(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அதிகார பகிர்வு விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முதலில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
13 ஆவது திருத்தத்திற்கு சர்வ கட்சி கூட்டத்தில் இணக்கம் தெரிவித்து விட்டு பொது மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள்.
நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் மார்க்கத்தை ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் ஊடாக காண்பித்துள்ளார்.
நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயாதீன உறுப்பினர் என குறிப்பிட்டுக் கொள்ளும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் உரிய தரப்பிடம் முறையிடுங்கள் அதனை விடுத்து போலி பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம்.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினருடன் விவாதத்தை மேற்கொள்ள தயாரில்லை, பயனுமில்லை, பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் நிதியமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் திறந்த விவாதத்தில் தனித்து ஈடுபட தயார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆறு மாத காலத்திற்குள் இருமுறை பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளார். சபாநாயகரின் ஆசனத்தில் இருந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்ற ஆசை ஜனாதிபதிக்கு உள்ளது, இதனால் இவர் பாராளுமன்ற கூட்டத்தொடரை அடிக்கடி ஒத்திவைக்கிறார். ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது, ஆகையால் நாங்கள் 09 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆறு மாத காலமாக எதனையும் செய்யவில்லை. வெளிநாட:டு கடன்களை மீள் செலுத்த முடியாது என அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அறிவித்தது. கடன் செலுத்தாமல் மிகுதியான 2 பில்லியன் டொலர்களை கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
பொருளாதாரத்தை ஒடுக்கும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. வட்டி வீதம் உயர்வடைந்துள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை வீழ்ச்சியடைந்துள்ளது.மறுபுறம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 15 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்புக்கு எதிராக நாட்டு மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள். இதுவே கடந்த ஆறு மாத கால பொருளாதார பெறுபேறாகும்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்பட்டிருந்தால் அந்த காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில் தொடர்ந்து காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும்.
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வருதல் அவசியமாகும். அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. சர்வக்கட்சி கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த ஆளும் தரப்பினர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள்.
இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே ராஜபக்ஷர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். இனவாதம் இவர்களின் பிரதான அரசியல் பிரசாரமாகும். நாட்டில் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு வழியில் பிரச்சினைகளை தோற்றுவித்து ஆட்சியை கைப்பற்றிக் கொள்வார்கள்.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசிலமைப்பு சபை உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 82 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது நிலைப்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலமுறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தால். தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ்ந்தால் அது இனவாத அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் தற்போது 13 ஆவது திருத்தத்தை களத்தில் விட்டுள்ளார்.
நாட்டின் நிதி நெருக்கடி இயல்பு நிலைக்கு வந்ததன் பின்னர் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய புதிய சட்டம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை கண்டு சிரிக்கத் தோன்றுகிறது. ரணில் திருடன் என்று விமர்சித்தவர்களும், மஹிந்த திருடன் என்று விமர்சித்தவர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ள போது எவ்வாறு ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM