எனது அம்மாவை அவதானித்த பிறகே நடித்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published By: Nanthini

26 Jan, 2023 | 05:55 PM
image

"எனது அம்மாவின் சமையலறை நடவடிக்கைகளையும், அவருடைய நாளாந்த செயல்பாடுகளையும் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உற்று அவதானித்த பிறகே 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்னும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இந்த திரைப்படம் அதே பெயரில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஆர். கண்ணன் இயக்கியிருக்கிறார். 

இதில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நந்தகுமார், கலைராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜெர்ரி சில்வர்ஸ்டார் வின்சென்ட் இசையமைத்திருக்கிறார். 

ஆர்டிசி மீடியா எனும் நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை துர்கா ராம் சவுத்ரி, நீல் சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், 

''மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என இயக்குநர் ஆர். கண்ணன் எம்மை தொடர்பு கொண்டு கேட்டபோது, முதலில் தயக்கம் தெரிவித்தேன். 

அத்துடன் மறு உருவாக்கம் என்றால் ஒப்பீடு வரும் என்றேன். பிறகு அவர் படத்தை பாருங்கள். உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் மறு உருவாக்கம் செய்யலாம் என்றார். 

பிறகு தொடர்ந்து எனது அம்மாவை சமையலறையிலும், அவருடைய நாளாந்த செயல்பாடுகளையும் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அவதானித்தேன். அவர் இதே பணியை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக செய்து வந்ததை நான் இதுவரை கவனிக்கவே இல்லை. 

உடனடியாக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்துவிடுகிறது. இதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்'' என்றார்.

இதனிடையே இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' எனும் இந்த திரைப்படம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right