அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும் - 40 சிவில் சமூக அமைப்புக்களும் 89 தனிநபர்களும் கூட்டாக சுட்டிக்காட்டு

Published By: Nanthini

11 Feb, 2023 | 06:57 PM
image

(நா.தனுஜா)

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கின்றது. 

ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது. 

அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள், நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் தீவிரமாக்கும் என்று 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும், 89 தனிநபர்களும் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி சமூகம் மற்றும் சமயத்துக்கான நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், மனித உரிமைகள் அலுவலகம், சட்ட மற்றும் சமூக நிதியம், மக்களுக்கான சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் 89 தனிநபர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமையும் மீறப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது வன்முறைக் குழுக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறிப்பாக, அரசாங்கத்தின் 'சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்' இடம்பெறும் நாளில் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்துவது குறித்து நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய, எவ்வித குழப்பங்களோ அல்லது பொது மக்களுக்கான இடையூறுகளோ இன்றி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் ஊடாக அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்கள் கொண்டிருக்கும் உரிமை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதுமாத்திரமன்றி, இத்தாக்குதல்களின்போது கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் மருத்துவ மற்றும் சட்ட உதவியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக தற்போது நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை, வேலையிழப்பு, வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

நீண்ட கால யுத்தம் மற்றும் இனவாத அரசியலால் ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களும், மேலும் பலருக்கு கிடைத்ததாக கூறப்படும் 'சுதந்திரத்தின்' பின்னரும் தமக்குரிய அடிப்படை உரிமைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் துன்பப்பட்டு வருகின்றனர்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் முகங்கொடுத்துவரும் இப்பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தாமல், அவை தொடர்பில் குரல் கொடுக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்க முயல்வது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னைய அரசாங்கங்கள் கடைபிடித்த தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான கொள்கைகளும் அடக்குமுறை நடவடிக்கைகளுமே நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். 

எனவே, அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் தீவிரமாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பன இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகும். 

ஆனால், இந்த அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த உரிமையை மீறுகின்றது. ஆகவே, நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கமாக தலையிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02