பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின் இலவச கல்வி

Published By: Nanthini

07 Feb, 2023 | 03:27 PM
image

(எஸ்.மங்கள தர்ஷினி, உ.யதுர்ஷா, ஹஸ்னா ஹஸ்புல்லா - இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு)

லையகம் எனும் ஒற்றை சொல்லுக்குள் அடங்கியிருக்கும் அர்த்தங்களும் துன்பங்களும் வலிகளும் கணக்கில் அடங்காதவை. 

இரண்டு நூற்றாண்டுகளாக மலையகத்தில் வாழ்கின்ற பூர்வ குடிகளாக மலையக மக்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், இம்மக்கள் சுதந்திரமாகவும் சுயமாகவும் செயலாற்றுவதற்கான வசதி வாய்ப்புக்களுக்கு இலங்கை அரசாங்கமும் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையின சமூகமும் பல்வேறு வழிகளிலும் தடையாக செயற்பட்டு வருகின்றமை தீர்க்கமான நிதர்சனமாகும். 

தென்னிந்தியாவிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட இச்சமூகம், இன்றளவிலும் சில சந்தர்ப்பங்களில் மறைமுகமாகவும் பல்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படையாகவும் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர். 

அடிப்படை உரிமைகள் அற்றவர்களாகவும்,  சொந்த நிலமற்றவர்களாகவும், பொருளாதார சுமை மிக்கவர்களாகவும் ஏனைய சமூக மக்களுடன் ஒப்பிடும்போது கல்வியில் பின்தங்கியவர்களாகவும் தான் அடையாளப்படுத்தப்படுகின்றனர். 

இலங்கையர்கள் அனைவருக்கும் 14 வயது வரையான கல்வியை இலவசமாக பெற்றுக்கொள்ளுதல் அடிப்படை உரிமையாக உள்வாங்கப்பட்டுள்ள நிலையிலும், மலையக வம்சாவளி மாணவர்கள் இலவசக்கல்வியை முழுமையாக பெற்றுக்கொள்கின்றனரா என்பதும் கேள்விக்குரியதே.

இலங்கை பிரஜைகளாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை வழங்கி, 30 வருடங்களின் பின்னரே 1970களில் மலையக மக்களுக்கான இலவசக் கல்வித் திட்டம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் பல பட்டதாரிகள் மலையகத்தின் பல பகுதிகளில் உருவாகியிருந்த போதிலும், சில காரணங்களால் இந்த இலவச கல்வியை கூட சரியாக அணுக முடியாத நிலைக்கு பல மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தற்கால மலையக சமூகம் மாற்றம் கண்டுள்ளதா என்பதில் சிக்கல்கள் உள்ளன.

தற்போது மலையகத்தில் கற்றோர் சமூகத்தினர் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் நீதிபதிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் தாதிகளாகவும் மற்றும் பலர் கல்விமான்களாகவும் திகழ்கின்ற போதிலும் இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமான தொகையினராகவே உள்ளனர். 

நாட்டில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது மலையக பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவினதாகும். அதிலும் க.பொ.த உயர்தரத்தில் கலை மற்றும் வணிக பிரிவுகளிலே அதிகளவிலானோர் தெரிவாகின்றனர். 

ஏனைய விஞ்ஞான, கணித பிரிவுகளில் மிகவும் குறைந்த வீதத்திலேயே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறுகிறது. அரசியல் மட்ட உயர் தொழில்களிலும் மலையகத்தாரின் பிரவேசம் மிகவும் குறைவானதாகும். இத்தகைய காரணங்களினால் தேசிய கல்வியை பொறுத்தமட்டில் இவர்கள் பிந்தித் தொடங்கியவர்கள் என அடையாளம் காட்டப்படுகின்றனர்.

குறிப்பாக, கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மலையக மாணவர்களின் இலவச கல்வி தொடர்பிலான சிக்கல்கள் மேலும் வழுப்பெற்றுள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல தோட்ட தொழிலாளிகளின் பிள்ளைகள் தமது கல்வியை இடைநிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். இதில் ஆண் பிள்ளைகள் நகர்புறத்துக்கும் பெருநகர கடைகளுக்கும், பெண் பிள்ளைகள் அருகில் இருக்கும் ஆடை தொழிற்சாலைகளுக்கும் வருமானம் தேடி செல்கிறார்கள். 

மேலும் அதிகரித்துவரும் கற்றல் உபகரணங்களின் விலையேற்றம் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களின் கட்டண அதிகரிப்பு போக்குவரத்து செலவீனங்களின் வீக்கம் காரணமாக பலர் தமது கல்வியை க.பொ.த சாதாரண தரத்துடன் இடைநிறுத்திக்கொள்கின்றனர். 

மலையகத்தில் குறிப்பாக தாய்மார் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் உள்ள பெண்பிள்ளைகள் தமது இளைய சகோதரர்களின் பராமரிப்புக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் தமது கல்வியை தியாகம் செய்து பாடசாலைகளிலிருந்து இடைவிலகுகிறார்கள்.

பாடசாலைகளில் ஆரம்ப கல்வி கற்கும் மாணவர்களுக்கு போசனைத்திட்டத்தின் ஊடாக போசாக்கான உணவு வழங்கப்படுவதால் பெரும்பாலான பெருந்தோட்ட சிறார்கள் பாடசாலைக்கு வருகை தரும் நிலை காணப்படுகிறது. 

வீட்டில் போசாக்கான உணவை உண்ணவில்லை என்றாலும் மாணவர்கள் பாடசாலையில் ஒரு வேளை உணவைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில் அவர்கள் பாடசாலைக்கு பெற்றோர்களால் அனுப்பப்படுகிறார்கள். ஆனால், இந்த போசனை உணவுத்திட்டம் இடைநிலை கல்வியை தொடரும் மாணவர்களுக்கு இல்லாத காரணத்தாலும் பல மாணவர்கள் வீட்டில் உணவில்லாத நேரத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்காத நிலையும் உள்ளது. 

