மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அனுசரணை? போட்டியை நடத்தும் ஆஸி, நியூஸி எதிர்ப்பு

Published By: Sethu

07 Feb, 2023 | 02:42 PM
image

 எதிர்வரும் மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு, சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அதிகார சபையான 'விசிட் சவூதி' அனுசரணை வழங்கவுள்ளதாக கூறப்படுவது குறித்து இப்போட்டிகளை நடத்தும் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் ஜூலை 20  முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. 

9 ஆவது தடவையாக நடைபெறும் இப்போட்டிகளில் 32 நாடுகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகளை 2 பில்லியன் பேர் பார்வையிடுவர் என தான் எதிர்பார்ப்பதாக பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ கூறியுள்ளார்.

இதேவேளை, இச்சுற்றுப்போட்டிக்கான அனுசரணை நிறுவனங்களில் ஒன்றாக விசிட் சவூதி அனுசரணை வழங்கவுள்ளதாகவும் இதற்காக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்துடன் (பீபா), 'விசிட் சவூதி' உடன்படிக்கை செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், மேற்படி செய்திக்கு பீபா, விசிட் சவூதி ஆகியன மறுப்புத் தெரிவிக்கவில்லை.

சவூதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாக குற்றம் பலர் குற்றம் சுமத்தும் நிலையில், மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு சவூதி அரேபிய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை நிறுவனம் அனுசரணை வழங்குவது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்;புச் சபையின் அவுஸ்திரேலிய பிரதிநிதி நிகிட்டா வைட் இது தொடர்பாக கூறுகையில்,  'சவூதி அரேபியாவில் ஆண், பாதுகாவலரின் அனுமதி இல்லாமல் பெண்ணொருவர் தொழிலொன்றை செய்யவும் முடியாது. மகளிர் உலகக் கிண்ணப் போட்டிக்கு சவூதி சுற்றுலா அமைப்பு எவ்வாறு அனுசரணை வழங்க முடியும்' எனக் கேள்வி எழுப்பினார்.

மேற்படி செய்தி உண்மையானால் அது மிகவும் குழப்பமளிப்பதாகும் என அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் உப தலைவர் மோயா டோட் கூறியுள்ளார்.

இந்நிலையில், பீபாவின் இந்த உடன்படிக்கை குறித்து தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என போட்டிகளை நடத்தும் அவுஸ்திரேலியா மற்றும் நியூ ஸிலாந்து கால்பந்தாட்டச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவரசமாக தெளிபடுத்துமாறு கோரி இரு நாடுகளும் பீபாவுக்கு கூட்டாக கடிதம் அனுப்பியள்ளதாக அந்நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அனுசரணை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும், இது குறித்து தாம் மிகுந்த ஏமாற்றமடைவதாக அவுஸ்திரேலியா கால்பந்தாட்டச் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக நியூ ஸிலாந்து கால்பந்தாட்டச் சங்கம் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்