விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய விஜயம் தாமதம்

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 01:35 PM
image

(என்.வீ.ஏ.)

விசா பிரச்சினை காரணமாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜாவின் இந்திய விஜயம் தாமதம் அடைந்துள்ளது.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாக்பூரில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரை முன்னிட்டு அவுஸ்திரேலிய அணியினர் இரண்டு குழுக்களாக செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், விசா பிரச்சினை காரணமாக இந்த இரண்டு குழுக்களுடன் கவாஜாவினால் இந்தியா செல்ல முடியாமல் போனது.

எனினும் அவர் வியாழனன்று (02) அவுஸ்திரேலியாவிலிருந்து பெங்களூரு நோக்கி புறப்படுவார் என அவுஸ்திரேலய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய அணியினர் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமைவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இந்தத் தொடர் முக்கியம் வாய்ந்தாக அமையவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 58.93 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

எனவே இந்தத் தொடரில் ஆரம்ப வீரர் கவாஜா அணியில் இடம்பெறுவது அவுஸ்திரேலியாவுக்கு முக்கியமாகும். அவுஸ்திரேலிய கிரிக்கெட் விருது விழாவில் உஸ்மான் கவாஜாவுக்கு அதிசிறந்த கிரிக்கெட் வீரர் உட்பட இரண்டு விருதுகள் கிடைத்தன.

இன்று புதன்கிழமை (01) சிட்னியிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது குழுவினர் புறப்பட்டுச் சென்ற பின்னர் சமூக ஊடங்களில் தனது நிலை குறித்து கவாஜா பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

'எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன்', 'நிர்க்கதியாகியுள்ளேன்', 'என்னை விட்டுச் செல்லவேண்டாம்', 'எந்த நேரத்திலும்' போன்ற வசனங்களை சமூக ஊடகங்களில் கவாஜா பதிவிட்டுள்ளார்.

எனினும் அவர் வியாழனன்று (02) அவுஸ்திரேலியாவிலிருந்து பெங்களூரு நோக்கி புறப்படுவார் என அவுஸ்திரேலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள உஸ்மான் கவாஜா, இதற்கு முன்னர் பல தடவைகள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளார். அதில் 2013, 2017 கிரிக்கெட் வியஜங்கள் அடங்குகின்றன. எனினும் அப்போதும் அவருக்கு இந்திய விசா பெறுவதில் சிக்கல் நிலவியது.

இந்தியாவில் 2011இல் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியின்போதும் அவருக்கு இந்திய விசா மறுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சம்பியன்ஸ் லீக்கில் அவர் விளையாடியிருந்தார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான 36 வயதுடைய உஸ்மான் கவாஜா, 56 டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்கள், 19 அரைச் சதங்களுடன் மொத்தமாக 4,162 ஓட்டங்களைப் பெற்றள்ளார்.

இந்தியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் பெட் கமின்ஸ் (தலைவர்), ஸ்டீவன் ஸ்மித், அஷ்டன் அகார், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னுஸ் லபுஸ்சான், நெதன் லயன், லான்ஸ் மொறிஸ், டொட் மேர்ஃபி, மெட் ரென்ஷோ, மிச்செல் ஸ்டார்க், மிச்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்