஆம் இடத்தைப் பெற்று திருப்தி அடைந்தது.

ஏனைய பிரிவுகளில் சம்பயினான அணிகள்

45 வயதுக்கு மெற்பட்ட பெண்கள் பிரிவில் ஓல்ட் விக்டரீஸ் அணியை 16 - 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஏஞ்சல்ஸ் அணி சம்பியனானது.

45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் நெட்ஸ் பின்க் அணியை 25 - 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்ட 76ers அணி சம்பியனானது. சம்பியனான அணியில் கஜ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கயத் ஜயசிங்க இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

55 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் ஓல்ட் பென்ஸ் கழகத்தை 21 - 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய புல்ஸ் அணி சம்பியனானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35