13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் மலையக சமூகத்துக்கு அவசியமாகவுள்ளது - செந்தில் தொண்டமான்

Published By: Nanthini

29 Jan, 2023 | 10:39 PM
image

(நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன்)

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாகவோ கட்டம் கட்டமாகவோ அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கின்றார். 

தற்போதைய சூழ்நிலையில் மலையக சமூகம் தனது பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் ரீதியான இருப்பை தக்க வைத்துக்கொள்ள இச்சட்டம் மிக அவசியமாகவுள்ளது. இதற்கு அனைத்து மலையக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். 

சமகால அரசியல் நிலைமைகள், உள்ளூராட்சி மன்ற தேர்தல் களம் தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இ.தொ.காவின் நிலைப்பாடு என்ன?

நாம் அதை முழுமையாக வரவேற்கின்றோம். மாகாண சபை முறைகள் கொண்டுவரப்பட்டு 35 வருடங்கள் கடந்த நிலையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்கும் வகையில் அதில் சில சரத்துகள் அமுல்படுத்தப்படாமை வேதனையளிக்கும் செயல். 

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகள் முறை கொண்டுவரப்பட்டாலும், அப்பிரதேசத்துக்கு வெளியே மலையக பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்துவரும் மலையக சமூகத்தினர் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு இம்முறை பெரிதும் உதவியது. அதன் மூலம் ஓரளவுக்கேனும் தமது உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வளங்களை அவர்களுக்கு பெறக்கூடியதாக இருந்தது. வடக்கு, கிழக்கில் அம்மக்கள் முழுமையாக தமது மாகாண சபை மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

அவர்களுக்கு காணி உரிமைகள் உட்பட ஏனைய சலுகைகள் ஏலவே உள்ளன. ஆனால், மலையக சமூகத்தினர் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் செறிவாகவும் தென் மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் சிறிய பரப்பினராகவும் வாழ்ந்து வருகின்றனர். 

நான் மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எமது மக்களுக்கு இல்லை. அவ்வாறு பிரதிநிதி ஒருவரை தெரிவுசெய்யும் வாக்காளர்கள் குறித்த மாவட்டங்களில் இல்லை.

ஆனால், மக்கள் சனத்தொகைக்கு ஏற்ப அவர்கள் தமது பிரதிநிதிகளை மாகாண சபைகளுக்கு அனுப்பலாம். எனினும், தற்போது மத்திய அரசாங்கம் பல வழிகளில் மாகாண சபைகளை கட்டுப்படுத்தி வருகின்றது. ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, மாகாண சபைகள் சுயமாக இயங்கும் ஜனநாயக தன்மையைப் பெறலாம்.

இதை அமுல்படுத்துவதற்கு மலையக சமூகம் என்ன செய்ய வேண்டும்?

ஆரம்ப காலங்களில் அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் அவரவர் கொள்கைகளில் தனித்து நின்று செயலாற்றிய சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், இப்போது நிலைமைகள் அப்படியில்லை. 

நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. இங்கு தனித்து நின்று செயற்பட முடியாது.

மக்கள் மற்றும் அவர்கள் தெரிவுசெய்யும் பிரதிநிதிகள் ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று இதை அமுல்படுத்துவதற்குரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். ஆனாலும், இதுவரை 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மலையக கட்சிகள் திறந்த மனதுடன் பேச முன்வரவில்லை.

இ.தொ.காவுக்கு கிடைத்துள்ள கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பு குறித்து அதன் தலைவர் என்ற வகையில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இதை இ.தொ.காவுக்கு கிடைத்த அமைச்சுப்பதவி என்பதை விட அக்கட்சி மூலம் மலையக சமூகத்துக்கு கிடைத்த அமைச்சு என்றே கூற வேண்டும். இது சமூகத்துக்கு கிடைத்த வளம். இராஜாங்க அமைச்சராக ஜீவன் சிறப்பாக செயற்பட்டதை அவதானித்தே அவருக்கு ஜனாதிபதி சமூகம் சார்ந்த பொறுப்பை மட்டுமின்றி நீர் வழங்கல் என்ற தேசிய ரீதியாக செயற்படக்கூடிய அமைச்சையும் வழங்கியுள்ளார்.

மலையக சமூகத்துக்கு கபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி ஒன்றாவது கட்டாயம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஏனென்றால், அதை இந்த நாட்டில் மலையக மக்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரமாகவே பார்க்கின்றேன். சில முக்கியமான முடிவுகளை அரசாங்கம் எடுக்கும்போது அதில் எமது சமூகத்தின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். 

கடந்த காலங்களில் இ.தொ.கா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதையும் தாண்டி எமது சமூகத்துக்கான உரிமைகளை நாம் பெற்றிருக்கின்றோம்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்காகவே அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றதே?

இல்லை, இதை நான் மறுக்கிறேன். உள்ளூராட்சி சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கே முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிங்கள மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் பிரதேசங்களிலுள்ள சபைகளில் எமது உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆகவே, அங்கு நாம் அவர்களோடு இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி, யானை சின்னத்தில் எமது உறுப்பினர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. 

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழ்ந்து வரக்கூடிய பகுதிகளில் எம்மோடு இணைந்து போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்கள், சேவல் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றியீட்டினர் என்பது முக்கிய விடயம். இதற்கும் அமைச்சுப் பதவிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட சில உறுப்பினர்களுக்கும் இம்முறை போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளனவே?

சில உறுப்பினர்கள் இழைத்த தவறுகளுக்கு கட்சியின் ஒழுக்காற்று குழுவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இதற்கு அவர்கள் மேன் முறையீடும் செய்திருந்தனர். இது குறித்து ஆராய, நாம் எமது கட்சியின் சட்ட வல்லுநர்களுக்கு பொறுப்பை ஒப்படைத்திருந்தோம். உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக முறைப்பாடு செய்யப்பட்டு அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் என நீதிமன்றம் உறுதி செய்தால், நிச்சயமாக யாராக இருந்தாலும், கட்சியின் உறுப்பினராக இருக்க முடியாது. ஆனால், இங்கு அப்படி இல்லை. 

சில உறுப்பினர்களுக்கு நாம் அவர்களின் தவறுகளை திருத்திக்கொள்வதற்கு கால அவகாசத்தை வழங்கியிருந்தோம். எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. இது எமது கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முடிவு மட்டுமின்றி, தேசிய சபையும் எடுத்த முடிவுகள். அதன்படியே சில உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்ந்தும் இருக்கும்.

“மலையகம் 200” என்ற விடயத்தை தேசிய நிகழ்வாக அனுஷ்டிப்பதற்கு அமைச்சரவையில் ஒரு பத்திரத்தை ஏன் சமர்ப்பிக்க முடியாது?

நிச்சயமாக அது குறித்து நாம் கலந்துரையாடி வருகிறோம். ஒரு விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54