(பாலநாதன் சதீஸ்)
சுகாதார தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் உரிய முறையில் மேற்பார்வையுடன் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்ட நியதியாக நகரசபை நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றபோதும், வவுனியா நகரசபையில் அவ்விதமான பின்பற்றலொன்று காணப்படாத நிலையே நீடிக்கிறது.
தொழிற்பயிற்சிகள் ஒழுங்கான முறையில் வழங்கப்படுவதில்லை. அதேபோன்று மருத்துவ பரிசோதனையும் வருடந்தோறும் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை.
உண்மையில், மருத்துவ பரிசோதனையும் தொழிற்பயிற்சியும் கட்டாயமானது. அவற்றை எமக்கு வழங்க வேண்டும். ஆனால், அவை கிடைப்பதில்லை என்று வவுனியா நகரசபையின் கீழ் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதார தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பின்வருமாறு வினவப்பட்டது.
நகரசபை தொழிலாளர்கள் (சுகாதார தொழிலாளர்கள்) எத்தனை பேர், அவர்களுக்கு சரியான முறையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா? வழங்கப்பட்டிருப்பின், அதன் முழுமையான விபரம், காப்புறுதி வழங்கப்பட்டால், அது எவ்வகையான காப்புறுதி, அதன் விபரம் போன்றவை தொடர்பாக கேட்டதற்கு,
வவுனியா நகரசபையில் நிரந்தரமாக 51 சுகாதார தொழிலாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 19 சுகாதார தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். காலத்துக்கு காலம் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. அரசினால் வழங்கப்படும் அக்ரஹாரா காப்புறுதி வழங்கப்படுகிறது என இரு வரிகளில் பதில் கூறியிருக்கின்றனர்.
வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பத்து வட்டாரங்களிலும் நகரினை சுத்திகரிக்கும் பணியில் நிரந்தரமாக 51 பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில், 19 சுகாதார தொழிலாளர்கள் என மொத்தமாக 71 நகரசபை சுகாதார தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் திறந்தவெளிகளில் வீசப்பட்டிருக்கும் உணவுக் கழிவுகளையும் ப்ளாஸ்டிக் கழிவுகளையும் குழந்தைகளின் மலங்களையும் மாதவிடாய் துவாய்களையும் ஏனைய கழிவுகளையும் அகற்றி நகரினை சுத்தப்படுத்துகின்றனர்.
சுகாதார தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்புக் கவசமும் அணியாமல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதும், அவர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகள், சவால்கள் இருக்கின்றன என்பதை பற்றி ஓரிருவரை தவிர ஏனையவர்கள் அறியாமலேயே தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது கட்டுரையாளர் கள விஜயம் செய்து, சுகாதார தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை அவதானித்தபோது தெரியவந்துள்ளது.
இவ்வாறு நகரினை சுத்தப்படுத்தி, புதுமையாக அலங்கரிக்கும் சுகாதார தொழிலாளர்களுக்கு ஊதியம், கடன் தொகை, மருத்துவ பரிசோதனை, தொழிற்பயிற்சி என்பவற்றை காலத்துக்கு தகுந்தாற்போல் வழங்குவது நகரசபையினரின் தலையாய கடமையாகும்.
அந்த வகையில் நகரசபை சுகாதார பணியாளர்களுக்கு காலத்துக்கு காலம் தொழிற்பயிற்சி வழங்குவது அவசியமாகும்.
குப்பைகளை சரியான முறையில் எவ்வாறு அகற்றுவது? உபகரணங்களை எவ்வாறு கையாள்வது? எவ்வாறு குப்பைகளை தரம் பிரிப்பது? குப்பைகளை எவ்வாறு எரியூட்டுவது? குப்பைகளை எவ்வாறு அசேதன பசளையாக மாற்றுவது? இவை குறித்து அவர்களுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குவதும் அதே போன்று சுகாதார தொழிலாளர்களுக்கான காப்புறுதிகளை வழங்குவதும் சபையினரின் கடமையாகும்.
வருடந்தோறும் தொழிலாளர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுவதாக சபையினர், தகவலறியும் உரிமை சட்டத்தில் பதிலளித்திருந்தார்கள். ஆனால், 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில்,
குப்பைகள் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு, அந்த குப்பைகள் வகைப்படுத்தி சேகரிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் குப்பைகளை வெவ்வேறாக தரம் பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பதிலளித்திருந்தார்.
அதே ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் பொழிப்பு அறிக்கையில், சபையினர் குப்பைகளை கொட்டும் இடங்களுக்கு கொண்டு வரப்படுகின்ற குப்பைகளை வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, குப்பைகளை வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள். அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதை அறியத் தருகிறேன் என பதிலளித்திருந்தார்.
2020ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில்,
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரையும் வழங்கியிருந்தார்கள்.
இதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்திருந்தார்.
ஆகவே, சபையினரிடம் இருந்து தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும், கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சபையினர் வருடா வருடம் சுகாதார தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என கூறியிருக்கின்றனர். ஆனால், 2020ஆம் ஆண்டு வெளிவந்த கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில், கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அது ஒருபுறமிருக்க, 2019ஆம் ஆண்டு அறிக்கையில் குப்பைகள் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டு தரம் பிரிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
அதுமட்டுமன்றி, சுகாதார தொழிலாளர்கள் நான்கு பேர் 2019ஆம் ஆண்டு கொள்கலன் சுத்திகரிப்பின்போது உயிரிழந்துள்ளனர். இவற்றை தொகுத்து பார்க்கும்போது சுகாதார தொழிலாளர்களுக்கு சரியான முறையில் தொழிற்பயிற்சி வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக பின்வருமாறு வினவப்பட்டதற்கு சுகாதார தொழிலாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றதா? மேற்கொள்ளப்படுவதாயின், எப்போதிருந்து? அதன் விபரம்? மேற்கொள்ளப்படவில்லையாயின், அதற்கான காரணம் என்ன என்பன பற்றி கேட்கப்பட்டது.
கொரோனா காலமான 2020க்கு பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என இரு வரிகளில் பதிலளித்திருந்தார்கள்.
சுகாதார தொழிலாளர்களுக்கு சபையினரால் வருடாவருடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபடும் போது கிருமித்தொற்றுக்கு இலக்காவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதனால் சபையினரின் கீழுள்ள சுகாதார தொழிலாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவேண்டிய பொறுப்பு சபையையே சாரும். ஆனால், சபையினரால் அவ்வாறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே கூறலாம்.
எடுத்துக்காட்டாக, 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில்,
சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.
அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் மருத்துவ பரிசோதனை நடத்த ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என பதிலளித்திருந்தார்.
ஆகவே, தகவலறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும், கணக்காய்வு திணைக்களத்தினரது அறிக்கையினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2019ஆம் ஆண்டு கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையில் சுகாதார தொழிலாளர்கள் வருடாந்தம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், தகவலறியும் உரிமை சட்டம் மூலம் வழங்கப்பட்ட தகவலில் 2020ஆம் ஆண்டு கொரோனாவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என கூறியிருக்கின்றனர். இரண்டையும் வைத்து பார்க்கும்போது சபையினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கட்டுரையாளருக்கு வழங்கியமை வெளிப்படையாவதோடு, மருத்துவ பரிசோதனையையும் சரியாக மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM