கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றோமா ?  

Published By: Nanthini

29 Jan, 2023 | 10:37 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பதாக இலங்கை அரசியலில் எவரும் எதிர்பாராத சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் மலையக அரசியலில் இடம்பெற்ற பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம், இ.தொ.காவின் தலைவரும் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பு.  

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் பலருக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இறுதியாக 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்  இ.தொ.கா ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டது.

அதற்கு பிறகு மகிந்தவுடன் உறவை வளர்த்துக்கொண்ட ஆறுமுகன் தொடர்ச்சியாக மகிந்தவுடனேயே இருந்தார். அந்த நட்பு 2020 தேர்தலிலும் தொடர்ந்தது. 

இ.தொ.கா மொட்டு சின்னத்தில் அவ்வாண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. 

ஆறுமுகனின் திடீர் மறைவால் அவருக்குப் பதிலாக அவரது மகனும் அப்போதைய இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளராகவும் விளங்கிய ஜீவன் தொண்டமான் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். 

வயது மற்றும் அரசியல் அனுபவங்களின் அடிப்படையில் அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று கிடைத்தது. ஆனால், 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மலையகத்துக்கு கிடைத்துவந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி முதன் முறையாக கிடைக்காமல் போன காலகட்டமும் மொட்டு ஆட்சியில் ஏற்பட்டது. 

ஜீவனுக்கு கிடைத்த இராஜாங்க அமைச்சின் முழுமையான அதிகாரம் பிரதமராக விளங்கிய மகிந்த வசமிருந்தது. 

ஆனால், அவரும் கூட மலையக சமூகம் தொடர்பில் காத்திரமாக செயலாற்றவில்லை. அதை விட ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மலையகத்தை பற்றி வாய் திறக்கவும் இல்லை. 

தேர்தல் கால வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டன. இறுதியாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022ஆம் ஆண்டு மொட்டு அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் உச்சத்தால் வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமா செய்த ஜீவன், மகிந்தவுடனான 17 வருட அரசியல் உறவு முடிவுக்கு வந்தது என அறிவித்தார். 

நாட்டின் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் தற்போது ஜனாதிபதி ரணில்  இ.தொ.காவுக்கு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளார். 

ஆகவே மறுபக்கம் ஐக்கிய தேசிய கட்சியுடனான இ.தொ.காவின் 18 வருட பிரிவு தற்போது நட்பாகியுள்ளது. அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதை ஜீவன் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இந்த அமைச்சுப் பதவி கிடைத்ததால் பலரும் இதை தேர்தலை நோக்காகக் கொண்ட பதவி என்று கூறி வருகின்றனர். அதற்கேற்றாற்போல் நுவரெலியா மாவட்டத்தின் மாநகர சபை மற்றும் இரண்டு நகரசபைகளில் இ.தொ.கா யானை சின்னத்திலேயே போட்டியிடுகிறது. 

ஐக்கிய தேசிய கட்சியை ஏதாவதொரு வழியில் தூக்கி நிறுத்திவிட வேண்டும் என்ற ஆசை ரணிலுக்கு இல்லாமலில்லை. ஆகவே, யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கே இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி கிடைத்திருக்கும் அமைச்சுப்பதவி மூலம் குறுகிய காலத்தில் மலையக சமூகத்துக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் தான் இ.தொ.கா சவால்களை எதிர்நோக்கியுள்ளது. 

ஏனென்றால், அமைச்சுக்கு நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் தூசு தட்டி எடுக்க முடியாது. அது குறித்து பேசவும் முடியாது. 

அந்த வாக்குறுதிகளை தந்த ஜனாதிபதியும் பிரதமரும் வேறு. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில், பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில் மலையக சமூகத்துக்காக கொண்டு வரப்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் ஜீவன் தாராளமாக பேசலாம். 

அமைச்சுப் பதவி அல்லது பொறுப்புகள் ஊடாக புதிதாக எமக்கு என்ன கிடைத்துவிடப்போகின்றது என்ற கேள்வி கட்சி ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஏனையோரிடமும் எழுவதை தடுக்க முடியாது. 

ஆனால் கடந்த காலங்களில் ஏற்கனவே மலையக சமூகத்துக்கு கிடைத்தவற்றின் மூலம் என்ன பயன்கள் கிடைத்தன என்ற கேள்விகளே இங்கு முக்கியமானவை. 

மேலதிக பிரதேச செயலகங்கள்

நுவரெலியா மாவட்டத்துக்கு முன்மொழியப்பட்ட மேலதிக பிரதேச செயலகங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தும், அவை ஏன் இன்னும் அமுல்படுத்தப்படாமல் உள்ளது என்பது    குறித்து மாவட்டத்தின் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில், மாவட்ட செயலாளரிடம் நேரடியாக இது குறித்து ஜீவன் கேள்வி எழுப்பலாம். அது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கலாம். 

மலையக அதிகார சபையை வலுவூட்டல்

மலையக சமூகத்துக்கென கொண்டுவரப்பட்ட மலையக அதிகார சபை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமாகும். அதற்கு நிதி உருவாக்கம் செய்வது தொடர்பில் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்கலாம். மலையக சமூகத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கத்தின் நிதியை நம்பிக்கொண்டிராமல் இருப்பதற்கும் செயலிழந்து கிடக்கும் மலையக அதிகார சபையை வலுவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.  

மலையகம் – 200 அனுஷ்டிப்பு

மலையகம் – 200 நிகழ்வுகள் குறித்து பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சமூகத்தின் பங்களிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கூறியுள்ளார். இதை ஒரு தேசிய நிகழ்வாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

ஆனால் அது குறித்து அமைச்சரவையில் பேசுவதற்கு இந்த சமூகம் சார்பாக அப்போது எவரும் இருக்கவில்லை. ஆனால் இப்போது அமைச்சுப்பொறுப்பு இந்த சமூகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கலாம். 

அவ்வாறு இடம்பெற்றால் ஜனாதிபதி உட்பட அமைச்சரவையின் ஏனைய பிரமுகர்களின் உள்ளக்கிடங்கை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அதே வேளை, மலையக சமூகம் தொடர்பில் இவர்கள் என்ன மதிப்பை கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படும்.

செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்

செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் வரும் ஹட்டன், பூல்பேங் தொழிற்பயிற்சி நிலையம், நோர்வூட் மைதானம், ரம்பொடை கலாசார நிலையம் மற்றும் நாடெங்கிலும் உள்ள சுமார் 45 பிரஜா சக்தி நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து புதிதாக ஒன்றும் கூறவேண்டிய அவசியமில்லை. மன்றத்தின் கீழ் வரும் நான்கு அமைப்புகளும் சிறப்பாக செயற்பட நன்கொடைகள், வெளிநாட்டு உதவிகள் அல்லது ஏதாவதொரு வழியிலான நிதி உருவாக்கத்துக்கு (Fund Generation) வழிசமைக்க வேண்டும்.  

கடந்த காலங்களில் இந்த நான்கு அமைப்புகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேதனம் கொடுக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். 

பூல்பேங் தொழிற்பயிற்சி நிலையத்தின் கற்கைநெறிகளை மேம்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை கிரமமாக முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு இந்த அமைச்சுக்கு உள்ளது. 

இவை அனைத்தும் ஏற்கனவே எமது சமூகத்துக்கு கிடைக்கப்பெற்ற வளங்களாகும். அதை பயன்படுத்தி எந்தளவுக்கு பயன்களை பெற்றிருக்கிறோம் அல்லது பெறப்போகின்றோம் என்பதை நிபுணத்துவம் மிக்கவர்கள் அல்லது துறை சார்ந்தவர்களை கொண்டே ஆராய வேண்டும். 

இதற்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினைகள், தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் போன்றவற்றை தொழிற்சங்க ரீதியாகவே அணுக வேண்டியுள்ளது. அதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் அனுபவங்கள் மிக முக்கியமானவை. அதேவேளை ஜீவனுக்குக் கிடைத்திருக்கும் நீர் வழங்கல் அமைச்சு தேசிய ரீதியாக செயற்பட வேண்டிய ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சாகும். 

இலங்கையில் நீரேந்து பிரதேசமாக மலையகமே உள்ளது. ஆதலால் இங்கு அந்த பிரச்சினைகளே இல்லை என்று கூற முடியாது. உள்ளூராட்சி சபைகளினூடாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடாகவும் மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் மலையக பிரதேசங்களில் குடிநீரை பெறுகின்றார்கள் என்று கூறமுடியாது. 

உதாரணமாக இ.தொ.காவின் கோட்டையாக கூறப்படும் கொட்டகலை நகரிலேயே சுத்தமான குடிநீரை ஐம்பது வீதமான மக்கள் பெறுகின்றார்களா என்பது சந்தேகமே. உரிய குடிநீர் விநியோக கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால், குடிநீர் விநியோகத்துக்கான விண்ணப்பங்கள் சுமார் ஆயிரம் வரையில் நிலுவையில் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது. இது நுவரெலியா மாவட்டத்தின் பல நகரப் பகுதிகளிலுள்ள பிரச்சினைகளாகும். 

பொதுமக்களுக்கு உயர்தர சுத்தமான குடிநீரை வழங்குவதே நமது நோக்கமாகும் என கடந்த வாரம் நீர் வழங்கல் அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஜீவன் உரையாற்றியிருந்தார். அந்த பணியை அவர் கொட்டகலையிலிருந்தே ஆரம்பிக்கலாமே! 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சித்தாந்த போர்

2024-04-20 11:28:47
news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16