'பொம்மை நாயகி' படத்திற்கு யோகி பாபு வணிக முகம் - பா.ரஞ்சித்

Published By: Digital Desk 5

30 Jan, 2023 | 10:20 AM
image

''தற்போதைய சூழலில் சிறிய பட்ஜட்டில் உருவாகும் படங்களுக்கான வணிகம் என்பது கடும் சவாலாகவும், பெரும் போராட்டமாகவும் இருக்கிறது.

மேலும் தமிழ் திரைப்பட சூழலில் சிறிய பட்ஜட் படங்களை சந்தைப்படுத்துவதற்கான முறையான திட்டமிடல் என எதுவுமில்லை'' என தயாரிப்பாளரும், இயக்குநருமான பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பொம்மை நாயகி'. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுபத்ரா நடித்திருக்கிறார். இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

ஆர் அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். எளிய மனிதனின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் மற்றும் மனோஜ் லியோனல் ஜாஸன், சி. வேலன், லெமுவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது படத்தின் தயாரிப்பாளரான பா ரஞ்சித் பேசுகையில், '' இந்தப் படத்தின் கதையை ஷான் எம்மிடம் வாசிப்பதற்காக வழங்கினார். அதை படித்த போது நான் நினைத்த  விடயங்கள் இருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். 

ஆனால் இந்த கதையை எம்முடைய நண்பர்கள் படித்து சில சிக்கல்களை சுட்டி காட்டினார். இருப்பினும் ஷான் மீதான நம்பிக்கையின் காரணமாக படத்தினை தொடர்ந்து தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து, காட்சிகளை காண்பித்த போது அதில் ஏராளமான விடயங்களில் சமரசம் இருந்தது. 

அதைச் சுட்டிக்காட்டி சமரசம் இல்லாமல் சுதந்திரமாக படமெடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். மேலும் உச்சகட்ட காட்சியினை மேலும் சிறப்பாக அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அதன் பிறகு இயக்குநர் ஷான் அதனை எளிதாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான உச்சகட்ட காட்சியை வழங்கி இருக்கிறார்.

இந்த படத்திற்கு யோகி பாபு தான் வணிக முகம். இன்றைய சூழலில் சிறிய பட்ஜட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு வணிகம் என்பது இல்லையென்றாகிவிட்டது. டிஜிட்டல் தளங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறிய பட்ஜட் படங்களுக்கு பேராதரவை வழங்கினர். 

ஆனால் இன்று அவர்கள் ஆண்டிற்கு 12 படங்களை தான் வாங்குகிறார்கள். அவை அனைத்தும் நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்களின் படைப்புகளாகவே இருக்கிறது. 

இங்குள்ள அனுபவமுள்ள மூத்த பெரிய தயாரிப்பாளர்களும், சிறிய தயாரிப்பாளர்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்குவதில்லை. 

மேலும் சிறிய பட்ஜட் படங்களை எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்த முறையான திட்டமிடலும், விவாதமும் இங்கு இல்லை. இருப்பினும் மக்கள் மீதும், படைப்பின் மீதும் உள்ள நம்பிக்கையின் காரணமாக பொம்மை நாயகியை தயாரித்திருக்கிறோம். 

மேலும் இது சமூகத்தில் பேச வேண்டிய விடயங்களை உரத்துப் பேசி இருப்பதால்  இதற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right