கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் தைப்பூச சித்திரத் தேர் பவனி

Published By: Nanthini

08 Feb, 2023 | 09:08 PM
image

ருள்மிகு கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் தைப்பூச மஹோற்சவ சித்திரத் தேர் பவனி விழா கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. 

இந்த தைப்பூச மஹோற்சவ தேர் பவனியின் திருவிழா நிகழ்வுகளாவன:

தை 20ஆம் நாள் (03.02.2023) வெள்ளி வாரம்:

இந்நிகழ்வு வைகறையில் மஹாவலி கங்கை புனித தீர்த்தத்தை கொண்டு ஆலய மூலவர்களின் அபிஷேகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 

கம்பளை நகரை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியின் தீவிர பக்தருமான திருப்பணியாளரின் தெய்வாம்சம் பொருந்திய உபயத்தினால் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட எண்கோண முகபத்ர கமலஹார சித்திர தேரொன்று காணிக்கையாக வழங்கப்பட்டது. 

அத்திருப்பணியாளர் இதுபோன்ற தெய்வீக திருப்பணிகளையும், பல சமூக நலத் தொண்டுகளையும் தொடர்ந்து ஆற்ற எல்லாம் வல்ல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அன்னாருக்கு நீண்ட ஆயுளையும் பல ஐஷ்வர்யங்களையும்  வாரி வழங்கி, நீண்ட ஆரோக்கியத்துடன் திகழ, அருள்மிகு கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன்  தேவஸ்தான பரிபாலன சபையினர் சார்பாகவும், நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பாகவும், அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் பரிபாலன சபையினர் சார்பாகவும், கம்பளை வாழ் அனைத்து மக்கள் சார்பாகவும் எமது உவகைமிகு நன்றிகளையும் இனிய பாராட்டுகளையும் தெரிவிப்பதில் அகமகிழ்கின்றோம்.

விரலளவு ஒரு சிறு கைங்கரியத்தினை ஆற்றி, உரலளவு புகழுக்காவும் பெருமைக்காகவும் அலையும் அன்பர்களுக்கு மத்தியில், "வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது" என்ற வாக்கியத்தின் பொருளுக்கமைய இச்சகோதரர் ஆற்றிய இப்பேருபயம் நெகிழ்ச்சி நிறைந்தது!

சிற்பக் கலைகளுக்கு கட்டியம் கூறுவது போல பதினெட்டு அடி உயரத்தில் அமைந்த இத்தேரின் கமலஹார பீடத்தில் பல புராண இதிகாச நிகழ்வுகளை ரத்தினச் சுருக்க வேலைப்பாடுகள் கொண்ட சிலா வடிவங்களாக  செதுக்கப்பட்டமை, காண்போர் மனங்களை வெகுவாக கவர்ந்தது.

தேரின் எண்முக வாயிலில் நிறுவப்பட்ட அஷ்ட யாளிகளின் உருவாக்கம் மிக நேர்த்தியாக அமையப் பெற்றுள்ளமை சிறப்புக்குரிய கலையம்சம்.

இந்த சித்திரத் தேரானது, வவுனியா தோணிக்கல் நகரில் பாரம்பரியமாக தேர் வடிவமைக்கும் புனித கலைப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'இறை எழில் சிற்பி' திரு.முருகேசு மேகநாதன் ஸ்தபதியின் வழிகாட்டலில் அவரின் சிற்பகலா வாரிசுகளான மேகநாதன் தனவேந்தன், மேகநாதன் எழிலரசனுடன் இணைந்து திரு.குகதாஸ் (சேகர்), திரு.ச.கஜந்தன் என பல  சிற்பாச்சாரியார்களின் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டது என்பது சிறப்பம்சம்.

இச்சிற்ப கலைஞர்களுக்கு கம்பளை தரணி அடியார்கள் தங்களின் அகமகிழ்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர். 

