அமெரிக்கா 2017 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீடாக 618 பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிந்துரைக்க தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

உலக வல்லரசிற்கான போட்டிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு முன்னணி நாடும் தமது இராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றாற்போல் 2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு துறைக்கு வேறு எந்த துறைகளுக்கும் ஓதுக்கீடு செய்யாத அளவிலான பாரிய நிதியான 618 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

தற்போது பண்டிகைக்கால விடுமுறையில் ஹவாய் தீவுகளுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஓபாமா குறித்த நிதி ஒதுக்கீட்டு கோவையை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பாதுகாப்பு வலையமைப்பில் ஆசிய பிராந்திய பாதுகாப்பு கட்டுமானங்களை நடைமுறை செய்வதற்காக இந்தியாவுடன் பாதுகாப்புசார் படை நடவடிக்கைகளுக்கான ஓத்துழைப்பு உருவாக்குவதற்கு இராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சுக்கு ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாகவும்  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி பகிர்ந்துள்ளன.

குறித்த நிதி ஓதுக்கீட்டில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான யுத்த நடவடிக்கைகளுக்கு 1.2 பில்லியன் டொலர்களும், பாதுகாப்பிற்கான கூட்டணி நாடுகளை கட்டமைப்பதற்கான நிதியாக 900 மில்லியன் டொலர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு திட்ட ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானுக்கு 400 மில்லியன் டொலர்களை நிபந்தனையின் கீழ் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அமெரிக்காவின் குறித்த நிதி ஒதுக்கீடானது உலக வல்லரசிற்கான முதன்மை நாடுகளின் ஆதிக்கப் போட்டிகளை மேலும் வலுவடையச் செய்யும் செயற்பாடாக காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.