(நா.தனுஜா)
இந்தியாவின் முதற்தர வணிக வலையமைப்பான டாட்டா குழுமத்தில் உற்பத்திகளில் ஒன்றான டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கனின் வருடாந்தக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நோக்கிலும், இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும் இலங்கையில் முதன்முறையாக நடாத்தப்பட்டுள்ள இக்கூட்டம் மிகுந்த முக்கியத்தும் பெறுகின்றது.
இந்தியாவின் முதற்தர உருக்கு உற்பத்தியாளர்களான டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கனின் இவ்வாண்டுக்கான வருடாந்தக்கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. முதன்முறையாக இலங்கையில் நடைபெறும் இக்கூட்டத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் இணைந்து பிரதமர் தினேஷ் குணவர்தன ஆரம்பித்துவைத்தார்.
டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கன் நிறுவனத்தின் தென்னிந்தியாவிற்குரிய முக்கிய விநியோகஸ்தரான வி.என்.சி குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வருடாந்தக்கூட்டத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த சுமார் 550 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
அந்தவகையில் இக்கூட்டத்தை ஆரம்பித்துவைத்து விசேட உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, இவ்வருடாந்தக்கூட்டத்தை இம்முறை இலங்கையில் நடாத்தத் தீர்மானித்தமைக்காக டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கன் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இலங்கையின் மிகநெருங்கிய நட்புறவு நாடான இந்தியாவிலிருந்து வருகைதந்திருக்கும் அனைவரையும் வரவேற்ற அவர், இந்தியர்கள் இலங்கைக்கு வரும்போது அவர்கள் 'வெளிநாட்டவர்' போன்று உணரமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவில் டாட்டா நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு மற்றும் அதன் அபரிமிதமான வளர்ச்சி என்பன தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கையில் முதன்முதலாக பலாங்கொடையிலுள்ள ஒருவெலவில் ஆரம்பிக்கப்பட்ட இரும்பு உருக்கு தொழிற்சாலை குறித்தும் நினைவுகூர்ந்தார்.
அதேவேளை இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்த அவர், இலங்கையின் துறைமுகம் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாகவும் கிழக்கு - மேற்கு கடற்பரப்பின் மத்தியில் அமைந்துள்ள இத்துறைமுகத்தின் ஊடாக இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரிதும் பயன்பெறமுடியும் என்றும் தெரிவித்தார்.
'தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா எமக்கு மிகப்பாரிய ஒத்துழைப்பை வழங்கியது. நாம் ஏற்கனவே இதுபோன்ற சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். எனவே அவற்றைப்போன்று தற்போதைய சவாலில் இருந்தும் எம்மால் வெகுவிரைவில் மீட்சியடையமுடியும் என்று நம்புகின்றோம். அதேபோன்று இலங்கைக்குத் தொடர்ந்து விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்' என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
அவரைத்தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியமையையும் அதற்காக பிரித்தானியரால் இந்தியாவில் சிறைவைக்கப்பட்டமையையும் நினைவுகூர்ந்ததுடன் இச்சம்பவம் இலங்கை - இந்திய நட்புறவை நன்கு புலப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அதேபோன்று தான் சிறுவனாக இருந்த காலப்பகுதியில் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதி என்பவற்றை சித்தரிக்கும் வகையில் வெளியான டாட்டா நிறுவனத்தின் விளம்பரமொன்றினால் கவரப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்த அவர், டாட்டா நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.
மேலும் 'இலங்கையும் இந்தியாவும் 'நாகரிக வளர்ச்சியின் இரட்டையர்களாக' காணப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக 'அயலகத்திற்கு முதலிடம்' என்ற கொள்கையின் பிரகாரம் கடந்த காலங்களில் இந்தியா இலங்கைக்கு எவ்வாறு உதவிகளை வழங்கியது என்பதையும் பார்த்தோம். இப்போது இருநாடுகளும் அமைதி மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு முன்நோக்கிப் பயணிக்கவேண்டியிருக்கின்றது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலு, சுகாதாரம், சுற்றுலா, துறைமுகம் மற்றும் கப்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளமுடியும். அதனை ஊக்குவிப்பதை முன்னிறுத்தி இந்திய அரச மற்றும் தனியார்துறையினர் ஒன்றிணைந்து பணியாற்றிவருகின்றனர்' என்று சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கையில் இதுபோன்ற மேலும் பல கூட்டங்கள் நடைபெறவேண்டும் என்றும், அதனூடாக இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உயர்ஸ்தானிகரின் உரையைத் தொடர்ந்து வர்த்தகப்பிரமுகரும், சர்வதேச ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான கே.ஆர்.ரவீந்திரன் உரையாற்றினார்.
'சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் நாம் மிகமோசமான நிலையில் இருந்தோம். இறக்குமதிக்கட்டணங்களைக்கூடச் செலுத்தமுடியாத நிலை காணப்பட்டது. உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவியது. ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சிசெய்யக்கூடாது என்பதற்கான உதாரணமாக நாங்கள் மாறினோம். நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் எம்மை மீட்பதற்கு இந்தியா முன்வந்தது. எவ்வித நிபந்தனைகளுமின்றி முன்வந்த இந்தியா, எம்மைநோக்கி அதன் நேசக்கரத்தை நீட்டியது. இந்தியா வழங்கிய உதவிகள் வேறு எந்தவொரு தரப்பினராலும் நெருங்கமுடியாத அளவிற்கு இருந்தது' என்று ரவீந்திரன் கூறியபோது அவையிலிருந்த இந்தியர்கள் உரக்க கரகோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து உரையாற்றிய ரவீந்திரன், நாமனைவரும் இந்தியாவிற்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டதுடன் இலங்கையில் நடைபெறும் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கனின் வருடாந்தக்கூட்டமானது இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாகத் திகழும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். அதுமாத்திரமன்றி இது ஏனையோரும் இலங்கைக்கு வருகைதருவதற்குத் தூண்டுதலளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடியின் விளைவாக மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய சூழ்நிலையில் 'லைஃப் லைன் ஸ்ரீலங்கா' என்ற மகுடத்தில் ரோட்டரி கழகமும் யுனிசெப் அமைப்பும் இணைந்து நிதி திரட்டி, மருந்துப்பொருட்களை வழங்குவதற்கு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை தொடர்பிலும் கே.ஆர்.ரவீந்திரன் இதன்போது விளக்கமளித்தார்
அதனைத்தொடர்ந்து 'இலாபம் உழைத்தலுக்கு அப்பால், சமூகத்திலிருந்து பெற்றவற்றை சமூகத்திற்கு மீள வழங்குதல்' என்ற கொள்கையுடன் இயங்கிவரும் டாட்டா குழுமத்தின் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா டிஸ்கன் நிறுவனத்தின் சார்பில் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக்கிடம் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் டாட்டா ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் மற்றும் வி.என்.சி குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் உரையாற்றினர்.
குறிப்பாக இம்முறை தமது வருடாந்தக்கூட்டத்தை இலங்கையில் நடாத்துவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், இலங்கையும் இந்தியாவும் கூட்டாக இணைந்து பொருளாதார ரீதியில் முன்நோக்கிப்பயணிக்கும் இவ்வேளையில் இந்தக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அதேவேளை இலங்கையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்தும் அவர்கள் தமது நாட்டத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படங்களுக்கு https://www.virakesari.lk/collections/841
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM