இது சிறுவர்களின் உலகம் - 'தொட்டி மீன்கள்' குறும்பட இயக்குநர் மணிவாணன்

Published By: Nanthini

09 Feb, 2023 | 09:58 AM
image

(மா. உஷாநந்தினி)

"இது ஒரு பதிவு. நான் பார்த்த ஒன்றை கற்பனையின்றி பதிவு செய்திருக்கிறேன். அதனால் தான் இந்த படம் நிறைய மனிதர்களின் மனங்களை தொட்டிருக்க வேண்டும். 

உங்கள் வாழ்க்கையில் நடந்ததை போன்றதொரு சம்பவம் என் வாழ்விலும் நடந்திருக்கலாம். இன்னொருவரும் அதை எதிர்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கதையை படமாக்கும்போது, இது அவரவர் கதையாகிறது...." என்கிறார் 'தொட்டி மீன்கள்' குறும்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான நடராஜா மணிவாணன்.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஊடகத்துறை சார்ந்த பகுதிநேர விரிவுரையாளர் எனும் அடையாளங்களை கொண்டிருக்கும் இவர், கடந்த கால கொரோனா தொற்றுப் பரவலின்போது முழு உலகமும் முடங்கிவிட்ட நிலையில், 'சிறுவர்களின் உலகம்' எதுவாக இருந்திருக்கிறது என்பதை உணர்வோடு கலந்த படைப்பாக உருவாக்கினார்.

மணிவாணன் முன்னதாக 'ஃபெமிலி பெக்கேஜ்', 'இதுவொன்றும் புதிதில்லை பகுதி 1-2', 'போகின்றோம்' முதலான குறும்படங்களை இயக்கியுள்ளார். 'முதற்கனவே' என்கிற மொபைல் தொடர் ஒன்றையும் இயக்கியுள்ளார். அத்துடன் 'இப்படி ஒரு நாள்' எனும் மேடை நாடகத்தில் நடித்திருக்கிறார். 

இவர் இயக்கிய, சிறுவர்களின் உளவியல் மற்றும் உள்ளுணர்வு புறக்கணிப்பு சார்ந்து பேசுகின்ற 'தொட்‍டி மீன்கள்' குறும்படம், கடந்த டிசம்பர் 12ஆம் திகதி சிறந்த குறும்படத்துக்கான அஜன்டா விருதை பெற்றது.

அதேவேளை படத்தில் பிரதான கதாபாத்திரமேற்று நடித்த சிறுமி ஆரண்யாவுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, இந்த குறும்படம் 24ஆவது மதுரை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு, இலங்கையில் மட்டுமன்றி, வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 4ஆம் திகதி இப்படம் மீண்டும் கொழும்பில் திரையிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் கதை, உருவாக்கம், படக்குழுவினரின் ஒத்துழைப்பு பற்றி இயக்குநர் மணிவாணன் கூறுகையில்,

சிறந்த குறும்படத்துக்கான அஜன்டா விருது...

"இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இது என் ஒருவனின் வெற்றியல்ல, படக்குழுவினரின் வெற்றி.

அந்த வகையில், படத்தில் நடித்த ஆரண்யா, அக்ஷயன், நவயுகா குகராஜா, கேதீஷ்வரன் ஆகியோரோடு, உதவி இயக்குநராக ஜெனோசன் ஜெயரட்ணம், இசையமைப்பாளராக பத்மயன் தவிர, சானக விஜேமுனிகே (ஒளிப்பதிவு), திலீப் லோகநாதன் (படத்தொகுப்பு) ரிஷி செல்வம் (கலரிஸ்ட்), லால் திஸ்ஸநாயக்க, தினேஷ் எகநாயக்க (ஒலி இணைப்பு), புவனேக ரணவக்க (மேக்அப்), மொஹமட் மிஷல் பெரேரோ (தயாரிப்பு முகாமைத்துவம்), கோபி ரமணன் (கலை இயக்குநர்), லது ஷான் கிருஷாந்தி, நரேஷ், ஹரி மற்றும் தனு (தயாரிப்பு உதவியாளர்கள்) முதலானோரும் இந்த படத்துக்காக என்னோடு இணைந்து பயணித்துள்ளனர். 

கதை தோன்றிய விதம்...

நான் பார்த்த ஒரு சம்பவம், எனக்குள் ஏற்படுத்திய வலியே இந்த படம். வலிகளை சொல்லும்போது அது பிறரை சென்றடையும். நான் உணர்வுகளை சொல்லவே விரும்புகிறேன்.

கொவிட் தொற்று காலத்தில் எனது மருமகள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தாள். எங்கும் செல்ல முடியாமல், சக பிள்ளைகளோடு விளையாட வாய்ப்பின்றி, விளையாடும் சூழலை உருவாக்கிக்கொள்ள அவள் தவித்ததை நான் பார்த்தேன். அங்கிருந்து தான் இந்த படத்தின் கதை ஆரம்பமானது.

