ஜனாதிபதி ரணில் அரசியல் நாடகமாடுகிறார் : மாகாண சபைகளை முடக்கியவரே அதிகாரங்களை வழங்குவதெனக் கூறுவது வேடிக்கை - தயான் ஜயதிலக்க

Published By: Digital Desk 5

28 Jan, 2023 | 04:37 PM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைகளின் இயக்கத்தை முழுமையாக முடக்கிவிட்டு, அவற்றுக்கு அதிகாரங்களை வழங்கப்போவதாக கூறி அரசியல் நாடகமாடுவதாக கலாநிதி தயான் ஜயத்திலக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 13ஆவது திருத்தச்சட்த்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்துவெளியிடும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக, இருந்தபோதே, அவருடைய அனுசரணையுடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

குறித்த பிரேரரணை நிறைவேற்றப்பட்டதன் காரணத்தினாலேயே தற்போது வரையில மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி அச்செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வெளிப்படையாக கூறுவது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், அரசியலமைப்பில் காணப்படுகின்ற விடயமொன்றை முன்னெடுப்பதற்கு இவ்வளவு பிரதிபலிப்புக்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

மேலும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு, அல்லது நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அப்பால் மாகாண சபைகளின் இயக்கத்தினை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தமுடியாதவொரு நிலைமையை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் ஜனாதிபதி ரணில் தான். 

அவ்வாறு செயற்பட்ட ஒருவர் மாகாண சபைகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு அதிகாரங்களை வழங்குவதால் ஏற்படப்போகின்ற பயன்கள் என்ன? 

ஆகவே, அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

பாராளுமன்றத்தில், தேர்தல் முறைமை திருத்தம் சம்பந்தமான பிரேரணை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தலாம். ஆகவே அதற்காக பாராளுமன்றத்தின் ஊடான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதே அவர் முன்னுள்ள விடயமாகின்றது. 

அவ்வாறிருக்கையில், செயற்படாத மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கப்போவதாக கூறி, தென்னிலங்கையில், சிங்கள, பௌத்தத்தை மையப்படுத்தி அரசியல் செய்யும் தரப்பினர்களுடன் முரண்படுவதால் எவ்விதமான பயன்களும். 

உண்மையில், செயற்படாத மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கப்பேவதாக தொடர்ச்சியாக கூறுவதால், தென்னிலங்கையில் மீண்டும் 13இற்கு எதிரான கோசங்களே வலுப்பெறும். 

அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது ஜனாதிபதி ரணில் தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்வதற்கான அரசியல் நாடகமாடுகின்றாரா என்று கேள்வி எழுகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்