ஜோதிடம் - சிக்கல்களிலிருந்து விடுபட வழிகாட்டுகிறதா..?

Published By: Ponmalar

01 Feb, 2023 | 05:34 PM
image

எம்மில் பலரும் தங்களது வாழ்க்கை முறையினை- வேகமான வாழ்க்கை நடைமுறையுடன் இணைத்துக் கொண்டு, மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலக இயக்கமும், மனித இயக்கமும் ஐம்பூதங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் இலக்கணப்படி இயல்பாகத்தான் இருக்கிறது. எம்மில் பலரும் எம்முடைய முன்னோர்கள் விட்டுச் சென்ற மதிப்புமிகு விடயங்களை பின்பற்றுவதில்லை. மேலும் அதனை அதே அடர்த்தியுடனும், வீரியத்துடனும் அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிப்பதில்லை. இதனால் அடுத்த தலைமுறையினர் பிரச்சினைகள் வரும்போது, அதனை எதிர்கொள்வதற்கு தடுமாறி, திசை மாறி பயணிக்கத் தொடங்குகிறார்கள். 

உதாரணத்திற்கு எம்முடைய குலதெய்வம் யார்? என்பதனை, எம்முடைய அப்பப்பா, அப்பம்மா அல்லது மூத்தவர்கள் துல்லியமாக எடுத்துரைப்பதில்லை. இதனால் தற்போதைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்றம் பெறுகிறது. மன அழுத்தத்துடனும், அமைதியின்மையுடனும் வாழ தொடங்குகிறார்கள். இதனையே அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

மேலும் தற்போதைய சூழலில் இளைய தலைமுறையினர், தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதற்காக ஜோதிடர்களை நாடுகிறார்கள். அவர்களை அணுகும் போது, நீங்கள் இரண்டு தலைமுறையாக சேர்த்து வைத்திருக்கும் கர்ம வினைகள் குறித்தும், அதற்கான பரிகாரங்களை இந்த திகதியில்... இந்த நட்சத்திரத்தில்... இந்த ஆலயத்திற்கு சென்று... இந்த முறையில் வழிபாடு செய்தால் பாதிப்புகள் குறைந்து பலன் கிடைக்கும் என்கிறார். மேலும் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு கர்ம வினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறார்.

உடனே அதனை முழு மனதுடனும், ஒருமுகமான மனதுடனும் ஏற்றுக் கொள்ளாமல், ஜோதிடர்களிடம் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை என்பதால், அன்று இதனை மேற்கொள்ளலாமா..? என ஒரு பிரிவினர் கேட்கிறார்கள். மேலும் வேறு சிலர், நீங்கள் குறிப்பிட்ட ஆலயத்தில் தான் மேற்கொள்ள வேண்டுமா..? அல்லது அருகிலிருக்கும் ஆலயத்தில் இதனை மேற்கொள்ளலாமா? என வினவுகிறார்கள். வேறு சிலர் இதனை நான் செய்ய வேண்டுமா? அல்லது என் சார்பில் என் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொள்ளலாமா? என கேட்கிறார்கள். வேறு சிலர், ஜோதிடர் குறிப்பிட்ட பரிகாரங்களை ஒரேயொரு முறை மேற்கொண்டவுடன், 'எங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை' என வருத்தத்துடன் தெரிவித்து விட்டு, சோதிடர்களிடமே 'மாற்று என்ன? 'என கேட்கிறார்கள்.

இந்த தருணத்தில் ஒரே ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். ஜோதிடர்கள் என்பவர் உங்களுடைய பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குவதில்லை. ஆனால் நீங்கள் சுமக்கும் கர்ம வினைகளைக் குறைப்பதற்காகவும், அதனூடாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் முழுமையாக கிடைப்பதற்கும் நேர் நிலையான முறையில் வழிகாட்டுகிறார். அதில் நீங்கள் தான் தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் பயணித்து உங்களுக்கான இலக்கை அடைய வேண்டும். இதனை சாதகர்கள் ஒருபோதும் பின்பற்றுவதில்லை. இதனால் 'பரிகாரங்கள் பொய்' என கருத்து தெரிவிக்க தொடங்குகிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்க இயலாது.

ஆயிரம் பாவங்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரே ஒரு முறை அன்னதானம் செய்வதன் மூலம் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா..? மேலும் சோதிடர்கள் சொல்லும் தீர்வு அல்லது வழிகாட்டல் நீங்கள் எந்த தருணத்திலிருந்து மேற்கொள்கிறீர்கள் என்பதும், உங்களுக்கு சாதகமான திசா புத்தி நடக்கும் போது தான் நீங்கள் மேற்கொண்ட பரிகாரத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். 

''அனைத்து வகையினதான உறவுகளுக்கு மதிப்பும், மரியாதையும் வழங்க வேண்டும். ஆரோக்கியமான முறையில் உங்கள் வீட்டு சமையலறையில் உணவை தயாரித்து,  சாப்பிட வேண்டும். ஆலய வழிபாட்டிலும், இறை நம்பிக்கையிலும் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் ஈடுபட வேண்டும். சக மனிதர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நேசிக்க வேண்டும்...'' என ஏராளமான நல்ல விடயங்களை எம்முடைய முன்னோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். ஆனால் நாமோ பகுத்தறிவு, விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி..., என ஏதேதோ சில காரணங்களை கற்பித்துக் கொண்டு, அதில் உள்ள நேர்நிலையான விடயங்களை தவிர்த்து, எதிர்நிலையான விடயங்களை காரணியாக்கி, நம்மை நாமே செதுக்கிக் கொள்ளாமல், சிதைத்து கொள்கிறோம்.

'உழைத்து வாழ்வோம். பசித்த பின் புசிப்போம். இறை நம்பிக்கையுடன் சகலரையும் நேசிப்போம்' என எளிமையான கொள்கையை மனதில் நினைத்து, வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ தொடங்கினால், பிரச்சினைகள் என்பது இருக்காது. அதையும் கடந்து பணம், சூழல் ஆகியவற்றின் காரணமாக பிரச்சினைகள் உருவானால், அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு சோதிடர்களை அணுகி, அவர்களின் வழிகாட்டலுடன் பயணித்தால், உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வு உங்களிடமே இருக்கிறது என்பதனை எளிதாக உணர்வதுடன், அதனை கண்டு பிரச்சினைகளைத் தீர்க்கவும் இயலும்.

சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்