'மைக்கேல்' படத்தில் சிரிக்காத சந்தீப்

Published By: Nanthini

31 Jan, 2023 | 03:23 PM
image

'மைக்கேல்' படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் அந்த கதாபாத்திரத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.  

கதையின்படி, அவர் திரையில் சிரிக்கவே மாட்டார். அவருக்கான வசனங்களும் குறைவு. குறைந்த வசனங்களில் என்ன சொல்ல வேண்டுமோ அதை நிறைவாகவும் தெளிவாகவும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி கதாநாயகனுக்கு உண்டு. 

இதனை சந்தீப் கிஷன் மிக எளிதாகவும் அநாயாசமாகவும் கையாண்டார். இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்'' என அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தெரிவித்தார்.

கரண் சி.எல்.எல்.பி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்து, பெப்ரவரி 3ஆம் திகதி வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. 

எக்ஷன், என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌஷிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ், தீப்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

பட வெளியீட்டை முன்னிட்டு அதனை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 

இதன்போது திரைப்பட தயாரிப்பாளர்களான எஸ்.ஆர். பிரபு, கே.ஈ. ஞானவேல் ராஜா, தனஞ்ஜெயன், சி.வி. குமார், நடிகை ரெஜினா கஸண்ட்ரா உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில், 

''இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தை நிறைவுசெய்த பிறகு, இருவரும் கொரோனா காலகட்டத்தின்போது மீண்டும் சந்தித்தோம். அப்போது முழு நீள எக்ஷன் திரைப்படமொன்றை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். 

ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டால் அதன் தொடக்கம் முதல் படத்தின் வெளியீடு, விளம்பரப்படுத்தும் நிகழ்வு வரை அனைத்திலும் தன்னிச்சையாக ஆர்வம் கொண்டு பங்குபற்றி தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் சந்தீப் கிஷன் தனி ரகம். 

தயாரிப்பாளர்களின் நலன்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு படைப்பை வழங்கி, தனக்கான அடையாளத்தை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பவர் சந்தீப் கிஷன். 

இந்த திரைப்படத்திலும் அவர் தன் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார். 

திரையுலகில் கலைஞர்களிடையே நட்பை பேணுவதில் சிறந்தவரான சந்தீப் கிஷன், 'மைக்கேல்' படத்தில் வித்தியாசமான எக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

அதிகம் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், இந்த படத்தில் பேசும் வசனங்கள் மிக குறைவு. அதற்குள் நான் நினைத்த கதாபாத்திரத்தின் எண்ணங்களை நடிப்பால் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியவர். 

இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்'' என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்திய அளவில் 'மைக்கேல்' படம் வெளியாகிறது. 

இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் சந்தீப் கிஷனுக்கு தமிழில் மட்டுமன்றி, ஏனைய மொழி திரைத்துறைகளிலும் நட்சத்திர அந்தஸ்து கிட்டும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right