(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்ற தேர்தல் செலவுகளுக்கு , வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். எனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை செலவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுப்பணம் செலுத்தப்படுவதற்கான காரணம் தேர்தலில் அநாவசியமான நபர்களின் பிரவேசம் காணப்படக் கூடாது என்பதற்காகவேயாகும்.
இது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
கட்டுப்பணம் இதுவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட கட்டுப்பணம் திறைசேறிக்கு அனுப்பி வைக்கப்படும். எஞ்சிய பணம் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கும் , சுயாதீன குழுக்களுக்கும் திருப்பி செலுத்தப்படும்.
எனவே இம்முறை செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். ஆணைக்குழுவின் தரவிற்கமைய சுமார் 80 000 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அவர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும்.
அது தேர்தலை சுதந்திரமாகவும் , நியாயமானதாகவும் நடத்துவதில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும். அரசியலமைப்பின் 21ஆவது உறுப்புரையின் 30(4) க்கு அமைய இந்த ஆணைக்குழு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒன்றாகும்.
அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததன் பின்னர் பதவி விலக வேண்டும். இவ்வாறான நிலையில் முறையற்ற வகையில் அரசாங்கப் பணம் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். அத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM