இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய திருநாள்

Published By: Nanthini

05 Feb, 2023 | 03:57 PM
image

முருகனுக்கு உகந்த விரத தினம் தைப்பூசம். ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிய நன்னாளில் இவ்விரத தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தைப்பூச விரதமானது இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள இந்துக்கள் முருகனை வேண்டி மெய்யன்பும் பக்தியோடும் வழிபாடு நடத்தும் தினமாகும். இலங்கை, இந்தியா மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர்,  இந்தோனேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் வசிக்கும் இந்துக்களும் வெகு விமரிசையாக தமிழ்க்கடவுளான முருகனை போற்றி வழிபடுவது வழக்கம்.

இவ்வருடம் தைப்பூசத் திருநாள் இன்று (5) ஞாயிற்றுக்கிழமையான பௌர்ணமி தினத்தில் தோன்றுகிறது.

இத்தினம் பழங்காலத்து முருக வழிபாட்டினை தழுவி வந்துள்ளதாகவும், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தைப்பூசம் கொண்டாடப்பட்டதாகவும் இலக்கிய குறிப்புகள் எடுத்தியம்புகின்றன.

இது தொடர்பாக தேவாரப் பதிகங்களிலும் குறிப்புகள் உள்ளன. 

"தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த" என்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். 

பிற்கால சோழர் ஆட்சியில் தைப்பூச தினத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, திருவிடைமருதூர் மகாலிங்கேஷ்வரர் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக சோழர் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தைப்பூசத்தன்றே உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை இந்துக்கள் மத்தியில் உலவுகிறது.

தேவசேனாதிபதியாகி முருகன் தாரகாசுரனை வதம் செய்த நிகழ்வினை தைப்பூசமாக அறுபடை வீடான பழனியில் அனுஷ்டிக்கின்றனர்.

சிவன் உமாதேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்தத் திருநடனம் ஆடி, தரிசனமளித்த நாளே தைப்பூசம் என தில்லைவாழ் அந்தணர் புராணம் கூறுகிறது.

சிதம்பரத்து தில்லை நடராஜரை இரண்யவர்மன் எனும் மன்னன் நேருக்கு நேராக தரிசித்த நாள் தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலான சிவன் கோவில்களில் தைப்பூச பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

குரு பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டாகுமாம்.

இந்நாளில் முருகன் ஆலயங்களில் காவடி, பாற்குட பவனி, தீச்சட்டி ஏந்தல், தலைமுடி இறக்குதல், சிறுவர்களுக்கு காது குத்துதல், அங்கப் பிரதட்சணங்கள், தீமிதிப்பு, அலகு குத்துதல் போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுவதும் வழக்கம்.

தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளிலும் தைப்பூசம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூச நாளன்று தான் யாழ்ப்பாணத்தில் இந்து மக்கள் நெற்புதிர் அறுவடை செய்வர். அன்று அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று, கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்குவர்.

பின் ஒருவர் தேங்காய் உடைக்க, மற்றவர் முற்றிய புது நெற்கதிர்கள் சிலவற்றை அறுத்து வீட்டுக்கு எடுத்து வருவர். 

அதனை குடும்பத்தலைவி பெற்று, சுவாமி அறையில் வைப்பார். அதிலிருந்து சில நெல்மணிகளை எடுத்து, உமியை நீக்கி அந்த அரிசியை பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் இட்டு, குடும்பத்தினருக்கு பரிமாறுவார். 

அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து, அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். 

இந்த நிகழ்வு நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முதலான முருகன் கோவில்களில் தைப்பூசத்துக்கு முதல் நாள் இடம்பெறும். 

அதேபோன்று ஊரில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தன்று பாற்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

இலங்கையில் பல முருகன் ஆலயங்களில் தைப்பூசம் பெரும் விழாவாக சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

இத்தனை சிறப்புகள் கொண்ட தைப்பூச விரத நாளான இன்று கோடான கோடி பக்தர்களுக்கு முருகப்பெருமான் பேரருள் புரிவாராக!

- எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று ஸ்ரீராம நவமி விரதம்

2023-03-30 21:40:01
news-image

பொகவந்தலாவையில் 35 ஆவது வருடமாக நிகழ்த்தப்படும்...

2023-02-19 19:06:52
news-image

மகத்துவங்கள் நிறைந்த மஹா சிவராத்திரி

2023-02-18 11:40:35
news-image

'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

2023-02-16 16:56:52
news-image

சிவபெருமானின் சிவ ரூபங்கள்...

2023-02-15 17:15:22
news-image

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்...

2023-02-08 21:08:52
news-image

ஆன்மிக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

2023-02-07 17:28:48
news-image

இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய...

2023-02-05 15:57:19
news-image

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ்...

2023-01-30 11:34:37
news-image

ஈமச் சடங்கு...!

2023-01-28 16:35:14
news-image

முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து...

2023-01-20 21:35:30
news-image

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது -...

2023-01-20 11:08:18