(எம்.வை.எம்.சியாம்)
மரபுகளை தகர்த்து, பல சாதனைகள் படைத்து, சாதனை பயணத்தில் 41ஆவது அகவையினை பூர்த்தி செய்யும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இலங்கை தொலைக்காட்சிகளின் முன்னோடியாக, புதுமைகளின் தாயகமாக திகழ்கின்றது.
பல்சுவை நிகழ்சிகளால் நேயர்கள் மனதில் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நீங்காத இடம்பிடித்துள்ளது.
நாட்டின் இலத்திரனியல் துறைக்கு பல பங்களிப்பாற்றியுள்ள இந்த ஊடக நிறுவனம் நாட்டின் முன்னணி ஊடகமாக திகழ்கிறது.
கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, சமூகம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் மக்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
தனது 41 வருட காலப்பகுதியில் உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு களம் அமைத்து கொடுப்பதற்கு தவறவில்லை.
ரசிகர்களின் இதயங்களை வென்ற இவ்வூடகம் தொடர்பில் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சதீஷ் நீலகண்டன் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 41ஆவது அகவையை பூர்த்தி செய்கிறது.
இதில் ரூபவாஹினி, நேத்ரா மற்றும் செனல் ஐ ஆகிய அலைவரிசைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, நேத்ரா தமிழ் பேசும் மக்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் அலைவரிசையாகும்.

நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலும் தமது நிகழ்ச்சிகளை வழங்கும் அலைவரிசையாக இது திகழ்கிறது. குறிப்பாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் நேத்ரா அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கள நேயர்களுக்காக ரூபவாஹினி மற்றும் தமிழ் நேயர்களுக்காக நேத்ரா அலைவரிசையும் நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்கிறது.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்குவதற்கும், நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கவும், அதனை உலகுக்கு பறைசாற்றவும், நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய சேவையை நிலையாகவும் தொடர்ச்சியாகவும், தங்குதடையின்றி இலங்கை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் வழங்கி வருகிறது.
இந்த ஊடகம் நெருக்கடிகளை வெற்றிகொண்டு புதியதோர் அத்தியாயத்தை நோக்கி பயணிக்கும் என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம்.
புதிய வருடமொன்றுக்குள் கால்பதிக்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் புதிய குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களோடு பயணிக்கவுள்ளது, ரூபவாஹினி.
பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகள் உள்ளடக்கிய பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பெரும்பாலான தொலைக்காட்சிகள் தென்னிந்திய சினிமாக்களை அடிப்படையாக கொண்டே இயங்கி வருகின்றன.
எமது உள்நாட்டு கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு தொலைக்காட்சிகள் தவறிவிட்டன.
இந்நிலையில் கூட்டுத்தாபனம் தற்போது எமது உள்நாட்டு கலை படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவை மாத்திரமில்லாமல் உள்நாட்டு படைப்புகளையும் புதிய நிகழ்ச்சிகளையும் கொண்டு விரிவான பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களின் திறன்களை வெளிக்கொணர்ந்து, அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
குறிப்பாக, சந்தைப்படுத்தல் பிரிவில் குறைவான விலைகளில், தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த குறைந்த கட்டணங்களை அறவிட்டு, முயற்சியாளர்களின் உற்பத்திகளை இதன் ஊடாக விளம்பரப்படுத்த முடியும்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் சமூக இணையத்தள பாவனை அதிகரித்துள்ளது. பெரியோர் முதல் சிறியோர் வரையில் அனைவரினதும் கைகளில் கையடக்க தொலைபேசிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் தவறான இணையத்தள பாவனைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய சமூக பொறுப்பு எமக்கு இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டங்களை நாம் மேற்கொள்வோம்.
சரியான தருணத்தில், சரியான தகவல்களை வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியடைவதே இவ்வருட நோக்கமாகும்.
நாடளாவிய ரீதியில் பெண்கள் முயற்சியாண்மை அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
நாட்டில் 50 வீதமான பெண்கள் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு புதியதோர் உத்வேகம் அளிக்கும் நோக்கில் புதிய செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
இனி வரும் காலங்களில் மகளிர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, பிரதேச ரீதியாக அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கவுள்ளோம். இதன் மூலம் வளமானதொரு சமூகத்தை உருவாக்க முடியும். சமூகத்துக்கு முன்னோடியான பெண்களை உருவாக்க முடியும்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மாணவர்களால் மேலதிக தனியார் வகுப்புகளுக்கு சென்று, கல்வி கற்க முடியாதிருந்தமையை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக முன்னெத்திருந்தது.
அண்மையில் 5 மாவட்டங்களில் புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சைகளை நடத்தியிருந்தது. இது பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. இம்முறை இதற்கான கேள்வி அதிகரித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் பரந்துபட்டளவில் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளது.
இதில் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கு இவ்வாறான கருத்தரங்குகளை மேற்கொள்ளவுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு பூரணமான, புதியதொரு உத்வேகத்துடன் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை புதுப்பொழிவுடன் வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
எதிர்வரும் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மற்றும் இலங்கை தேசிய கூட்டுத்தாபனம் இணைந்து விமர்சையாக கொண்டாடவுள்ளது. அத்தோடு அடுத்த மாதம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஊடக அனுசரணை வழங்குவதுடன் முழுமையான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM