இங்கிலாந்தை வீழ்த்தி அங்குரார்ப்பண 19இன் கீழ் மகளிர் இ20 உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

29 Jan, 2023 | 10:36 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குபட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை இந்தியா சுவீகரித்து வரலாறு படைத்தது.

இதன் மூலம் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில்  சிரேஷ்ட   இந்திய மகளிர் அணியினால் சாதிக்க முடியாததை கனிஷ்ட அணி நிறைவேற்றியுள்ளது.

தென் ஆபிரிக்காவின் பொச்சேவ்ஸ்ட்ரூம் ஜே. பி. மார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்களால் வெற்றிகொண்டு இந்தியா சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டை நோக்கி துல்லியமாக பந்துவீசி இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனைகளை திக்குமுக்காட வைத்தனர். குறிப்பாக டிட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சொப்ரா ஆகிய மூவரும் மிகத் திறமையாகப் பந்துவீசி தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 69 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவி ஷஃபாலி வர்மாவும் ஷ்வெட்டா செஹ்ராவத்தும் 2 ஓவர்களில் 16 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

ஷஃபாலி வர்மா ஒரு சிச்ஸ், ஒரு பவுண்டறியுடன் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த ஆட்டமிழந்தார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதிலடத்தில் உள்ள ஷ்வெட்டா செஹ்ராவத் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சௌமியா திவாரி, கொங்காடி த்ரிஷா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இந்தியாவுக்கு உதவினர்.

எவ்வாறாயினும் கொங்காடி த்ரிஷா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 3 ஓட்டங்களை சௌமியா திவாரி பெற்றுக்கொடுத்தார்.

சௌமியா திவாரி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஹனா பேக்கர், க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ், அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் நியாம்  ஹொலண்ட் (10), ரியானா மெக்டொனல்ட் கே (19), அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் (11), சொஃபியா ஸ்மேல் (11) ஆகிய நால்வர் மாத்திரமே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். 

இங்கிலாந்து வீராங்கனைகள் அனைவரும் தவறான அடி தெரிவுகள் காரணமாக விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

இந்திய பந்துவீச்சில் டிட்டாஸ் சாது 4 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பர்ஷவி சொப்ரா 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ச்சனா தேவி 3 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும கைப்பற்றினர். அத்துடன் சோனம் யாதவ், மன்னாத் காஷியப், ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: டிட்டாஸ் சாது, தொடர்நாயகி: க்றேஸ் ஸ்க்ரிவென்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்