(சதீஸ்)

வவுனியாவில்  உணவகமொன்றின் உரிமையாளரின் மகனை தாக்கிய சம்பவம் தொடர்பில் உணவகத்தில் இரவு கடமையில் பணியாற்றியவர்கள் மற்றும் அதில் ஒருவரின் சகோதரர் உட்பட  4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 உணவகத்தில் இரவுக்கடமையில் பணியாற்றிய  3 பேர் மற்றும்  பணியாற்றியவர்களில் ஒருவரின் சகோதரர் ஆகிய நால்வரையும்  விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்து, விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதில் சந்தேகத்தில் பெயரில் பஸ் சாரதி, நடத்துநர், ஆகிய இருவரையும் கடத்துதலுக்கு பயன்படுத்திய பஸ் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் பிரபல உணவகத்தின் உரிமையாளரின் மகன் தனது உணவகத்தில் இருந்தபோது ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து இரவு குறித்த இளைஞன் இரண்டாம் குறுக்குத் தெருவிலிருக்கும் தனியார் பஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த 8 பேரடங்கிய குழுவினர்  இளைஞர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டதுடன் இளைஞன் மீது டீசலை ஊற்றியுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான இளைஞனை பஸ் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சூடுவெந்தபுலவிற்கு சென்றுள்ளனர்.  

இச்சம்பவத்தினை அறிந்த குறித்த இளைஞனின் சகோதரன் குறித்த பஸ் வண்டியினை பின்தொடர்ந்து பஸ்ஸில் ஏறியபோது  தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான  தர்மலிங்கம் சுபராஜ் வயது (26) பூந்தோட்டம், ஸ்ரீநகரில் வசித்துவரும்  இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.