ஒருசில பெருந்தோட்ட பாடசாலைகளில் இந்த உணவு பிரச்சினைக்கு மாற்று நடைமுறைகள் கையாளப்படுகின்ற போதிலும், தேவையிருக்கின்ற எல்லா மாணவர்களுக்கும் தகுந்த உதவிகளை பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளது. 

இந்த பொருளாதார மற்றும் உணவு நெருக்கடிக்கு மத்தியில் ஒரு தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும். 

இந்நிலையில் ஆரம்ப காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்குமான போசாக்கு உணவுத்திட்டத்தை கொண்டுவர வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது.

மேலும், இந்த இலவச கல்வியை முழுதாக பெற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு வீட்டில் இடவசதி போதாமையும் தாக்கம் செலுத்துகிறது. லயன் அறைகள் மிகவும் வசதி குறைந்தவையாக உள்ளன. பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் இணைந்து வாழும் சூழலில் போதுமான அளவு இடமின்றி  மாணவர்களால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. 

வீடு, காணியற்ற சூழமைவில் தபால் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் பல்கலைக்கழக அனுமதிப் பத்திரத்தை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இங்கு நிலவுகிறது. 

தமக்கான காணி மற்றும் குடியிருப்புகளுக்காக மலையக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்நேரத்தில், போதிய இடவசதி இல்லாமையும் வீடு, காணியற்ற நிலையில் இங்கு வாழும் சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் கல்வியில் தாக்கம் செலுத்துகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

மலையகத்துக்கென கல்வியியல் கல்லூரியின் வருகை, பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டமை போன்றவற்றாலும் மலையகத்தில் கல்வி கற்றோரின் தொகை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு கல்வி கற்றோர் ஆசிரியர்களாகவும் உருவாகியுள்ளனர். இவர்கள் தம்மை உயர்கல்வியிலும் வளர்த்துக்கொள்கின்றனர். இந்த கற்றோர் சமூகத்தால் விளைவிக்கப்படும் மாற்றம் முழுமையான சமூக மாற்றமாக அமையவில்லை என்பதும் ஒரு பாரிய குறைபாடாகவே உள்ளது. 

இக்குறைபாட்டுக்கான காரணம் மலையகத்தில் போதியளவு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றமையும் ஒருசில கற்றோரிடையே காணப்படும் சுயநல சிந்தனையே.

மலையகத்தில் வெளிவருகின்ற பட்டதாரி மாணவர்களில் பெரும்பாலானோர் வேலையில்லா பட்டதாரிகளாகவே உள்ளனர். இவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நியமனங்களையே அதிகமாக நம்பியிருக்க வேண்டிய நிலையுள்ளது.

அத்துடன் தற்கால பொருளாதார நெருக்கடியினால் வேலை வாய்ப்புக்களும் குறைவடைந்துள்ள நிலையில் தாமாக முன்வந்து சுயதொழில்களையோ கைத்தொழில்களையோ மேற்கொள்ள முடியாதுள்ளமைக்கு நிலம் பிரதான காரணியாகும்.

ஏனெனில், மலையக மக்கள் இன்றும் நில உரிமை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள். இங்குதான் மலையகத்தில் நிலத்துக்கும் கல்விக்குமான இடைவெளி விரிவடைகிறது. 

இதன் பின்னணியில் மலையகத்தில் உருவாகும் கல்விமான்கள் மலையகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

மலையகத்தை பொறுத்தவரையில் நிலைபேறான சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கல்வியால் முன்னேற்றம் அடைவதுடன் நிலவுரிமையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான போராட்டங்களும் தேவைப்படுகின்றன.

உலகெங்கிலும் கல்வியை இலவசமாக வழங்கிவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்றாக இருந்தபோதும், மலையகத்தில் வாழ்கின்ற பெருந்தோட்ட  தொழிலாளர்களது பிள்ளைகளின் இலவசக்கல்வி பல வரையறைகளுக்கு உட்பட்டதாகவே தொடர்கிறது.

1940களில் கலாநிதி C.W.W.கன்னங்கரவினால் இலங்கைவாழ் பிரஜைகள் அனைவருக்குமான இலவச கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இவரது இலவச கல்வித் தத்துவமானது வர்க்கம், இனத்துவம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு அப்பால் சென்று பின்தள்ளப்பட்ட பிரிவினருக்கு உரிய கல்வி வாய்ப்புக்களை வழங்கவேண்டும். 

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறந்த பொருளாதார கொள்கைகளுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் கல்விக்கான முதலீடுகள் மிகவும் குறைவாக உள்ளமை முன்னேற்றகரமான கல்விக்கு தடையாக உள்ளது. இந்த நிலைமை மலையக சமூகத்துக்கு மேலும் சவாலாகியுள்ளது. இவற்றுக்கு மத்தியில் மலையகத்தில் கல்விக்கான முதலீடுகளை அதிகரித்தலும் அத்தியாவசியமாக்கப்பட வேண்டும்.

2023ஆம் ஆண்டுடன் மலையக தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இன்றும் இச்சமூகத்தின் இளைய தலைமுறையின் சமூக, பொருளாதார முன்னேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது. காணி, கல்வி உரிமைக்கான போராட்டங்களில் இவ்வகையான நியாயப்படுத்தல்களும் தேவைப்படுகின்றன. அதேபோல் அந்த நியாயப்படுத்தல் சார்ந்த ஆழமான ஆய்வு வேலைகளும் தேவைப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...

2023-03-22 16:47:59
news-image

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...

2023-03-22 12:11:32
news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37