அருள்மிகு கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாற்றில் ஒரு தேர் உருவானமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தேர் பவனி வரும் கம்பளை நகர வீதிகளில், தேரின் கமலஹார பீடத்தில் தேர் வடித்த சிற்பாச்சாரியார்களை அமரவைத்து குகநேய அடியார்கள் அனைவராலும், வடம் பிடித்து அவர்களுக்குரிய சிறப்பு கௌரவங்களை ஆற்றும் வண்ணம் தேர் 'வெள்ளோட்டம்' இனிதே நிறைவுற்றது.

அன்று காலை 9.00 மணிக்கு 108 அஷ்டோத்ர சங்காபிஷேகத்துடன், மாலை விசேட வசந்த மண்டப அலங்கார பூஜைகள் நடாத்தப்பட்டு, எழுந்தருளி மூர்த்திகளின் உட்பிரஹார பவனியுலாவுடன் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றது.

தை 21ஆம் நாள் (04.02.2023) சனி வாரம்:

காலை 8.00 மணிக்கு கம்பளை இந்துக் கல்லூரி முன்றலில் கொலுவுற்று, மாணவ மணிகளுக்கு வித்தையை வாரி வழங்கும் ஸ்ரீ வித்தக முத்து விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குட பவனி ஊர்வலமாக ஆரம்பித்து, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலை காலை 9 மணிக்கு சென்றடைந்தது.

மூலமூர்த்திகளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பாலாபிஷேகத்துடன் 108 அஷ்டோத்ர சங்காபிஷேமும் செவ்வனே நடைபெற்று, மாலை வேளையில்   சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளிய  மூர்த்திகளுக்கு வசந்த மண்டப அலங்கார விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், சிவஸ்ரீ ராம சோமாஸ்கந்த சிவாச்சாரியார்களால் அருமையான ஆன்மிக சொற்பொழிவு ஆற்றப்பட்டு, மிக அழகிய ராக நயத்துடன் பஞ்ச புராணம் ஓதிய பின், ஆலய உள்வீதியுலாவுடன் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு வழிபாடுகள் யாவும் நிறைவுபெற்றன.

தை 22ஆம் நாள் (05.02.2023) ஞாயிறு வாரம்:

தைப்பூச நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினம். அருள்மிகு கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத திருக்கோவில் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய சுப நன்னாள் என்றே மொழிய வேண்டும்.

அன்றைய தினம் திருக்கேடயத்தில் ஸ்ரீ விநாயகர், புதிய சித்திர தேர்தனில் கதிர்வேலாயுத சுவாமி அமிர்தவள்ளி, சுந்தரவள்ளியாகிய வள்ளி தேவயானி சமேதராய் கம்பளை திருநகர வீதிகளில் அடியார்கள் புடைசூழ பவனியுலா வந்த திருக்காட்சி அருட்பெரும் மாட்சிமை கொண்டதாக அமையப்பெற்றது. 

அன்று மாலை தாய்வீட்டு சீதனம் போல தன் மைந்தன் முருகனுக்கு பட்டெடுக்கும் சுப ஊர்வல நிகழ்வு அருள்மிகு கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்று, திருமகனார் திருக்கோவில் வந்தடைந்தது.

மாலை குறித்த சுபவேளையில் புதிய திருத்தேரில் இளையோனை வரவேற்கும் வண்ணமாக மூத்தோன் கஜமுகன் வடிவில் ஒரு யானையை வரவழைத்து, தேர் பவனியை ஆரம்பித்த விதம் மங்கலகரமான சகுனமாக கொள்ளப்பட்டது.

ஆலய முற்றத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான அடியார்கள் "அரோஹரா" என்ற அருட்கோஷத்துடன் தேர்பவனியை வடம்பிடித்து ஆரம்பித்துவைத்தனர்.