குடும்பங்கள் மற்றும் சமூக அமைப்பு

நகர்ப்புறங்களில் குறிப்பாக, மாடி வீட்டு குடியிருப்புகள் சிறைக்கூடங்களாக இருக்கின்றன. அவற்றில் வசிக்கிறபோது பக்கத்து வீட்டுக்கும் நமக்குமான தொடர்பு மிகவும் குறைந்துவிடுகிறது. மாடி வீட்டு சிறுவர்களுக்கும் கூட இதே நிலைதான்.

விளையாட்டு என்பது சிறு பிராயத்துக்கு அவசியமான ஒன்று. அதை அனுபவிக்காதபோது சிறுவர்கள் மனதளவில் வலியை உணர்கின்றனர். இதுபோன்ற சிறுவர்களின் பிரச்சினையைத் தான் சொல்கிறது, 'தொட்டி மீன்கள்'. 

தீர்வு தான் என்ன?

பாடசாலை குழுமத்தினரும் பெற்றோர்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏனென்றால், அங்கிருந்தே சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

அந்த தீர்வுக்கான கலந்துரையாடலை உருவாக்க இந்த கதை அத்திவாரமொன்றை இட்டிருக்கிறது. அதன் மூலம் உங்கள் பிள்ளைகளை புரிந்துகொள்ள இந்த கதை உதவும்.

பெற்றோர்கள், ஆசிரியர்களின் கவனத்துக்கு...

நீங்கள் சிறுவர்களோடு பயணிக்கிறீர்கள். சிறுவர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.

இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

எனது பிரச்சினை, எனக்கு எத்தகைய மன அழுத்தத்தை, மனச்சோர்வை உண்டாக்குமோ, அதை விட இன்னும் அதிகமாகவே சிறுவர்களின் பிரச்சினை அவர்களை அழுத்தத்துக்குள்ளாக்கி, சோர்வில் ஆழ்த்திவிடும்.

சிறுவர்கள் மிக மென்மையானவர்கள். அவர்களது வாழ்வில் இப்போது விழும் சிறு கீறலும், எதிர்காலத்தில் அவர்களை மிகவும் பாரதூரமாக பாதிக்கும். ஆகவே, கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நடிகர்கள்....

சிறுவர்களை நடிக்க வைப்பது மிக கடினம். ஏனென்றால், அடிக்கடி நடிப்பதை விட்டுவிட்டு தங்களது உலகத்துக்குள் போய்விடும் அவர்கள், படத்தின் முக்கியத்துவம், காட்சியின் தேவை, படக்குழுவினரின் உழைப்பு என எதைப் பற்றியும் யோசிப்பதில்லை.

எனினும், இந்த படத்தில் நடித்த ஆரண்யாவும் அக்ஷயனும் மிக சிறப்பாக நடித்திருந்தனர்.

சிறு காட்சிகளில் வந்துபோனாலும், இன்றைய  பெற்றோர்களின் ‍தேவைகள், பிரச்சினைகளை உணர்த்தும் கதாபாத்திரங்களில் நடித்த நவயுகா, கேதீஷ்வரன் இருவருமே மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

மதுரை திரைப்பட விழாவில் குறும்படத்தின் வெளியீடு

24ஆவது மதுரை திரைப்பட விழாவின் நடுவர் குழு இந்த படத்தை தெரிவுசெய்ததற்கு முதற்கண் நன்றி.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திரைப்படங்களும் குறும்படங்களும் அல்பங்களும் வந்து குவிகின்ற தமிழ்நாட்டில் 'தொட்டி மீன்கள்' தெரிவாகியுள்ளது எனில், அங்கே இந்த கதை பேசப்பட்டிருக்கிறது என்பதில் நான் சந்தோஷப்படுகிறேன்.

இந்த கதை வெவ்வேறு நாடுகளில் வாழும் மனிதர்களோடு என்னை இணைத்திருக்கிறது. ஒரு கதை மூலம் நான் பலரால் அறியப்பட்டிருக்கிறேன் என்பதில் எனக்கு சந்தோஷம்.

பொருளாதார ரீதியான சவால்கள் 

எனது இந்த திரைப்பயணத்தில் நிறைய செலவு செய்து, படப்பிடிப்புப் பணிகளையும், கெமராக்கள், லென்ஸ் போன்ற சாதனங்களுக்கான நிதித் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். இதில் பல லட்சங்களை இழந்து நஷ்டங்களையும் சந்தித்திருக்கிறேன். 

எனினும், நான் நஷ்டப்பட்டதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. எனது நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே திரைத்துறை சார்ந்திருப்பதால் எதுவும் எனக்கு செலவு கிடையாது, வரவு மட்டுமே.

சினிமா சோறு போடுமா என்று பலர் கேட்கிறார்கள். எனக்கு சினிமா தான் சோறு போடுகிறது. அதற்கு நல்ல, தரமான கதைகள் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்