(எம்.மனோசித்ரா)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழுவிற்குள் பிளவுகள் காணப்படுவதாகவும் , தேர்தல் குறித்த தீர்மானங்கள் ஒருமித்து எடுக்கப்படுவதில்லை என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஆணைக்குழுவிற்கும் அவ்வாறு பிளவுகள் எவையும் இல்லை என்று அதன் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இவ்வாறானதொரு பின்னணிலேயே உறுப்பினர் சார்ள் தனது இராஜினாமா கடிதத்ததை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவும் தனது இராஜினாமாவை அறிவிக்கவுள்ளதாக பரவி வரும் வதந்திகளை அவர் மறுத்துள்ளார். 'இவ்வாறான வதந்திகளுக்கு செவிசாய்ப்பது நேரத்தை வீணடிப்பதாகும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் அது ஆணைக்குழுவின் தேர்தல் நடத்தும் திறனைப் பாதிக்காது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகும் பட்சத்தில் ஆணைக்குழுவால் அதன் செயற்பாடுகளை தொடர முடியாது என்றும் , இது உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் ஊகங்கள் பகிரப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் இவ்வாறு உறுப்பினரொருவர் பதவி விலகுவதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
இராஜினாமாக்கள் தேர்தல் ஆணைக்குழுவை வலுவிழக்கச் செய்யுமா என்பதற்கு இல்லை என்பதே பதில் என்றும், ஆணைக்குழுவில் நடப்பெண் மூன்றாகக் காணப்பட்டால் அதன் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்றும் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் தேர்தல் ஆணைக்குழு சட்டத்தின் 104.(1). உறுப்புரைக்கமைய தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கான நடப்பெண் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
(2) (அ) உறுப்புரைக்கமைய ஆணைக்குழுவின் தலைவர் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார். மாறாக ஏதேனுமொரு கூட்டத்தில் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்றால், அங்கிருந்த உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
(ஆ) பிரிவிற்கமைய அந்தந்த முடிவுகள் எடுக்கப்படும் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களித்த உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆணைக்குழுவின் முடிவுகள் எடுக்கப்படும். மேலும் சமநிலை வாக்குகள் பெறப்பட்டால் , கூட்டத்தின் தலைவருக்கு வாக்களிக்க முடியும்.
(3)ஆம் உறுப்புரைக்கமைய ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் ஏதேனும் வெற்றிடங்கள் காணப்பட்டாலும் , ஆணைக்குழுவிற்கு அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரம் உண்டு.
அத்தகைய பதவி வெற்றிடம் ஏற்பட்டாலோ , உறுப்பினரை நியமிப்பதில்தவறுகள் காணப்பட்டாலோ, ஆணைக்குழுவின் எந்தவொரு நடவடிக்கையும் செல்லுபடியற்றதாகாது. எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவின் முடிவுகளை பலவீனமானதாகக் கருத முடியாது என்றும் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM