அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை உணர்த்தும் வினோத ஓட்டம்

Published By: T. Saranya

07 Feb, 2023 | 09:59 AM
image

(நெவில் அன்தனி)

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை உணர்த்தும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் உத்தியோகபூர்வ வினோத ஓட்ட நிகழ்ச்சி ஆசிய ஒலிம்பிக் பேரவை பணிப்பாளர்நாயகம் கலாநிதி ஹுசெயன் அல் முசல்லாம் தலைமையில் கொழும்பு துறைமுக நகரில் (Port City)  செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணித்தியாலாங்கள் நீடிக்கவுள்ளது.

கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட ஆசிய விளையாட்டு விழா 2023 செப்டெம்பர்  23ஆம் திகதியிலிருந்து அக்டோபர் 8 ஆம் திகதிவரை '19ஆவது ஆசிய விளையாட்டு விழா ஹங்சூ 2022' என்ற அதே பெயரில் நடத்தப்படவுள்ளது.

இவ் விழாவை முன்னிட்டு அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை உணர்த்தும் பொருட்டு ஆசிய விளையாட்டு விழா வினோத ஒட்ட நிகழ்ச்சி ஆசிய கண்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

முதலாவதாக மாலைதீவுகளில்  பெப்ரவரி 4ஆம் திகதி  ஆரம்பமான வினோத ஓட்டம் இரண்டாம் கட்டமாக இலங்கையில் தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் இலங்கை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.

ஜெட் ஸ்கி என்ற நீர்நிலை சாகசமும் அங்கம்பொர எனும் உள்ளூர் மார்ஷல் கலையும் முக்கிய இடம்பிடிக்கவுள்ளன.

இந்த முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒலிம்பிக் இல்ல ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர்கூடத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், 'இலங்கையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது எமக்கு பெருமை தருகிறது. இதனை வெகு சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளோம். மேலும் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர்களைப் பங்குபற்றச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், இலங்கையில் தொடரும் சிக்கலான சூழ்நிலைகளால் எத்தனை வீரர்களை அனுப்புவது என்பதை எங்களால் தீர்மானிக்க முடியாதுள்ளது. 2002க்குப் பின்னர் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையினால் பதக்கம் வெல்ல முடியாமல் போயுள்ளது. இந்த வருடம் அந்த ஏக்கம் நீங்குமா என்பது எமக்கு தெரியாது. எனினும் இலங்கையிலிருந்து வீர, வீராங்கனைகளை ஆசிய விளையாட்டு விழாவுக்கு அனுப்பவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ் விளையாட்டு விழாவை முன்னிட்டு சீனாவின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் 3 வகையான நினைவுச் சின்னங்கள் சென்சென், கொங்கொங், லியான்லியான் என்ற பெயர்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எமது நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ளது'  என்றார்.

ஆசிய விளையாட்டு விழா வினோத ஓட்ட நிகழ்ச்சியானது அதி திறமையான விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றிணையச் செய்கிறது.

வினோத ஓட்டம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஹங்சூ 2022 விளையாட்டுத்துறை சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் வூ ஜியான்ஸொங், 

'ஆசிய விளையாட்டு விழாவை எமது நாட்டில் சிறப்பாக நடத்துவதற்கு நாங்கள் ஆறு வருடங்களாக கடுமையாக உழைத்தோம். இந்த விளையாட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ளன. விளையாட்டு விழாவை ஆரம்பிக்க வேண்டியதுதான் இப்போது பாக்கியாக இருக்கிறது. அதற்கு முன்னோடியாகத்தான் வினோத ஓட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.

'எதிர்காலத்தில் இதயத்திற்க இதயம்' என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் 40 வகையான விளையாட்டுக்களில் 61 நிகழ்ச்சிகளில் 482 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள் கிராமம், ஹொட்டெல்கள் அனைத்தும் தயாராக உள்ளன. இந் நிலையில் இலங்கையில் நடைபெறும் ஆசிய விளையாட்டு விழா வினோத ஓட்ட நிகழ்ச்சி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுவடையச் செய்வதுடன் மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்' என்றார்.

ஆசிய நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான வினோத ஓட்ட நிகழ்ச்சி ஐந்து வலயங்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக தெற்காசிய நாடுகளிலும் இரண்டாம் கட்டமாக தென் கிழக்கு ஆசியாவிலும் வினோத ஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படும்.

அதனைத் தொடர்ந்து மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய 3 வலயங்களில் வினோத ஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படும்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் விநோத ஓட்ட நிகழ்ச்சியில் 300 பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் விளையாட்டு வீரர்கள், முக்கியஸ்தர்கள், இரண்டு நாடுகளினதும் பிரமுகர்கள், தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். 

இந்த ஊடக சந்திப்பில் தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, பொருளாளர் காமினி ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஊடக சந்திப்பு முடிவில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகள் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28