கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் கழிவகற்றல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நகரப்பகுதிகளில் வௌ்ளப்பாதிப்பு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க புதிய அபிவிருத்தி திட்டமொன்று அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள பெருநகரங்களில் புதிய நிலக்கீழ் கால்வாய் திட்டம், கழிவு நீர் திட்டம் மற்றும் நீர் சுத்திகரிப்பு திட்டம் போன்றன ஏற்படுத்தப்படவுள்ளன.

தற்போது எமது நாட்டின் காலநிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்படுப்படும் மழைவீழ்ச்சியின் அளவில் 280 மி.மீ மழைவீழ்ச்சியின் கொள்ளவை மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படாதிருக்கக்கூடிய அதிகபட்ச அளவாக காணப்படுகின்றது. ஆனால் குறித்த அபிவிருத்தி திட்டம் மூலம் 450 மி.மீ மழைவீழ்ச்சியைகூட இலகுவாக எதிர்கொள்ள முடியும்.

குறித்த திட்டம் மூலம் மெதிவல தெற்கு பகுதியிலிருந்து பாராளுமன்றத்தின் தியவன்னாவுவ வாவியை இணைக்கும் வகையிலும், மெதிவல கிழக்கு பகுதியிலிருந்து களனி ஆற்றின் அம்பத்தல பகுதி மற்றும் கொலன்னாவ பகுதியின் களனி ஆற்றின் சேதவத்த பகுதியில் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் புதிய நிலக்கீழ் வடிகாலமைப்பு முறைகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகலகம வீதியில் குழாய்நீர் நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த குழாய்நீர் கிராண்ட்பாஸிலிருந்து களனி ஆற்றில் கலக்கும் விதமாக அமையும். மேலும் கொழும்பு 07 பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வடிகாலமைப்பு திட்டமொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

குறித்த திட்டம் மூலமாக வெள்ளம் ஏற்படுவதை தடுக்க வெள்ளநீர் மதிப்பீட்டு திட்டம் மற்றும் புதிய மழைநீர் அளவுதிட்ட குறிகாட்டிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குறித்த புதிய வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் கழிவகற்றல் முறைமை 2018 ஆம் ஆண்டில் புர்த்தி செய்யப்படும் என்றார்.