தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக பார்க்கும் இந்தியா

06 Feb, 2023 | 03:49 PM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அவர் மீதான இந்தியாவின் பார்வை மேலும்  சிறப்பாக அமையும்     என்று இந்தியாவின் இந்து பத்திரிகையின் இணை ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளமான  டி. இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளித்திருந்தார். அதன்படி விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் மற்றும் அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா  மிக அவதானத்துடன் இருப்பதாக இந்திய மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

ரணில் விக்ரமசிங்க தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் இரண்டு தடவைகள் சர்வ கட்சி மாநாட்டை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  அதேபோன்று தமிழ் தரப்புக்களுடனும்   பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.  

“13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் 37 வருடங்களாக காணப்படுகிறது. எனவே அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அல்லது அதனை அரசியலமைப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் ”   என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சர்வகட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துக்கு  இந்தியா இலங்கையின் சார்பாக அளித்துள்ள உத்தரவாதம் மற்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கள்  தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய  செவ்வியின்  முக்கிய விடயங்கள் வருமாறு,

கேள்வி ; இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக் கொள்வதற்காக இந்தியா நிதியியல் உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறது.    இந்தியா கடிதமும் அனுப்பி இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் என்ற வகையில் இந்தியாவின் நகர்வை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

பதில் ; ஏழு மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் நிலைமையை நீங்கள் பார்க்க வேண்டும்.  பாரியதொரு பொருளாதர பிரச்சினை இலங்கையில் காணப்பட்டது. அப்போது இலங்கையின் நிதியமைச்சராக இருந்த  அலி சப்ரி  அமெரிக்காவுக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது   இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு சென்றிருந்தார்.  அந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவி செய்யுமாறு நிதியமைச்சர் சீதாராமனிடம்  அலி சப்ரி  கேட்டிருந்தார்.   அதனுடைய தொடர்ச்சியாகவே இந்தியா தற்போது சர்வதேச நாணயத்துக்கு  இலங்கை தொடர்பான நிதியில் உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.  சரித்திர ரீதியாக   எப்போதுமே இலங்கைக்கு எந்த ஒரு இடரின்போதும் இந்தியா உதவி வந்திருக்கிறது.  தற்போது பொருளாதார பிரச்சினை பெரிதாக வெடித்திருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்தியா இலங்கைக்கு   நான்கு பில்லியன்  டொலர் உதவியை  வழங்கியது.  இதன்  தொடர்ச்சியாக தற்போது இந்த உத்தரவாதத்தையும் அளித்திருக்கிறது.  

கேள்வி ;  இலங்கையும்  இந்தியாவும் இந்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவது குறித்த விவகாரம் தொடர்பாக இருதரப்பு பேச்சுகளை  நடத்தியிருந்தது.  அதன்படியே தற்போது இந்தியாவின் ஆதரவு கிடைத்திருக்கிறது.  இந்த பேச்சுக்கள் சம்பந்தமாக ஏதாவது விபரங்கள், தகவல்கள்  உங்களிடம் இருக்கின்றதா? 

பதில் ;   இந்த பேச்சுவார்த்தைகளில் என்ன பேசப்பட்டிருக்கும் என்பது தொடர்பாக எமக்கு போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும்  இந்திய ஊடகங்கள் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தொடர்  தகவல்கள், செய்திகள் தொடர்பாக  அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.  இந்திய ஊடகங்கள் அதிகளவில்   இலங்கை செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்திய  பாராளுமன்றத்தில் ஆரம்பத்தில் யாரும் பேசவில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதமளவிலேயே  இலங்கை விபரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்பட்டது.    இலங்கை விவகாரத்தில் மிகவும் அவதானமாக நாம் பேச வேண்டும் என்பது அப்போது வெளிப்பட்டது. இந்திய அரசாங்கம் அதனை மிக கவனமாக கையாண்டது.  இந்நிலையில்  சர்வதேச நாணயத்தின் உதவி இலங்கைக்கு கிடைத்த பின்னர் இந்த பேச்சுவார்த்தைகளில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பில் தகவல்கள் வெளிவரலாம்.  பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கலாம்.

கேள்வி ; இந்தியா இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கி விட்டது.    ஆனால் இன்னும் சீனாவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக தெரியவில்லை.  சீனாவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?

பதில் ;  இந்த விடயத்தில் நான் ஒரு இந்திய பிரஜையாகவே பேசுகிறேன்.  இந்தியா தனது எல்லைக்கு உட்பட்டு இலங்கைக்கு பாரிய உதவியை செய்திருக்கிறது.  சீனாவும் இலங்கையுடன் மிக   நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது.  அதிக கவனமும் அது தொடர்பில் செலுத்தப்பட்டது.  இப்பொழுது இலங்கை சீனாவுடன் பேசி அந்த உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும். சீனா அனுப்பியுள்ள கடிதம்   இந்தியா அனுப்பிய கடிதத்தின் அளவுக்கு அதாவது சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்ற அளவுக்கு இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.  இலங்கைக்கு பயன் கிடைக்கும் வகையில் சீனாவின் உதவி இருக்க வேண்டும்.  இரண்டு வருட கால அவகாசம் போதாது என்ற கருத்து நிலவுகிறது.    சீனா தனது மெளனத்தை கலைத்து சர்வதேச நாணயம் என்ன வடிவத்திலான உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றதோ அதனை செய்வதற்கு முன்வர வேண்டும்.  இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.  அதற்கான  பரிசாக சீனா  உத்தரவாதத்தை அளிக்கலாம்.

