தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம்

Published By: Digital Desk 5

01 Feb, 2023 | 06:46 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 2017 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கென தேசிய ரீதியான மனித உரிமைகள் செயற்திட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. 

இருப்பினும் அச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை மற்றும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு தயாரிப்புப்பணிகள் அடிப்படை  முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையுமெனச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வலுவலகம், அப்புதிய அரசியலமைப்பு வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக பொதுவெளியில் விவாதத்துக்கு உட்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தகவல்கள் புதன்கிழமை (01) ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இம்மீளாய்வுக்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட 13 பக்க அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமுலுக்குக்கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 திருத்தம் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் சிலர் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். அத்திருத்தத்தின் ஊடாக கட்டமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் நீக்கப்பட்டதுடன் அரச கட்டமைப்புக்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றின் நேர்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. அதுமாத்திரமன்றி ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கு அவசியமான கூறுகள் புறக்கணிக்கப்பட்டன.

இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை மற்றும் அரசியல் அதிகாரங்களின் பரவலாக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு தயாரிப்புப்பணிகள் அடிப்படை  முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையுமென ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருப்பதுடன் அப்புதிய அரசியலமைப்பு வரைபை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துமாறும், அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக பொதுவெளியில் விவாதத்துக்கு உட்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனத்தின்போது போதியளவிலான வெளிப்படைத்தன்மை, பல்லினத்தன்மை மற்றும் சுயாதீனத்துவம் என்பன பேணப்படாமை குறித்தும், அந்த ஆணைக்குழு மனித உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கும் ஆணையை உரியவாறு செயற்படுத்துவதற்குத் தவறியுள்ளமை குறித்தும் உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலும் குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் சட்ட அமுலாக்கம், நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் மேலோங்கிவரும் இராணுவத்தின் வகிபாகமும் கரிசனைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருப்பினும் இராணுவ வீரர்களின் காவல், இராணுவ சோதனைச்சாவடி என்ற ரீதியில் இராணுவப்பிரசன்னம் தொடர்வதுடன் போதைப்பொருள் தொடர்பான சட்ட அமுலாக்கம், விவசாயம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இராணுவத்தின் வகிபாகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிவில் செயற்பாடுகளில் காணப்படும் இராணுவ ஆதிக்கத்தை முடிவிற்குக்கொண்டுவருவதற்கும், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னத்தைக் குறைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துக் காணிகளும் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்படவேண்டும்.

அடுத்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழுவினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 2017 - 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கென தேசிய ரீதியான மனித உரிமைகள் செயற்திட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

மேலும் இலங்கையின் பாதுகாப்புப்படையினரால் நிகழ்த்தப்பட்ட கடத்தல்கள், சட்டவிரோத தடுத்துவைப்புகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன குறித்தும் பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் தொடர் மரணங்கள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை காணாமல்போனோரைத் தேடுவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க கொள்கையொன்று இன்னமும் தயாரிக்கப்படாமை  தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அவர், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு, இழப்பீடு பெறுவதற்கான உரிமை, வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொதுமன்னிப்புக்கோரி விண்ணப்பிக்கத்தடைவிதித்தல் ஆகியவற்றுக்கான சரத்துக்களை உள்ளடக்கி திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடத்தைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர் பயன்பாடு, தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு உள்ளடங்கலாக நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29