(எம்.மனோசித்ரா)
இலங்கை சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உயர் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு, காலி முகத்திடலில் கோலாகலமாக பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், பாக்கிஸ்தான், மாலைதீவு மற்றும் பொதுநலவாய அமைப்பு என்பவற்றை சேர்ந்த 8 இராஜதந்திரிகளும் பங்கேற்றிருந்தனர்.
காலி முகத்திடலில் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னாள் அமைந்துள்ள தேசிய மாவீரர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. காலி முகத்திடலுக்குச் செல்லும் பிரதான வீதிகளில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
காலி முகத்திடலிலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான பகுதிகளில் சில இடங்களில் நீர்த்தாரை பிரயோக வாகனத்துடன் கலகம் அடக்கும் பிரிவினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரமுகர் வருகை
பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, விமானப்படை தளபதி எயா மார்ஷல் எஸ்.கே.பதிரண, கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா, இராணுவ தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் வருகை தந்தனர்.
மேலும், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்கள், மேல் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்கள், பிரதம நீதியரசர், சபாநாயகர் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள்
பாக்கிஸ்தான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹீனா ரப்பானி, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டகெய் ஷூன்சுகே, இந்திய வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வ.முரளிதரன், பூட்டான் கல்வி மற்றும் திறன்விருத்தி அமைச்சர் ஜெய்பர் ராய், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லண்ட், நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராயி பௌடியால், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீத், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மூமன் உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி வருகை
இராஜதந்திரிகளின் வருகையை தொடர்ந்து 8.15 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வருகை தந்தனர். இதன்போது ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது 105 பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதமும் பாடப்பட்டது.
மௌன அஞ்சலி
இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை, ஒற்றுமை என்பவற்றின் நிலைப்பாட்டின் பொருட்டு உயிர் நீத்த சகல தேசாபிமானிகளையும் நினைவுகூருவதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பீரங்கி வேட்டுக்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்க 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அணிவகுப்பு
இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி உள்ளிட்டவற்றின் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது.
இதில் விமானப்படையைச் சேர்ந்த 3284 வீரர்களும், கடற்படையைச் சேர்ந்த 867 வீரர்களும், விமானப்படையைச் சேர்ந்த 695 வீரர்களும், 336 பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு படையணியைச் சேர்ந்த 220 பேரும், சிவில் பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 437 பேரும், தேசிய மாணவர் படையணியைச் சேர்ந்த 546 பேரும், ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் 21 பேரும், அங்கவீனமுற்ற வீரர்கள் 29 பேரும் கலந்துகொண்டனர்.
எவ்வாறிருப்பினும், இம்முறை வழமையாக இடம்பெறும் கலை நிகழ்வுகள் (நடனங்கள்) இடம்பெறவில்லை.
பரஷூட் சாகசம்
நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் சுதந்திர நிகழ்வில் முதன்முறையாக முப்படையினர், பொலிஸார் உள்ளிட்டோரால் பரஷூட் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. சுமார் 7000 அடி உயரத்தில் தேசிய கொடி, முப்படைகளின் கொடி மற்றும் பொலிஸ் கொடியை ஏந்தியவாறு பரஷூட் சாகசம் நிகழ்த்தப்பட்டது.
தமிழில் தேசிய கீதம்
நிகழ்வின் நிறைவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை விசேட அம்சமாகும். இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-4 முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், கொழும்பு-7 ரோயல் கல்லூரி, வத்தளை புனித அந்தோணி தேசிய பாடசாலை, இந்து கல்லூரி மாணவர்களால் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM