தலைக்கூத்தல் - திரை விமர்சனம்

Published By: Nanthini

03 Feb, 2023 | 05:33 PM
image

தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோஸ்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, கதா நந்தி, வையாபுரி, 'ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்ட பலர்.

இயக்கம்: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்

மதிப்பீடு: 2/5

சுய நினைவின்றி படுக்கையில் கிடக்கும் தந்தையை மகன் சமுத்திரக்கனி பேணி, பராமரிக்கிறார். ஆனால், அவரது மனைவியும், மனைவியின் உறவினர்களும், ஊர் மக்களும், வயதின் காரணமாகவும், பொருளாதார பற்றாக்குறையின் காரணமாகவும், கிராமத்து பழக்கவழக்கமான 'தலைக்கூத்தல்' எனும் சடங்கை செய்து, அவரை உயிரிழக்கச் செய்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இதற்கு சமுத்திரக்கனி ஒப்புக்கொண்டாரா, இல்லையா? இதுதான் இப்படத்தின் கதை.

'கேடி என்கிற கருப்பு துரை', 'பாரம்', 'மருது' என பல தமிழ் திரைப்படங்களில் நேர்த்தியாகவும், வணிகத்தனத்துக்காகவும் பயன்படுத்தப்பட்ட கருணைக்கொலை அடிப்படையிலான இந்த விடயத்தை யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த காலகட்டத்திய மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய ஏராளமான விடயங்கள் வரிசைகட்டி நிற்கும்போது, இதுபோன்ற அரிதான கிராமத்து பழக்கவழக்கத்தை மையப்படுத்தி, கதையை எழுதி இயக்கியிருக்கும் 'லென்ஸ்' புகழ் ஜெய பிரகாஷை வாழ்த்த மனமில்லை என்றாலும், பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

கோமா நிலையில் இருக்கும் கதாபாத்திரத்துக்கு, நனவோடை முறையில் காட்சிகளை விவரித்திருப்பது சரியா? 

சமுத்திரக்கனியின் தாய் யார் என்பது குறித்த காட்சிகளோ வசனங்களோ இல்லை. 'தலைக்கூத்தல்' என்ற சடங்குக்கு எதிராக நாயகனின் கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு, பின் இறுதிக் காட்சியில் அதற்கு எதிரான நிலைப்பாட்டுக்கு நாயகனை உடன்பட வைத்து சமரசம் செய்திருப்பது யதார்த்தமாக இல்லை. 

சமுத்திரக்கனியின் மனைவியான வசுந்தரா, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும்போது பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார். இது தொடர்பாக அவர் தனது கணவரிடம் நாசுக்காக சொல்லும்போது, குறைந்தபட்ச அற சீற்றம் கூட ஏற்படாமல், 'வேறு வேலைக்கு போறியா?' என அந்த நாயக கதாபாத்திரம் பேசுவது அவருடைய குணாதிசயத்தை கேள்விக்குறியாக்குகிறது. 

சமுத்திரக்கனி சிறந்த குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல, அறிவார்ந்த இயக்குநரும் கூட. அவரும் இது போன்ற இடத்தில் இத்தகைய வசனங்களை பேசுவதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

'ஆடுகளம்' முருகதாஸ் கதாபாத்திரம் திரைக்கதைக்கு எந்த வகையில் உதவி புரிந்தது என்பது இயக்குநருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். இதுபோன்ற வாழ்க்கை மீது பற்றற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, பார்வையாளர்களின் எண்ணங்களை திசை திருப்பும் போக்கை திரையுலக படைப்பாளிகள் கைவிட வேண்டும். 

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்வதற்கு தன்னம்பிக்கை தேவை. இவை அனைத்து தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதே படைப்பாளிகளிடமிருந்து பாமர மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேற்கு வங்காளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் கதா நந்தி என்ற நடிகையின் கண்கள், அசலாகவே அகன்று இருப்பது அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டுகிறது. உச்சகட்ட கட்சியில் அவர் இலந்தை பழத்துடன் வருவது சிலருக்கு பிடித்திருந்தாலும், அவரைப் பற்றிய ப்ளாஷ்பேக் அல்லது காட்சிகள் திரைக்கதையில் இடம்பெறாதது ஏமாற்றம்.

சமுத்திரக்கனியின் இள வயது தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிரின் தோற்றம், நடிப்பு என எதுவும் பார்வையாளர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

ஒளிப்பதிவு, இசை, பின்னணியிசை தரத்தை நிரூபித்து, ரசிகர்களை இருக்கையில் அமரச் செய்கிறது. 

சமுத்திரக்கனியின் நடிப்பு எந்தவித புதிய பரிமாணத்தையும் வெளிப்படுத்தாமல், வழக்கம் போல் இருப்பதால் அவர் திரையில் தோன்றுவது சலிப்பை தருகிறது.

தலைக்கூத்தல் - ரசிகர்களுக்கு காதுகுத்தல்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்