தான்யா ரவிச்சந்தினின் 'றெக்கை முளைத்தேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

06 Feb, 2023 | 01:05 PM
image

நட்சத்திர வாரிசும், நடிகையுமான தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை மடோனா செபாஸ்டின், நடிகர் சூரி, இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

'சுந்தர பாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'றெக்கை முளைத்தேன்'.

இதில் கதையின் நாயகியாக நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீசன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

'' கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பார்க்க வேண்டிய படைப்பாக 'றெக்கை முளைத்தேன்' உருவாகியிருக்கிறது. முதன்முறையாக கதையின் நாயகியை முன்னிலைப்படுத்தி கதை எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, மூணாறு, தேக்கடி, வாகமண் ஆகிய இடங்களில் நடைபெற்றது.'' என்றார்.

பொது விழாக்களிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அதிகம் பேசாத நடிகை தான்யா ரவிச்சந்திரன், முதன் முதலில் கதையின் நாயகியாக நடித்திருப்பதால் 'றெக்கை முளைத்தேன்' படத்திற்கு அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை தான்யா ரவிச்சந்திரனின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்