கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

06 Feb, 2023 | 01:11 PM
image

பிக் பொஸ் பிரபலமும், நடிகருமான கவின் நாயகனாக நடித்திருக்கும் 'டாடா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்கான பிரத்யேக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபலமான வணிகவளாகத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டாடா'.

இதில் கவின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' படப் புகழ் நடிகை அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் கே பாக்யராஜ், வி டி வி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், பெப்ரவரி 10ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் நாயகன் கவினும், நாயகி அபர்ணாதாஸும் காதலிக்கிறார்கள். அதன் பிறகு கருத்து முரண்பாடால் பிரிகிறார்கள்.

இவர்களுக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? அந்த குழந்தை இவர்களை மீண்டும் இணைத்ததா? இல்லையா? என்பது முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளதால், இளைய தலைமுறையினரிடத்தில் 'டாடா' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

படத்தைப் பற்றி நாயகன் கவின் பேசுகையில், ''இயக்குநரும், நானும் கல்லூரி பருவ தோழர்கள். அவன் குறும்படத்தை இயக்கியிருக்கிறான். ஆனால் இவ்வளவு அழுத்தமான கதையை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த கதையை சொன்னவுடன், வெற்றி படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக எங்களுடன் நேர் நிலையான அணுகுமுறையுடன் தொடர்பு கொண்ட நண்பர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களை இணைத்துக் கொண்டு 'டாடா'வை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தில் பாடல்களும், இசையும் உயிர்ப்புடன் இருக்கும். படம் பார்த்த பிறகு நாங்கள் சொல்ல வந்த விடயம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்