பனி காலம் வந்துவிட்டது. இரவில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை அணைத்துவிட்டு, மின் விசிறியையும் அணைத்துவிட்டு, போர்வையைப் போர்த்திக் கொண்டு பனியை சமாளிக்கும் பல குடும்பங்கள் தொண்டை கரகரப்பிற்கும் ஆளாகும். இதன் போது என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தொண்டை கரகரப்பு சிலருக்குத் தொண்டை வலியாக மாறும். இது யாருக்கு வேண்டுமானலும்,எந்த வயதினராக இருந்தாலும் வரக்கூடும். ஒரு சிலருக்கு உமிழ் நீர் விழுங்கக்கூட இயலாத சூழல் ஏற்படும். சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமியின் தொற்றால் தான் இவை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு எச்சில் விழுங்கும் போது அடிநாவின் பின்பக்கம் சிவந்து வெண்மையாக புள்ளிகள் போன்று பரவியிருக்கும்.குளிர் காய்ச்சல் கூட ஏற்படலாம். பெரும்பாலும் சளி,எச்சில் வழியாகவே இதன் பாதிப்பு மற்றவருக்கும் தொற்றக்கூடும். அதனால் மறவாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.

அத்துடன் இதமான சூட்டில் கல் உப்பு போட்ட நீரைக் கொண்டு வாயை கொப்புளிக்கவேண்டும். அத்துடன் கற்பூரவல்லி இலைகளை பறித்து, நீரில் போட்டு கொதிக்கவைத்து, கஷாயம் செய்து பருகலாம். ஜலதோஷம், பனியால் ஏற்படும் சளி ஆகியவை குறைந்துவிடும். குறிப்பாக டான்சில் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம்.

டொக்டர் கே உமாபதி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்