மங்கல வாத்தியங்களின் நாத ஒலி, பறையொலி மற்றும் காவடியாட்டங்களுடன் ஸ்ரீ விநாயகர் எழுந்தருளிய திருக்கேடயம் முன்னே செல்ல, ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவயானி சமேதராய் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி எழுந்தருளிய எண்கோண முகபத்ர கமலஹார சித்திரத் தேர் பின்னே தொடர்ந்தது. 

கம்பளை நகரின் பிரதான நாற்சந்திகளையும் வலம் வரும் வகையில் இத்தேர் பவனி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான முற்றத்தை வந்தடைந்தபோது ஆலய பிரதம குருக்கள் அவர்களால் கற்பூர ஆராதனைகள் நடைபெற்று அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டது. 

இறுதியாக, 6.02.2023 திங்கள் வாரம்: 

அதிகாலை 4.30 மணிக்கு உற்சவ மூர்த்திகள் ஆலயத்தினை வந்தடைந்தன. வைகறைப் பொழுது வரையிலும் சர்வ மதத்தினரும் இப்பவனி விழாவில் கலந்துகொண்டமை சிறப்புக்குரியது.

நடைபெற்ற இம்மூன்று உற்சவ தினங்களிலும் அன்னதானம் இடம்பெற்றது.

தேர் வெளிவீதி விழா அன்று இரவு  ஆலயத்துக்கு அருகாமையில் அன்னதான கொட்டகை அமைத்து நள்ளிரவு வரை சர்வ மதத்தினருக்கும் அன்னதானம் வழங்கியமை நற்புண்ணிய கைங்கரியமாகும்.

உற்சவ காலங்களில் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ ம.இனியன் உதயகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து வழிபாடுகளும் வேத பாராயண  நியதிகளுக்கமைய தெய்வீக மணம் கொண்டதாக அமைந்தது.

ஆலயப் பணிகளை திறம்பட மேற்கொண்ட  உதவி குருக்கள் மற்றும் தேசிகர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. 

காவடிப் பொங்கல் பூஜையுடன் காவடி எடுத்தாடி உள்வீதி வலம் வந்த தெய்வீக மரபு போற்றுதலுக்குரியது.

தேர் பவனியின்போது காவல் பணியை அதிகாலை வரை ஆற்றிய கம்பளை காவல்துறை அதிகாரிகளின் மகத்தான பணியும் வரவேற்கத்தக்கது. 

அப்புத்தளை சசிகுமார், நித்யானந்தன் மற்றும் நாவல் நகர் செந்தூரன், கார்த்திக் சகோதரர்களின் மங்கல வாத்திய கச்சேரிகள் மிக ரம்மியமாக இசைக்கப்பட்டன.

மூன்று தின உற்சவங்களிலும் இளைஞர்கள் அனைவரும் தங்களின் ஆன்மிகப் பணிகளை சிரமேற்கொண்டு ஆற்றியமை பாராட்டுக்குரியது.

இதுபோன்ற விழாக்கள் வாயிலாக எதிர்வரும் காலங்களில் இந்து இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக அமையும் என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை....!

- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்

உபசெயலாளர் - அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், கம்பளை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று ஸ்ரீராம நவமி விரதம்

2023-03-30 21:40:01
news-image

பொகவந்தலாவையில் 35 ஆவது வருடமாக நிகழ்த்தப்படும்...

2023-02-19 19:06:52
news-image

மகத்துவங்கள் நிறைந்த மஹா சிவராத்திரி

2023-02-18 11:40:35
news-image

'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

2023-02-16 16:56:52
news-image

சிவபெருமானின் சிவ ரூபங்கள்...

2023-02-15 17:15:22
news-image

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்...

2023-02-08 21:08:52
news-image

ஆன்மிக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

2023-02-07 17:28:48
news-image

இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய...

2023-02-05 15:57:19
news-image

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ்...

2023-01-30 11:34:37
news-image

ஈமச் சடங்கு...!

2023-01-28 16:35:14
news-image

முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து...

2023-01-20 21:35:30
news-image

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது -...

2023-01-20 11:08:18