கேள்வி ; இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு  தீர்வு காண  ஜனாதிபதி ரணில்  தலைமையில் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி பேசிக்கொண்டிருக்கிறார். இதன்போது 13 ஆவது திருத்தச் தொடர்பாக மிக வலுவாக பேசப்படுகிறது.  13 ஆவது திருத்த சட்டத்தின் ஆரம்ப கர்த்தாவாக இந்தியா இருக்கிறது.   இவ்வாறான பேச்சுக்கள் ஊடாக  அரசியல் தீர்வு காணும் முயற்சியை இந்தியா எவ்வாறு பார்க்கிறது ?

பதில்  ;  1991 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இறந்ததன் பின்னர் இலங்கை விவகாரத்தில் இந்தியா கிட்டத்தட்ட 15 வருடங்களாக நேரடியாக தலையிடவில்லை.  எப்படியிருப்பினும் தற்போதைய நிலைமையில் இந்தியாவில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுவருகின்றது.  2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும் அதனையே  தெரிவித்தார்.  அண்மையில் ஜெய் சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த போதும் இது வலியுறுத்தப்பட்டது.  எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.  குறைந்தபட்சம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கின்றது.  இந்திய மக்களும் அதனை விரும்புகிறார்கள். அதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால்  13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருக்குமேயானால் எல்லாவற்றுக்கும் வழி கண்டுபிடிக்க முடியும்.  இங்கு நோக்கமே மிக முக்கியமாக இருக்கின்றது.  அந்த நோக்கத்தை இனிமேலாவது வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி ; இந்திய பிரதமர் விரைவில் இலங்கைக்கு வருவதற்கான ஏதாவது சாத்தியங்கள் இருக்கின்றனவா? அது தொடர்பாக தகவல்கள் உள்ளனவா?

பதில் ; வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக அண்மையில் இந்திய பிரதமர் பெரிதாக ஒன்றும் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை.  அடுத்த ஒரு மாதத்துக்கு  இந்தியாவின் வட, கிழக்கு பகுதிகளில் தேர்தல்கள் நடைபெறும். பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்.  அடுத்து  கர்நாடாகாவில் தேர்தல் நடைபெறும். அங்கு  அவருடைய கட்சி ஆட்சியில் இருக்கிறது.  அதனால்  இந்த வருடத்தில் அவர் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது மிக அரிதாக இருக்கும்.  வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கின்றன.  இதற்கிடையில் கிடைக்கின்ற  நேரத்தில் அவர் எங்கேயாவது செல்லலாம்.  ஆனால் அப்போது இவர் எங்கு செல்வார் என்று இன்னும் பேசப்படவில்லை.

கேள்வி ;  ஜனாதிபதி ரணிலுக்கு தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கின்றார்.  விரைவில் ரணில் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது இருதரப்பு உறவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

பதில் ; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக இலங்கையின் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு முன்னேற்றத்தை காட்டுவாராக இருந்தால் அது அவரது இந்திய விஜயத்தில் மிகவும் ஒரு திருப்புமுனை மிக்கதாக அமையும்.  இந்திய அரசாங்கம் அவரை பார்க்கின்ற விதம் மேலும் முன்னேற்றமடையும்.  மாற்றமடையும்.  இந்த நேர்காணல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு (வியாழக்கிழமை மாலை) முன்னர்    இந்தியாவின் ஆளும்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்.  அப்போது இலங்கை அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில்  என்ன செய்யப் போகிறார் என்று அவர் என்னிடம் வினவினார்.  என்னுடன் பேசியவர் தமிழர் அல்லர்.  அப்படி பார்க்கும்போது இந்திய மத்திய ஆளும் கட்சி மட்டத்தில்   இந்த விவகாரம் ஒரு பொதுவான பேசுபொருளாக இருக்கின்றது.   இலங்கையில் ஏனைய தலைவர்களுக்கு இருந்திருக்காத ஒரு சாதகமான சூழல் தற்போது   விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது.  ரணிலுக்கு  சர்வதேச மட்டத்தில்  ஒரு நம்பகத்தன்மை காணப்படுகிறது.  அதற்கான ஆளுமை படைத்த தலைவராக ஜனாதிபதி ரணில் இருக்கிறார்.    அவர் ஒரு  மிதவாத போக்கு கொண்டவராக இருக்கின்றார்.  அவருடைய ஆடையில் இருந்து அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  அதுமட்டுமின்றி தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியின் ஆதரவும் விக்கிரமசிங்காவுக்கு இருக்கிறது.  எனவே ரணில்  மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தி இந்த தீர்வு விடயத்தில் அவரை ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்தால் அது பாரிய வெற்றியாக அமையும்.  ரணில் தற்போது இந்த சாதகமான சூழலை பயன்படுத்திக் கொள்ள கொண்டால்  சிறந்த  திருப்புமுனையாக அமையும்.  இவ்வாறான ஒரு சூழலில் அவர் இந்தியாவுக்கு வந்தால் அவருக்கு அது சிறந்த அனுகூலமாக இருக்கும்.  2024 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   தேர்தலுக்கு முன்னர் அவர் இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டை முன்னெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தினால்  அவருக்கு அது  திருப்புமுனையாகவே அமையும்.  அவர் இந்த தேசிய இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் ஒரு முன்னேற்றகரமான விடயத்தை எடுத்து வைத்தார் என்றால் அதனை வைத்து அவர் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட முடியும்.  இலங்கைக்கு தேவையான செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.  இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைத்தாலும் அது போதுமானதல்ல.  பொருளாதார பிரச்சனைகள் தொடர்கதையாக  ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் பல  நடவடிக்கைகள்  எடுக்கப்படுவது அவசியம்.  அவை சிலநேரம் கஷ்டமான முடிவுகளாகவும்  இருக்கலாம்.  எனவே   இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் அவசியமாகின்றன.     ரணில் திறமையானவர்.  அவர் ஆளுமை மிக்கவர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...

2023-03-22 16:47:59
news-image

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...

2023-03-22 12:11:32
news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37